887. முண்டநிறை நெற்றியின்மேன் முண்டித்த திருமுடியிற்
கொண்டசிகை, முச்சியின்கட் கோத்தணிந்த
                                 வெற்புமணி,
பண்டொருவ னுடலங்கம் பரித்தநா ளதுகடைந்த
வெண்டாள மெனக்காதின் மிசையசையுங்
                            குண்டலமும்,   22

     887. (இ-ள்.) முண்டநிறை நெற்றியின்மேல் -
திரிபுண்டரமாகத் திருநீற்றினை அணிந்த நெற்றியின்மேல்;
முண்டித்த.......ஏற்புமணி - மழித்த திருமுடியில் வைத்த சிகையின்
நுனியில் கோத்து அணிந்த எலும்புமணியும்; பண்டொருவன்..........
என - முன் ஒரு காலத்தில் திருமாலின் கழியுடல் முழு
எலும்பினைக் கொண்ட நாளிலே அவ்வெலும்பைக் கடைந்தெடுத்த
வெண்முத்துக்கள்போல விளங்கும், காதின்.......குண்டலமும் -
காதின்கண் அசைகின்ற குண்டலமும், 22

     887. (வி-ரை.) முண்டம் - மூன்று கீற்றாகத்
(திரிபுண்டரமாகத்) தரித்த திருநீறு. 370-ல் உரைத்தவை பார்க்க.
"திருமுண்டம் திட்டமாட்டா தஞ்சுவா ரவரைக் கண்டா லம்மநா
மஞ்சுமாறே" (அச்சப்பத்து -9) என்ற திருவாசகம் காண்க.

     முண்டித்தல் - மயிர் களைதல். வனபஞ் செய்தல் என்பர்
வடவர். முண்டித்த திருமுடியில் கொண்டசிகை - ஏனைய
பகுதிகளில் மயிர் களையப்பட்ட திருமுடியின் உச்சியில், களையாது
மயிர் வளர்த்துக்கொண்ட பகுதி. சிகை - சிகழி; குடுமிஎன்ப.

     முச்சி - நுனி, எலும்புமணி குடுமியின் நுனியிற்
கோத்தணியப்பட்டதென்க.

     ஒருவன் - இங்கு இடநோக்கித் திருமாலைக் குறித்தது.
திருமாலின் அங்கம் பண்டு ஒருநாள் பரித்ததென்பது
ஊழிக்காலத்தில் இறந்து வீந்த (பிரம) விட்டுணுக்களின்
எலும்புக்கூடுகள், என்றும் அழியாதெஞ்சி நின்று எங்கு நிறைந்த
சிவபெருமான் றிருமேனியிற் கிடத்தல் குறித்தது. பரித்தல் -
தாங்குதல், "பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போ,
யிருங்கடன் மூடி யிறக்கும்; இறந்தான் களேவரமுங், கருங்கடல்
வண்ணன் களேவர முங்கொண்டு கங்காளராய்" (பொதுத
்திருவிருத்தம்) என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்குக் காண்க.

     அது கடைந்த வெண்தாளம் - அவ்வெலும்பிற்
கடைந்தெடுத்த வெள்ளிய முத்துப்போன்ற சிறுமணிகள்.

     குண்டலம் - காதணிவகை. முத்து - இரத்தினம் - பொன்
முதலிய மணிகளால் இவற்றை அமைப்பது வழக்கு. இங்கு இவை
முத்துப் போன்ற வெள்ளிய எலும்பு மணிகளாலாகியன. பெருமான்
இங்குக் கொண்ட மாவிரதச்சைவ வேடத்துக் கேற்பக் காதில்
எலும்பு மணிகளாற் குண்டலம் பூண்டு வந்ததனை, அந்த எலும்பு
மணிகள் திருமாலின் எலும்புக்கூட்டினாற் கடைந்தெடுக்கப்பட்டவை
போன்றவெனக் கூறியது பண்புபற்றி வந்த இல்பொருட்
புகழுவமையாம். இதனால் சிவபெருமானது ஈறிலா முழுமுதற்றன்மை
குறித்தது காண்க.

     எற்புமணி - இப்பாட்டிற் கூறிய தலைமயிர் நுனியிற்
கோத்தணிந்த மணியும், காதுகளில் அணிந்த குண்டங்களும்,
வரும்பாட்டிற் கூறும் கழுத்தில் அணிந்த தாழ்வடமும், ஒரு
முன்கைக்கயிற்றின் மணியும் எலும்பாலாகிய மணியாம்.
எலும்புமணிகளணிந்து, மயிர்க்கயிற்றாற் பூணூலும் யோகபட்டையும்
அணிந்து, திருமேனி முழுமையும் நீறுபூசிக், கோவணமும் மேல்
உடையும் பூண்டு திருநீற்றுப் பொக்கணத்துடன் வரும்வடிவம்
மாவிரத வடிவம் எனப்படும். இஃது அகப்புறச் சமயங்கள் ஆறனுள்
ஒன்று. அவை பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம்,
ஐக்யவாத சைவம் என்பனவாம். நாயனாரின் மகளாருடைய
கூந்தலைப் பஞ்சவடிக்காக் கேட்பதற்கேற்ற சைவவடிவம்
தாங்கிவருதல் வேண்டுமாதலின் பெருமான் இவ்வடிவம்கொண்
டெழுந்தருளினர் என்க. இவ்வாறே பிள்ளைக்கறி கேட்பதற்கேற்ப
நரப்பசு உண்ணும் வைரவச் சைவக் கோலம் பூண்டு
சிறுத்தொண்டநாயனாரிடம் பெருமான் எழுந்தருளிய தகுதியும்
இங்குச் சிந்திக்க.

     வெண்தாளம் என - முத்துப்போலக் கடைந்ததனை
முத்தென்றுபசரித்தார்.

     சிகையின் கண் - சிகழியின்கண் - என்பனவும்
பாடங்கள். 22