889. ஒருமுன்கைத் தனிமணிகோத் தணிந்தவொளிர்
                            சூத்திரமும்,
அருமறைநூற் கோவணத்தின் மிசையசையுந்
                             திருவுடையும்,
இருநிலத்தின் மிசைத்தோய்ந்தவெழுதரிய திருவடியுந்,
திருவடியிற் றிருப்பஞ்ச முத்திரையுந்
                           திகழ்ந்திலங்க,  24

     889. (இ-ள்.) ஒரு முன்கை.........சூத்திரமும் - ஒரு -
முன்கையினிடத்து ஓரெலும்பு மணியைக் கோத்து அணிந்த
விளக்கமாகிய கயிறும்; அருமறை..........உடையும் - அரிய வேத
நூல்களாகிய கோவணத்தின்மேல் கட்டிய திருவுடையும்;
திருவடியில்......முத்திரையும் - திருவடியில் திருப்பஞ்சமுத்திரைகளும்;
திகழ்ந்து இலங்க - மிகவிளங்க,

     889. (வி-ரை.) ஒருமுன்கை.....சூத்திரமும் -
முன்கைகளிரண்டில் ஒன்றினில் நூலில் ஒருமணி
கோத்தணிந்திருந்தனர்; அது எலும்புமணி; அந்நூல் விளங்கித்
தோன்றிற்று என்க.

     மறைநூற் கோவணம் - மாமறைக்கோவணம் (509),
ஓங்குகோவணம் (515) என்ற விடங்களிலுரைத்தவை பார்க்க.
மறைகளும் அவற்றின் அங்ககளாகிய நூல்களும் என்றிவற்றானாகிய
கோவணம். "கான்மறைப் பொருணூல்களாற் சமைத்த, சிவன்
விரும்பிய கோவணம்" (540) என்றது காண்க. சிவரகசியத்தைத்
தன்னகத்துக் கொண்டு மறைத்துக் கொண்டிருத்தலால் மறையினைக்
கோவணம் என்றுபசரித்துக் கூறுதல் மரபு.

     அசையும் திருவுடை - மாவிரதிகள் கோவணம்
விளங்கப்பூண்பதுவும், அதன் மேல் வரிந்து கட்டியதுபோல
இருநுனியும் அசைந்துகாட்டும் சிற்றுடை உடுப்பதுவும் மரபு.

     இருநிலத்தின்.....திருவடியும் - உம்பர்கள் கால்நிலந்
தோயார் என்பர். இவர் உம்பர்பிரான் (886) ஆதலின் கொண்ட
வேடத்திற்கேற்ப நிலத்தின்மிசைத் தோய்ந்த திருவடியுடன் வந்தனர்
என்றார். இவர் எல்லாப் பொருள்களுள்ளும் நிறைந்து பதிந்து
கிடப்பதன்றிச் கால்நிலந்தோய வெளிப்பட்டு நடப்பரல்லாரயினும்
அவ்வாறு வந்ததுபற்றி அருமைப்பட இருநிலத்தின் மிசைத்
தோய்ந்த
என்று பாராட்டினார். இவர் உத்தராபதியாராய்
வந்தவிடத்திலும் "பயன்றவத்தாற் பெரும்புவியும் பாததாமரைசூட"
(சிறுத் - புரா. 34) என்று இவ்வாறே பாராட்டிக் கூறுதல் காண்க.

     எழுதரிய திருவடி - படி எழுதலாகாத அழகுடைய திருவடி.
"கோவணமுடுத்த வாறுங் கோளர வசைத்த வாறுந், தீவணச் சாம்பற்
பூசித் திருவுரு விருந்தவாறும், பூவணக் கிழவ னாரைப் புலியுரி
யரைய னாரை, யேவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே"
தனித்திருநேரிசை (2), "இப்படிய னிந்நிறத்த னிவ்வண்ணத்த
னிவனிறைவனென் றெழுதிக் காட்டொ ணாதே" (வினாவிடைத்
திருத்தாண்டகம் 10) முதலிய திருவாக்குக்கள் காண்க.
அருள்நிறைவு - சிவசத்தி -  என்பதனைத் திருவடியாக உபசரிப்பர்.
ஒரு பொருளை எப்போதும் கண்டு கொண்டிருக்க விரும்புவோர்
அதனை ஓவியமாக எழுதி முன்வைத்துக் கொள்ளுதல் உலக
வழக்கு. இதுபற்றியே உலகர் பல உருவப்படங்களை மனைகளில்
அணி பெற வைப்பர். இறைவனது திருவடியை நேர்காண வல்லார்
உள்ளே காணுவதன்றி (860) எழுதவைத்துக்கொள்ளுதல் இயலாது
என்பதாம். "காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சுங்
காலமிது" (ஏயர் - புரா - 334) முதலியவை பார்க்க. எழுதும்
ஓவியம் படிச்சந்தம் எனப்படும். "படிச்சந்தமாவது ஒன்றன்
வடிவுடைத்தாய் அது வென்றே கருதப்படு மியல்பையுடையது"
என்பர் (திருக்கோவை - 78) பேராசிரியர். மொழிநடை யெழுத
லரிதென விலக்கல், அவயவமெழுத லரிதென விலக்கல் என்ற
அகப்பொருட்டுறைகளின் கருத்துக்களையும் இங்கு வைத்துக்
காண்க. இக்கருத்தினை உட்கொண்டு, "ஓவியத் தெழுத வொண்ணா
வுருவத்தாய்" என்றது கம்பர் பாட்டு. திருவடியை
உட்கொண்டிருத்தலிற்போலும் மறையும் எழுதரியதென்பது.

     திருஅடியில் திருப்பஞ்ச முத்திரை - முத்திரை - கை -
கால் முதலிய அங்கங்களில், சில குறித்தபொருள்களின் வடிவமா
யமையும் வரைக்கீற்றுக்களின் கூட்டத்தை முத்திரை என்பது
உடற்கூற்று நூல் மரபு. பஞ்சமுத்திரை - இவை பதுமம், சங்கம்,
மகரம், சக்கரம், தண்டம் என்பன. பஞ்சாயுதம் என்னும் தண்டு,
வாள், சங்கு, சக்கரம், வில் என்றும் கூறுப. இவை காலில் விளங்கப்
பெறுவது யோகிகள், ஞானிகள் முதலிய பெரியோர்களது
உடலிலக்கணங்களில் ஒன்றென்பர்.

     அசைந்த - திருவுடை - திருவடிவில் - என்பனவும்
பாடங்கள். 24