881. திருமகட்கு மேல்விளங்குஞ் செம்மணியின் றீபமெனு
மொருமகளை மண்ணுலகி லோங்குகுல மரபினராய்க்
கருமிடற்று மறையவனார் தமராய கழலேயர்
பெருமகற்கு மகட்பேச வந்தணைந்தார்
                           பெருமுதியோர்.
  16

     881. (இ-ள்.) வெளிப்படை. திருமகளுக்கு மேலாக
விளங்குகின்ற செம்மணியின் விளக்குப் போன்ற ஒப்பற்ற அந்தப்
பெண்மணியாரை, இவ்வுலகில் ஓங்கும் வேளாண் குலத்தில் ஒத்த
மரபில் வந்தவராய்த், திருநீலக்கண்டத்தையுடைய வேதியராம்
சிவபெருமானுக்கு அன்பராகிய வீரக்கழல் அணிந்த ஏயர்கோன்
கலிக்காமனாருக்கு மணம் பேசுவதற்குப் பெருமுதியோர்கள் வந்து
சேர்ந்தனர்.

     881. (வி-ரை.) திருமகட்கு.......தீபம் - உருவாலும்
திருவாலும் ஒளியாலும் அருளாலும் இலக்குமியினும் இவ்வம்மையார்
மிக்கிருப்பர்; திருமகள் தரும் செல்வம் போல அழிந்துபடாது
இவ்வம்மை காரணமாக வரும் செல்வம் இருகுடிக்கும் நித்தியமாகிய
அருட்செல்வமாய் விளங்கிற்று; திருமகள் சிவனடியார் பணி
கேட்டுத்திரியா நிற்க, இவ்வம்மையார் அருணிறைந்த அடியார்க்குத்
துணைவியாராயினர்; மேலும் இவ்வம்மையாரது கற்பின்றிறம்
மழைக்குதவும் தன்மையுடையது என்றிவை முதலிய காரணங்களால்
திருமகட்கு மேல் விளங்கும் என்றார்.

     செம்மணியின் தீபம் - இயற்கையாலும் தீட்டுதல் முதலிய
செயற்கையாலும் மங்காத ஒளியுடையது என்க.

     மகட்குமேல் விளங்கும் மணி என்பதற்கு இவ்வாறன்றி
நான்கனுருபை ஏழனுருபாக்கி மகளின்மேல் - மகளிடத்து -
என்றுகொண்டு மகளிடத்து அணியாக விளங்கும் மணி என்று
உரைப்பாருமுண்டு.

     தீபம் - அன்பின் பெருமையினையும் அருளின்
பெருமையினையும் எடுத்துக் காட்டாக உலகில் விளக்கும்
பொருளென்பார் இவ்வம்மையாரை விளக்கு என்றுவமித்தார்.

     ஒரு மகளை - ஒரு - ஒப்பற்ற. மகள் - இங்குப் பெண்
என்ற மாத்திரையாய் நின்றது. நாயனாரின் என்று வருவித்து அவரது
மகளாரை என்றுரைப்பாருமுண்டு.

     மகளை - மகற்கு - மகட்பேச என்று கூட்டி உரைக்க.
மகற்கு - மணமகனுக்கு. மகட்பேச - மணம்பேச - மணமகளாகக்
கொள்வது பற்றிப் பேச. இதுமரபுவழக்கு.

     ஓங்குகுல மரபினராய் - குலத்தாலும் மரபாலும்ஓங்கி ஒத்து
உள்ளாராய். மரபு - பெரும்பிரிவு. குலம் - அதனுட் சிறுபிரிவு.
குடி - கோத்திரம் - என்பர். நாயனாரை அரசர் சேனாதிபதியாம்
குடி (872) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. சைவ சமய
பரமாசாரியராலும் பாடப்பெற்ற பெருமை பற்றியும் ஓங்கு (குலம்)
என்றார்.

     கருமிடற்று..........தமர் - தமர் - சுற்றத்தாரைக் குறித்துப்
பெரும்பாலும் வழங்கும் இச்சொல் இங்கு அன்புபூண்ட அடிமைத்
திறத்தின் தொடர்பு என்ற அதன் உண்மைப் பொருள் குறித்தது.
தம்மவர் எனற்பாலது தமர் என வழங்குவதாம். தமர் - இது
கிளைப் பொருட்பெயர்ப் பகுபதம். தாம் என்னும் பகுதியும் அர்
என்னும் விகுதியும் பெற்றுத் "தான்றாநா முதல் குறுகும்" என்பதனாற்
பகுதி முதல் குறுகி உடன்மே லுயிர் ஏறி முடிந்தது.
"எம்பிரான்றமரேயோ?" (318), "நங்கள்பிரான் றமர் ஒருவர் என"
(அப்பூதி - புரா - 9) முதலியவை காண்க. தமர் - இங்கு, வழி
வழி யடிமைச்சார்பு குறித்தது. தமராதலின் நம்பிகள் தூது
விட்டமைபற்றிச் சினந்தனர் என்பதும் குறிப்பு.

     மரபினராய்.......தமராய் - ஒத்த குடியும், மரபும், இவற்றிற்கு
மேலாய்ச் சிவனடிமைத்திறமுடைமையும் என்றித்திறங்களை மகட்பேச
வந்த பெருமுதியோர் எடுத்துரைத்தனர் என்றதாம். வரும்பாட்டில்
இதனை மொழிந்த மணத்திறம் என்றது காண்க. 153 - ல்
உரைத்தவையும் பிறவும் பார்க்க.

     கழல் ஏயர் பெருமகன் - கழல் - வீரக்கழல். அரசர்
சேனாதிபதிக் குடியின் அடையாளம் குறித்தது. ஏயர் பெருமகன் -
ஏயர்கோன் என்பது வழக்கு. பெருமகன் - இங்குக் கோன் -
தலைவன் - என்ற பொருளில் வந்தது. ஏயர்கோனார் - (883),
ஏயர்குல மன்னவனார் (900) என்பனவும், பின்னர் அவர் தம்
புராணத்தில் வருவனவும் காண்க.

     ஏயர் - இவரது குடிப்பெயராம். கேகயம் - ஒரு நாடு;
கேகயர் என்பது ஏயர் என்று மருவி வழங்குவதாயிற்றென்பர்
ஆராய்ச்சியாளர். இது குடிப் பெயர் என்பது "ஏயர்குலப் பெருமான்"
(885), "ஏயர் கோக்குடிதான், மன்னி நீடிய வளவர்
சேனாபதிக்குடியாம்" (ஏயர்கோன் - புரா - 5) என்பவற்றானறிக.
இவ்வாறன்றி இதற்குக் கழலேயர் என்பவரது பெருமகனாராகிய
கலிக்காமர் என்ற உரைகள் தவறு.

     பெருமுதியோர் - வயது நிறைந்த அனுபவத்தாலும்,
அறிவாலும் முதிர்ந்தவர். இவர்களே இருதிறத்தார்க்கும்
பொருந்துவனவற்றைத் தக்கபடி எடுத்துரைத்து மணம் பொருந்த
வைக்க வல்லவர்களாதலின் இன்னோரை அனுப்பி மணம் பேசுதல்
முன்னாள் வழக்கு. 153 - 154 பார்க்க. இவர்கள் வயதால்
மட்டுமன்றி அறிவாலும் முதிர்ந்தோர் என்பதனை வந்த
முதறிவோரை
என வரும்பாட்டிற் கூறுவது காண்க.

     மன்னுலகில் - என்பதும் பாடம். 16