886. |
வள்ளலார்
மணமவ்வூர் மருங்கணையா
முன்மலர்க்கண்
ஒள்ளிழையைப் பயந்தார்தந் திருமனையி
லொருவழியே
தெள்ளுதிரை நீருலகு முய்வதற்கு மற்றவர்தம்
உள்ளநிலைப் பொருளாய வும்பர்பிரான்
றாமணைவார், 21 |
886.
(இ-ள்.) வெளிப்படை. வள்ளலாரது மணவெழுச்சி
அந்தக் கஞ்சாறூரின் பக்கத்திற் சேர்வதற்கு முன்னர், மலர்போன்ற
கண்ணையுடைய ஒள்ளிய இழையணிந்த பெண்ணைப்
பெற்றவருடைய திருமனையில், ஒருவழியாக, மேற்கிளம்பும்
அலைகளையுடைய கடல்சூழ்ந்த உலகம் உய்வதற்காக, அவருடைய
உள்ளத்தின் நிலைப்பொருளாகிய தேவர்பெருமானார் தாம்
அணைவாராய், 21
886.
(வி-ரை.) வள்ளலார்
இங்கு ஏயர்கோன் கலிக்காமரைக்
குறித்தது. இவரது வள்ளன்மையின் பெருமை இவர்தம் புராணத்துட்
கண்டுகொள்க. இவர், தம்கீழ் வாழும் நாடு மழைபெய்து பஞ்சநீங்கிச்
செழிக்கும்பொருட்டு பன்னிரு வேலி நிலமும், பெருமழை நிற்கப்
பெயர்த்தும் அவ்வாறே பன்னிருவேலி நிலமும் இறைவனுக்குக்
கொடுத்த பெருமை ஆளுடைய நம்பிகளது திருப்புன் கூர்த்
தேவாரத்தா லறியப்படும். சிவபெருமானிடத்துக் கொண்ட அன்பின்
உறைப்பினால், அதற்குப் பழுதுவர நேர்ந்தபோது தம் உயிரையும்
ஈடாக உவந்துகொடுத்த பெருமை இவரது புராணத்திற் பின்னர்க்
காண்க. "ஏத நன்னில மீரறு வேலி யேயர்கோனுற்ற விரும்பிணி
தவிர்த்து" என்ற நம்பிகளது (திருப்புன்கூர்) தேவாரத்தால் இவர்
தமக்கு வந்ததொரு பிணிதவிர்க்கப் பன்னிருவேலி நிலம்
இறைவனுக்குத் தந்தனர் என்றதொரு வரலாறும் காணக்கிடக்கின்றது.
"திருப்புன்கூர்க், கதிக மாயின திருப்பணி யனேகமும் செய்" தார்
என்ற (எயர்கோன் புரா - 7) தனாலும் இவரது சிவப்பணிவிடையின்
வள்ளன்மை புலனாகும். இதுபற்றியே முன்னர் "எஞ்சாத
புகழ்ப்பெருமை" என்றார். "மகட் பயந்த வள்ளலார் என்றது அவரது
மகளாரைத் திருமனைவியாராகக் கொள்ளுதற்கு இவர் ஏற்ற
பெருமையுடையராவர் என்று குறிப்பதற்காம்.
மணம்
- மணஎழுச்சி. மரபு வழக்கு. "அருங்கடி மணம்வந்
தெய்த" (169), "திருமண மெழுந்ததன்றே" (திருஞா - புரா - 1199)
முதலியவை காண்க.
மலர்க்கண்
- கண்ணுக்குத் தாமரை, நீலம் முதலிய
மலர்களை உவமிப்பது மரபு.
ஒன்இழை
- ஒளிவீசும் அணிகள், அவற்றை அணிந்த
பெண்ணைக் குறித்தது. பயந்தார் - பயத்தல் -
பெற்றெடுத்தல்.
திருமனை
- சிவபெருமான் வெளிப்பட எழுந்தருளி வந்து
அருள்விளையாடல் செய்த பெருமை பெற்றதனால் இவ்வாறு
சிறப்பித்தார்.
ஒருவழியே
- உலகம் - ஒருவழியே - உய்வதற்கு -
அணைவாராகிப் - புகுந்தார் (890) என்று கூட்டுக. ஒருவழியே
உய்தலாவது ஐம்புலனும் ஐந்தாகியது வெவ்வேறு வழிகளில்
ஈர்த்துச் செல்ல அவ்வழிச் சென்று மீளமீளப் பிறந்தும் இறந்தும்
உழலாது, சிவன்பாலன்பாகிய சிவநெறி என்ற ஒருவழியே
பிறவாநெறி என்று கண்டு உலகம் அவ்வழிச்சென்று உய்தல் எனப்
பொருள் தந்து நிற்றல் காண்க. ஒருவழியே - அணைவார்
என்று
கூட்டிப், பிறர் எவரும் காணாத - வாராத - ஒருவழியால்
(அதாவது அன்பு வழியால்) அணைவார் என்றுரைப்பாருமுண்டு.
தெள்ளுதிரை
- தெள்ளுதல் - குதித்து மேற்கிளம்புதல்.
தெள்ளுதிரை
- தெளிந்த அலை என்பாருமுளர்.
உள்ள
நிலைப்பொருள் - உள்ளத்தினின்றும் நீங்காது
எப்போதும் நிலைத்த பொருள் - ஏனைய உயிர்ப்பொருள் உயிரில்
பொருள் யாவும் நிலையற்றன என்றும், இறைவனும் அவனடிமைத்
திறமுமே நிலைத்தன என்றும் உணர்ந்து, இந்நாயனார் எப்போதும்
சிவபெருமானைத் தம் உள்ளத்தில் நிலைபெற
வைத்துணர்ந்திருந்தனர். "மெய்ப்பொருளை யறிந்துணர்ந்தார்" (872)
எனத் தொடக்கத்துக் கூறியதனையும், இவ்வாறு சிவனை உள்ள
நிலைப்பொருளாகக் கொள்ளாதார்க்கு "ஒரு மகள் கூந்தல் தன்னை
வதுவைநாள் ஒருவர்க்கீயும்" அரிய பெருஞ்செயல் செய்தலரிதாம்
என்பதனையும் இங்குச் சிந்திக்க.
உள்ளநிலை.....அணைவார்
- இடைவிடாது எப்போதும்
சிந்திக்க உள்ளத்தில் நிலைக்க வைத்திருந்ததனால், அவ்வுரைப்பின்
பயனாய் வெளிப்பட எழுந்தருளி அணைவாராகிப் புகுந்தார்
என்று குறிப்பதற்கு உள்ளநிலைப் பொருளாய என்று
கூறினார்.
"உறவு கோனட் டுணர்வு கயிற்றினால், முறுக வாங்கிக்
கடையமுன்னிற்குமே" என்பது முதலிய தமிழ்மறை அளவைகள்
கருதுக.
உம்பர்பிரான்
- உம்பர்கள் செத்துப்பிறக்கின்ற
தெய்வங்கள்; சிவபெருமான் ஒருவரே ஈறிலாதவர்; ஆதலால்
அவரே ஈறின்மையைத் தரவல்லவர் எனஉணர்ந்ததனால் அவரையே
உள்ளத்தில் நிலைப்பொருளாக வைத்தனர் என்பார் இப்பெயராற்
கூறினார். 21
|