883.  சென்றவருங் கஞ்சாறர் மணமிசைந்த படிசெப்பக்
குன்றனைய புயத்தேயர் கோனாரு மிகவிரும்பி
நின்றநிலை மையினிரண்டு திறத்தார்க்கு நேர்வாய
மன்றல்வினை மங்கலநாண் மதிநூல்வல்
                          லவர்வகுத்தார்.
18

     (இ-ள்.) வெளிப்படை. சென்றவர்களாகிய முதியோரும்
மானக்கஞ்சாறனார் மணம் இசைந்தனர் என்ற செய்தியைச் சொல்ல,
மலைபோன்ற தோள்களையுடைய ஏயர்கோனாரும், அதுகேட்டு
மிக்க விருப்பத்தினைக் கொண்டு நின்றனராக, இந்நிலையில்
இருதிறத்தவர்க்கும் பொருந்துவதாகிய கல்யாணஞ் செய்தற்குரிய
மங்கல நாளை அதற்குரிய சோதிட முதலிய நூல்களிற் கூர்ந்த
மதிவல்லவர்கள் வகுத்தனர்.

     (வி-ரை.) குன்றனைய புயத்து என்றது அவர் அரசர்
சேனாபதிக்குடியில் வந்த உடல் வல்லமை குறித்தது.
மலைமலிந்ததோள் என்றவிடத் துரைத்தவை பார்க்க.

     விரும்பி நின்ற நிலைமையின் - நாயனார் மணநேர்ந்த
செய்தியைக் கேட்டு மிக விருப்பத்தோடும் அதனை மகிழ்ந்து
உளங்கொண்டனர்; ஆதலின் அந்நிலைமையில்,

     இரண்டு............நாள் - இருதிறத்தார்க்கும் பொருந்துதலாவது
நாட்பொருத்தம், கோட்பொருத்தம், பலப்பொருத்தம், செய்தொழிற்
பொருத்தம் முதலிய பகுதிகள் யாவும் சோதிட நூல்களில்
விதித்தவாறு இருதிறத்தவர்க்கும் நன்மை தருவனவா யிருத்தல்.
மங்கல நாள் - மணநாள். மணத்திருநாள் (158), திருமணஞ்செய்
கலியாணத் திருநாள் (திருஞான - புரா - 1169), நன்னிலைமைத்
திருநாள் (மேற்படி 1172), மணமீக் கூறுநாள் (மேற்படி 1182) என்பன
காண்க.

     இத்தொடரே இரண்டு திறத்து ஆர்க்கும் நேர்வு ஆய
என்று பிரித்து, இவ்வாறு மன்றல் வினை மங்கல நாளினை மதிநூல்
வல்லவர்கள் வகுத்ததனில், அந்நாள் நாயனாரது திருமகளார்க்கு
மன்றல் வினை
நாளாகவும், நாயனாருக்கு நித்திய மங்கலமாகிய
சிவபோகப் பெருவாழ்வு தரும் மங்கல நாளாகவும்,
இருதிறத்தன்மையில் நிகழ்வது என்று குறிப்பாற் பொருள் தருமாறு
நிற்பதும் காண்க. மங்கலமென்பன ஏனையவெல்லாம் உபசார
வழக்கேயா யொழிவன வென்பதும், சிவப்பேறு ஒன்றே
பெருமங்கலமாமென்பதும் உண்மைநூற் றுணிபு. "தொண்டர்க்கு,
மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளச் சிவலோகத், தெங்கள்
பிரான் கணம்புல்ல ரினிதிறைஞ்சி யமர்ந்திருந்தார்" (கணம்புல் -
புரா - 8) என்றதுகாண்க.

     நேர்வாய - உடன்பாடாகிய என்றுரைப்பாரு முண்டு.

     மதிநூல் வல்லவர் - இவர்கள் ஒரு மங்கலங் கருதி
வகுத்தநாளே, அந்த மங்கலத்தோடு யாவரும் போற்றும் மற்றொரு
பெருமங்கலத்துக்கும் ஏதுவாகியதுபற்றி இவ்வாறு கூறினார். இராமன்
முடிசூட நிச்சயித்த நாளே அவன் காடு செல்லவும், பெற்ற தந்தை
உயிர்துறக்கவும் காணுநாளாய் முடியும் நிகழ்ச்சி பற்றி அந்நாள்
வகுத்த நூலோரைக் "கணித மாக்கள்" என்று கம்பர் குறித்ததனை
இங்கு வைத்துக்காண்க. மதிநூல் - நாளும் கோளும் இறைவனாணை
நியதியின்படி நன்மை தீமைகளைச் செய்வன ஆதலின்
அந்நியதியினை அவனாணையால் வகுத்த நூல்களாலறிந்து வகுத்தார்
ஆதலின் மதிநூல் வல்லவர் என்றார்.

     மதிநூல் வல்லவர் - மதியோடு நூலினும் வல்லவர்.
"மதிநுட்ப நூலோடுடையார்க்கு" (திருக்குறள்) என்பதுங் காண்க.

     நேராய - என்பதும் பாடம். 18