885.  கஞ்சாறர் மகட்கொடுப்பக் கைப்பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ்பெருமை யேயர்குலப் பெருமானுந்
தஞ்சால்பு நிறைசுற்றந் தலைநிறைய முரசியம்ப
மஞ்சாலு மலர்ச்சோலைக் கஞ்சாற்றின்
                        மருங்கணைய,
   20

     885. (இ-ள்.) வெளிப்படை. மானக்கஞ்சாறனார் தமது
மகளைக் கொடுப்ப, அப்பெண்மணியை மனைவியாராக ஏற்றுக்
கைப்பிடிக்க வருகின்ற குறையாப் புகழையும் பெருமையையும்
உடைய ஏயர்குலத் தலைவராகிய கலிக்காமனாரும் தம்முடைய
சால்பு நிறைந்த சுற்றத்தாரெல்லாரும் நெருங்கி நிறைய, இன்னியங்கள்
ஒலிக்க, முகில்கள் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த
கஞ்சாறூரின்
பக்கத்து வர, 20

     885. (வி-ரை.) மகட்கொடுப்ப - தமது மகளை அவர்க்கு
மணமகளாகக் கொடுக்க.

     கைப்பிடிக்க - மணவாட்டியாக - மனைக்கிழத்தியாக -
ஏற்றுக்கொண்டது குறித்துக் கையைப் பிடித்துக்கொள்ள. இதனைப்
பாணிக்கிரகணம் என்பர் வடவர். (பாணி - கை; கிரகணம் -
பற்றுதல்). இது மணத்தில் இன்றியமையாததொரு சடங்கு.

     தாம் சால்புநிறை சுற்றம் - சால்பு - "அன்புநா
ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ, டைந்துசால் பூன்றிய
தூண்" என்பது குறள். பிறர் தீமை சொல்லாராய்ப்,
பணிதலுடைமையின் யாவரையும் கூட்டிக்கொண்டு எக்கருமத்தையும்
முடிக்க வல்லாராய், இன்னா செய்தார்க்கு மினியவே செய்வாராய்,
ஊழி பெயர்ந்தாலும் தாம் பெயரா உறுதிப்பாடுடையவராய் உள்ளாரே
சால்புடையார் எனப்படுவர். இத்தகைய மேன்மைக் குணங்கள்
படைத்தோர்களாகிப் பின்னர், இச்சரித நிகழ்சசியில் இச்சுற்றத்தார்
இறைவனால் நாயனாரது அன்பின் பெருமையைப் புவனங்களில்
ஏறச் செய்யப் பெற்றதனைக் கண்டனர்; கலிக்காமனாரது
திருமணத்தை "உலகெலாந் தலைசிறப்ப" நிகழ்வித்துக் கண்டு களித்த
பெருமையினர்; ஆதலின் இவர்களை இவ்வாறு விதந்து கூறினார்.
மேற்பாட்டில் நாயனார் சுற்றத்தாரையும் இவ்வாறே "தங்குலநீள்
சுற்றமெலாம்" என்றதும் இக்கருத்துப்பற்றியாம். அங்குரைத்ததுபோல
ஈண்டும் சால்பிற் சுற்றம் - நிறைசுற்றம் என்று தனித்தனி
கூட்டியுரைக்க நின்றது காண்க. மேலும் இச்சுற்றத்தார் பலரும்
எயர்கோனார்க்கும் ஆளுடைய நம்பிகளுக்கும் இறைவர் செய்யும்
அருள் வெளிப்பாட்டினைக் காணும் பேறு பெறுவர் என்பதனையும்
இங்குச் சிந்திக்க.

     தலைநிறைதல் - கூட்டமாகச் சேர்தல். மஞ்சுஆலும் -
ஆலுதல்
- அசைதல். ஆலுதல் - ஒலித்தல் என்றலுமாம்.
"ஆலுமறை சூழ்கயிலை" (174) என்றது காண்க.