880.



உறுகவின்மெய்ப் புறம்பொலிய ஒளிநுசுப்பை
                           முலைவருத்த
முறுவல்புற மகலாத முகிண்முத்த நகையென்னும்
நறுமுகைமென் கொடிமருங்கு னளிர்ச்சுருளந்
                          தளிர்ச்செங்கை
மறுவில்குலக் கொழுந்தினுக்கு மணப்பருவம்
                            வந்தணைய,
15

     880. (இ-ள்.) உறு......பொலிய - பொருந்தும் அழகு
திருமேனியின் வெளியில் விளங்க; ஒளி.......வருத்த - மின்போலும்
இடையைப் பெருத்த தனங்கள் வருத்தம் செய்ய; முறுவல்....நறுமுகை
- இளஞ்சிரிப்புப் புறத்தே வெளிப்படாதனவும் முகிழ்த்த முத்தினைப்
போன்றனவும் ஆகிய பற்களாகிய நறிய அரும்பினையும்;
மென்கொடி மருங்குல் - மெல்லிய கொடிபோன்ற இடையினையும்;
நளிர்ச்சுருள் - குளிர்ந்த சுருண்ட கூந்தலினையும்; அம்தளிர்ச்
செங்கை - அழகிய தளிர் போன்ற சிவந்த கையினையும் உடைய;
மறுவில்.......அணைய - குற்றமில்லாத குலத்தின் எழுந்த கொழுந்து
போன்ற அப்பெண்ணுக்கு மணஞ்செய் பருவம் வந்து பொருந்த, 15

     880. (வி-ரை.) உறுகவின் - மிகப் பொருந்தத்தக்க
பெண்மை நலன். மேலே சொல்லியவாற்றால் வளர்ந்து பொருந்தும்
என்றலுமாம். மெய்ப்புறம் பொலிய - உடம்பின் புறத் தோற்றத்தில்
விளங்க. அக விளக்கமாகிய மேன்மையை வரும்பாட்டிற்
கூறுகின்றாராதலின் அதனைக்குறிக்க இங்குப் புறம்பொலிய
என்றார்.

     ஒளிநுசுப்பை முலை வருத்த - நுசுப்பு. இடை,
மின்போலும் இடை என உவமை கூறப்படுதலால் ஒளிநுசுப்பு
என்றார். முலைகளின் பெருமையும் இடையின் சிறுமையும் ஒருங்கு
தேற்றம் பெற்று விளங்கும் மங்கைப்பருவமாதலால் இங்கு
அவ்விரண்டினையும் சேர்த்து முதலில் வைத்துக் கூறினார்.
பருவத்துக்கேற்றபடி முலையின் சிறப்புக் கூறியபடி. பெண்மை
நலன்களின் பிற கூறுகளை எல்லாம் ஒருசேரப் பின் வைத்துக்
கூறுதலும், முலைகளின் செயலைத் தனியாகப் பிரித்து முன்வைத்துக்
கூறுதலும் இதுபற்றியேயாம். அன்றியும், ஒளி நுசுப்பு, முத்த நகை,
கொடி மருங்குதல், நளிர்ச்சுருள், தளிர்ச்செங்கை என்று பிற
உறுப்புக்களுக்கெல்லாம் உரிய ஒவ்வோர் அடைமொழி தந்து
சிறப்பித்தோதிய ஆசிரியர், முலைக்கு அடைமொழியில்லாது வாளா
கூறியதும், பெண்மை நலன்களுள் அதன் தனிச் சிறப்பியல்பு
குறிப்பதாம் என்க. "மகளிர்க்கு உறுப்புட் சிறந்த வுறுப்பாகிய
முலைக் குவமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடை
கொடுக்கக்கடவதன்றோ வெனின், அடைகொடுப்பிற்
பிறவுறுப்புக்களுடன் இதனையு மொப்பித்ததாம். ஆதலான் இதற்
கடைகொடாமையே முலைக்கேற்றத்தைவிளக்கி நின்றது. அஃது

முற்கூறியவகையில் திருக்கோயில், திருவாயில், திருவலகு
என்றவற்றிற்கு நாயகராகிய நாயனாரைத் திருநாயனார் என்னாதது
போலவெனக் கொள்க" என்று "திருவளர்தாமரை" என்ற
திருக்கோவையாரின் கீழ்ப்பேராசிரியர் உரைத்தவாற்றா லறிக.

     முறுவல் புறமகலாத நகை - முகிண்முத்தநகை என்று
கூட்டுக. புறம்அகலாத முறுவல் - வாயினைவிட்டு வெளித்
தோன்றாது உள்ளடங்கிய புன்னகை. நகை - பல். முகிண்
முத்தநகை
- கதிர்முகிழ்த்த முத்துப் போன்ற பல். நகை -
மருங்குல். சுருள் - கை என்பன அந்தந்த அடைமொழிகளால்
பருவத்துக் கேற்றபடி தத்தம் அழகு நிரம்பிய தன்மை குறித்தன.
எண்ணும்மைகள் தொக்கன. இவற்றை உடைய கொழுந்து என்க.
முகைபோன்ற பல்லினை முகை என்றார்.

     மணப்பருவம் - பனிரண்டாண்டு நிரம்பும்பருவம்.
மங்கைப்பருவம் என்பர். இதுவே மணஞ்செய் பருவ மென்பது
முந்து நூல்களுட்கண்ட முறை. இது போலவே ஆண் மக்களுக்கும்
மணப்பருவம் 16வது வயதிற் பேசப்படும் 152 பார்க்க.

     குலக்கொழுந்து - குலமாகிய கொடியின் உச்சியில்
விளங்கும் மேன்மையும், வயதின் இளமையும்பற்றிக் கொழுந்து
என்றார். கொழுந்தினுக்கு மணப்பருவம் - கொழுந்து பருவம்
பெற்று முற்ற மணம்பெறும். உவமைக்கேற்றபடி பொருந்த உரைக்க
நின்றது காண்க.

     சுருளும் - என்பதும் பாடம். 15