879.
புனைமலர்மென் கரங்களினாற் போற்றியதா
                            தியர்நடுவண்
மனையகத்து மணிமுன்றின் மணற்சிற்றி
                            லிழைத்துமணிக்
கனைகுரனூ புரமலையக் கழன்முதலாப் பயின்றுமுலை
நனைமுகஞ்செய் முதற்பருவ நண்ணினளப்
                            பெண்ணமுதம். 14

     879. (இ-ள்.) அப்பெண் அமுதமாகிய அந்தப் பெண்;
போற்றிய தாதியர் நடுவண் - தம்மைப் பாதுகாக்கும் தாதியர்கள்
சூழ அவர்களுக்கிடையில்; மனையகத்து மணிமுன்றில் -
மனையினுள் அழகிய முற்றத்தில்; புனைமலர் மென் கரங்களினால் -
புனைந்த மலர்போன்ற மெல்லிய கைகளினால்; மணற்சிற்றில்
இழைத்தும் - மணலினாற் சிறு வீடு கட்டியும்; மணி........பயின்றும் -
பரல் மணிகள் ஒலிக்கும் பாதச் சிலம்புகள் அசைந்தோசை
செய்யும்படி கழல் ஆடுதல் முதலாகிய விளையாடல்களைப்
பயின்றும்; முலை......நண்ணினள் - முலைகள் அரும்புபோலத்
தோன்றும் பேதைப் பருவத்தை அடைந்தனள். 14

     879. (வி-ரை.) கரங்களினால் இழைத்து எனக் கூட்டுக.
போற்றுதல்
காப்பாற்றுதல் - புறத்தருவார் (877) என்றது காண்க.
மணற்சிற்றில் இழைத்தும்
என்றதனால் சிற்றிலிழைக்கும் வயது
நிரம்பிவரும் அளவின் வளர்ச்சி குறிக்கப்பட்டது. இது ஈராண்டின்
மேல் மூவாண்டுவரை நிகழ்வதாமென்ப.

     மணி கனைகுரல் நூபுரம் - உள்ளே பரலாக மணிகளை
இட்டு வைத்தமையால் அவை சத்தித்தற் கிடமாகிய சிலம்புகள்.

     நூபுரம் அலையக் கழன் முதலாப் பயின்று - கழங்கு
முதலிய ஆடல்கள் பயிலும் பருவமாதலின் அவற்றைப்
பயிலும்போது பல இடமும் அடிபெயர்த்து வரவேண்டுதலின்
நூபுரங்கள் அலையப் பயின்று என்றார்.

     கழல் முதலாப் பயின்று - கழங்கு முதலாக உள்ள
ஆடல்களைப் பயின்று முதலா - அம்மானை - பந்து முதலாயின.
"தருந்தடக்கை முத்தழலோர் மனைகடொறு மிறைவனது தன்மை
பாடிக், கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங்
கழுமலமே" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங் காண்க.
இப்பருவம் ஐந்து வயதளவில் உள்ள தென்ப.

     முலை நனைமுகஞ்செய் முதற்பருவம் - முலைகள்
தோன்றத் தொடங்கி அரும்பும் பேதைப் பருவம். நனைமுகம்
செய்தல்
என்பது பூவிற்கு அரும்புபோலமுன் காட்டத்
தொடங்குதல். ஒளிநுசுப்பை முலைவருத்த (880) என முலைகள்
பெருத்த நிலையைப் பின்னர்க் கூறுவதனால் இங்கு அவை
அரும்பும் பேதைப் பருவம் முற்றுகின்ற நிலை குறித்தது. "கதிர்
முலைகள் எவ்வநோய் செய்யும் தொழில் பூணாள் - காமனூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள்" என்று ஞானவுலாவினுட்
சேரமான் பெருமாணாயனார் இப்பருவத்தைப் பற்றி அருளியவை
பார்க்க. முதற்பருவம் - பருவமேழனுள் முதலாவதாக வைத்
தெண்ணப்படும் பேதைப்பருவம். இப்பருவம் ஏழு வயது அளவில்
நிகழ்வது. இவ்வாறன்றி இதனை மறுத்து முதற் பருவம் என்றதற்கு
ஒப்பற்ற பருவம் என்று பொருள் கூறுவர் மகாலிங்கையர். அதன்
பொருத்தம் ஆராயத்தக்கது.

     பெண் அமுதம் - அமுதம் சாதலை நீக்கி மீள
உயிர்ப்பிக்கும் தன்மையுடையது. இப் பெண்மணியாரின்
அரியப்பட்ட குழல் முன்போலப் புனைந்து மீள வுளதாயிற்று
என்பது சரிதம். இனி இவரது கணவனாராகும் ஏயர்கோனாரும்
போக்கிய உயிரை மீளப் பெறுகின்றார். இவரால் தந்தையாராகிய
மானக்கஞ்சாற நாயனார் "பிழைக்கு நெறி உதவப்" பெற்று இறவாத
- சாவாத - மீளாநெறியினை அடைந்தனர். இவற்றையெல்லாம்
உள்ளடக்கி இங்கு இறவாமை தரும் இறைவனுக்குரிய அமுத
பதத்தால் உருவகமாக்கி உரைத்தனர். 14