884. |
மங்கலமாஞ்
செயல்விரும்பி மகட்பயந்த வள்ளலார்
தங்குலநீள் சுற்றமெலாந் தயங்குபெருங் களிசிறப்பப்
பொங்கியவெண் முளைப்பெய்து பொலங்கலங்க
ளிடைநெருங்கக்
கொங்கலர்தண் பொழின்மூதூர் வதுவைமுகங்
கோடித்தார். 19
|
(இ-ள்.)
வெளிப்படை. மணமகளைப் பெற்ற வள்ளலாராகிய
மானக்கஞ்சாறனார். மங்கலத்துக்குரிய செயல்களைச் செய்ய
விரும்பித், தமது குலத்தினுள்ள மிக்க சுற்றத்தாரெல்லாரும்
பெருமகிழ்ச்சி கொள்ளப் பொங்கிய வெண்முளை சாத்தி, பொன்
கலங்களிடை யிடையே நெருங்க, மணமிகுந்த குளிர்ந்த
சோலைகளையுடைய அந்தப் பழைய நகரத்தைக் கலியாணக்
கோலம் முன் பொருந்தும்படி அலங்கரித்தனர்.
(வி-ரை.)
வள்ளலார் சுற்றத்தாரெல்லாம் - களிசிறப்ப -
முளைப்பெய்து - மூதூர் வதுவைமுகம் - கோடித்தார் என்று கூட்டி
உரைக்க.
மங்கலமாம்
செயல் - கல்யாணத்திற்குரிய செய்தொழில்கள்.
இவற்றில் மணமிசைந்தபின் முதலிற் செய்வது வெண்முளைப்பெய்தல்
என்னும் சிறப்பு. பாலிகைகளில் முளைதெளித்தலாகிய சடங்கு
மணத்திற்கு இன்றியமையாததொன்று. இது மணநாளுக்கு முன்
ஏழாநாளாகிய நன்னாளில் இருதிறத்தார் மனைகளிலும்
செய்யப்படுவது. திருமுளைசாத்து என்றும் வழங்குவர்.
இச்சடங்குதானும் இந்நாளில் மாறி மறந்தொழியக் காண்பது
வருந்தத்தக்கது.
மகட்பயந்த
- 876ல் உரைத்தவை பார்க்க. பிழைக்கு
நெறியினைப் பெற்றோருக்கு உதவும் பெண்கொடி யென்று குறிக்க
இவ்வாறு கூறினார்.
வள்ளலார்
- தற்பயன் கருதாது யாவையு நேர்
கூறுவதன்முன் குறிப்பறிந்து கொடுக்கும் (874) வள்ளன்மையும் பின்
சரித நிகழ்ச்சியும் குறித்தது.
குலநீள்
சுற்றம் எலாம் - குலத்தின் பெருமையும் குலம்
நீண்டு பெருகிய சுற்றமுடைமையும், அச்சுற்றந்தானும் பலவகைப்பட
நிற்பினும் அவை முற்றும் என்பது குறித்தது. "சுற்றத்தாற் சுற்றப்
படவொழுகல்", "செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்"
என்பனவாதி உலகியல் நீதிகள் காண்க. குலச்சுற்றம் நீள் சுற்றம்
என்று தனித்தனிகூட்டி, முன்னையது உடற்கூட்டமாகிய உறவு
என்றும், பின்னையது உயிர்பற்றிய தமராகிய சிவன் அடியார்
கூட்டம் என்றும், இவ்விரண்டும் குறிக்க எலாம் என்றார்
என்று
உரைத்தலுமாம்.
பொலங்கலங்கள்
- பொற்கலங்களில் முளைப்பெய்தனர்
என்க. அணிகளுமாம்.
வதுவைமுகம்
கோடித்தல் - மண அலங்காரம் செய்தல்.
நகரையும், திருமலையையும் அலங்கரிப்பது மரபு. முகம்
கோடிந்தலாவது முன்புற முகப்பில் அணி செய்து பார்வைபெறச்
செய்தல். 19
|