882.
|
வந்தமூ
தறிவோரை மானக்கஞ் சாறனார்
முந்தைமுறை மையின் விரும்பி மொழிந்தமணத்
திறங்கேட்டே
"எந்தமது மரபினுக்குத் தகும்பரிசா லேயு" மெனச்
சிந்தைமகிழ் வுறவுரைத்து மணநேர்ந்து
செலவிட்டார். 17 |
(இ-ள்.)
வெளிப்படை. (இவ்வாறு மணம் பேச) வந்த
முதிர்ந்த அறிவுடையவர்களை மானக்கஞ்சாறனார்
முந்தையோர்களது முறைமைப்படி விரும்பி வரவேற்று, அவர்கள்
சொல்லிய மணத்திறம் பற்றிய பேச்சுக்களைக் கேட்டு, "எமது
மரபுக்குத் தகும் தன்மையினால் இது பொருந்துவதாகும்" என்று மன
மகிழ்வுறச் சொல்லித்தமது மகளாரை மணஞ் செய்து கொடுக்க
இசைந்து, அவர்களைச் செல்ல விடுத்தனர்.
(வி-ரை.)
முந்தை முறைமையின் - பழைய உறவினரென்று
அறிந்து அம்முறையினால் என்ற உரை பொருந்தாதென்க.
எந்தமது........ஏயும்
- இது நாயனார் கேட்டுத்துணிந்தவாறு
அவரது மனத்தின் செய்கை. மரபு - வேளாண்
மரபும் அரசர்
சேனாபதிக் குடியும் என்ற உலக உடலின் நிலைவழக்கும்,
அரன்பால் அன்புரிமையுடைய தமராகிய உயிரின் நிலை வழக்கும்
எள்ற இருவகையும் குறித்தது. உள்ளத்தின் குண நிலை நோக்காது
உடலைப்பற்றிய குலம் முதலியவற்றையே நோக்கி மணந்துணிதல்
சிறப்புடைத்தன்று. அதனையும் நோக்காது பண நிலை முதலிய கீழ்
நோக்கங்களையே கொண்டு மண நிகழ்த்தும் இந்நாள் வழக்கு
அறிஞரால் வெறுத்துக் கடியப்படுவதென்க.
சிந்தை
மகிழ்வுற - தமது சிந்தை மகிழ்ச்சி பொருந்த
என்றும், வந்த மூதறிவோரது சிந்தை மகிழ்வுற என்றும், இருதிறமும்
பொருந்த உரைக்க நின்றஅழகு காண்க. மணமிசைந்த மகிழ்ச்சியின்
இருதிறத்தோர் மனமும் கலந்து ஒன்றாதலின் இவ்வாறு ஒரு
தொடரால் இருதிறமும் பெறவுரைத்த குறிப்பும் காண்க.
மணநேர்ந்து
- மணமகன்றிறத்தோர் மணம் பேசவந்து
பெண் கேட்டலும், அதற்கு மகட்பெற்றோர் இசைந்து
செலவிடுத்தலும் மண நிகழ்ச்சியின் இன்றியமையாத முற்பகுதிகள்.
இவையே மணத்தின் தொடக்கம் என்க. உண்மைத் தன்மையில்
இந்நேர்ச்சியே மணம் நிகழ்ந்து முற்றிய செயலாகக் கொள்வதும்
அறிவோர் செயலாம். "எந்தையும் எம்மனையுமவர்க் கெனைக்
கொடுக்க விசைந்தார்கள், அந்தமுறை
யாலவர்க்கே யுரியதுநா
னாதலினால், இந்தவுயி ரவருயிரோ டிசைவிப்பன்" (திருநா - புரா -
32) என்று திலகவதியம்மையார் துணிந்ததும், பின்னர்
வேறெவரையும் மணஞ்செய்ய விசையாது வாழ்ந்ததும் ஆகிய சில
சரிதம் இங்கு நினைவு கூர்தற்பாலது. உலகவழக்கு நிலையிலும் ஒரு
பயன் கருதி ஒருவர் ஒரு பொருளைக் கேட்டலும் கேட்கப் பட்டார்
அதற்கு இசைந்து நேர்தலும், இசைவு என்ற வழக்கு மூலத்தை
முற்றுப் பெறுவிப்பனவாகும் என்ற சட்டமுறையும் காண்க. இதனை
Offer and Acceptance என்பர் நவீனர்.
செலவிட்டார்
- இருக்க வைத்துத் தாமதியாது, சென்று
மணத்துடன் திரும்பும் வகை விடுத்தனர். மணநேர்ந்த பின்
அப்பொருள் காரியத்தில் விரைவின் நிறைவேற்றுதலின் தீவிரம்
குறித்தது. இதனையே "சுபம் சீக்கிரம்" என்ற பழமொழி உணர்த்தும்.
17
|