890. |
பொடிமூடு
தழலென்னத் திருமேனி தனிற்பொலிந்த
படிநீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க்,
கொடிநீடு மறுகணைந்து தம்முடைய குளிர்கமலத்
தடிநீடு மனத்தன்பர் தம்மனையி னகம்புகுந்தார். 25
|
890.
(இ-ள்.) பொடிமூடு.......பான்மையராய்
- நெருப்பின்மேல்
மூடிய சாம்பல் போலத் திருமேனியின்மேல் விளங்கிய அழிவில்லாத
தன்மையுடைய திருநீற்றை நிறையப் பூசிய தன்மையுடையராய்;
கொடிநீடும் மறுகணைந்து - கொடிகள் மிக விளங்கிய திருவீதியை
யடைந்து; தம்முடைய.......புகுந்தார் - தம்முடைய குளிர்ந்த
தாமரைபோன்ற திருவடிகள் நிலைத்துத் தங்குதற்கிடமாகிய
மணத்தினையுடைய அன்பராகிய மானக்கஞ்சாற நாயனாரது
திருமனையினுள் புகுந்தருளினர். 25
890.
(வி-ரை.) தழல் முடு பொடி என்ன என்று
பொருளுக்
கேற்பமாற்றுக. தழல் - இறைவனது திருமேனிப் பொலிவுக்கும்,
அதனை உட்பொதிந்து மேல் மூடும் சாம்பற்பொடி -
அவரணிந்த
திருநீற்றுப் பரப்புக்கும் உருவம்பற்றி வந்த உவமை. "இவ்வண்ண
மிருக்கு மெங்க ளிறைவண்ண வடிவு மந்தச், செவ்வண்ணமேனி
பூத்த திருவெண்ணீறதுவும்ழு (மண் - பட - 108) என்ற
திருவிளையாடற் புராணத்தினுள் இக்கருத்து விரிக்கப்பட்டமை
காண்க. நீறுபூத்த நெருப்பு என்னும் வழக்கும், "நீறாகி நீறுமிழு
நெருப்புமாகி" (திருமாற்பேறு - 5) என்ற திருத்தாண்டகமும் காண்க.
திருநீற்றின்..பான்மையராய்
- பரப்பாய்த்திருநீற்றை
அணிந்த பான்மை என்று கூட்டி உரைக்க. நீற்றினை மேனி முழுதும்
பரக்கப் பூசுதல் மாவிரதர் மரபு.
பொலிந்த
- தேற்றமாய் விளங்கிய. "சேலுங் கயலுந்
தினைக்குங் கண்ணாரிளங் கொங்கையிற் செங்குங்குமம், போலும்
பொடியணி மார்பிலங்குமென்று புண்ணியர் போற்றிசைப்ப"
(திருப்பல்லாண்டு - 8) என்றபடி தம்மாற் காதலிக்கப்பட்ட
இளமகளிர் மேனியிற் கண்ட பூச்சுக், காமுகரை வசமாக்குதல்போல,
இத்திருநீற்றின் பரப்பு நாயனாரை வசீகரித்தது என்க. அவ்வாறு
அதன் வயப்பட்ட "மனச்செவ்வன்பர், பவமாற்றுந் திருநீற்றுப்
பொக்கணமும்" கண்டார்; தொண்டர்க்கே ஏவல்செயும் தொழிலின
(873) ராகிய அவர் இவற்றில் ஈடுபட்டாராய் உய்ந்தொழிந்தேன்
(891)என விரதியாரது குறிப்பறிந்து அவர் வேண்டுமதனைக்
கொடுக்க முற்பட்டனர் என்பதாம்.
படிநீடுதல் - என்றும் அழியாதிருத்தல். தன்மை ஓங்குதல்
என்றுரைப்பாருமுண்டு.
கொடி
நீடு மறுகு - கொடி - வெண்கொடி. கேதனம் (83),
வெண்கொடி (243), கொடியும், (323), சோதிவெண்கொடிகள் (474)
என்றவிடங்களிலுரைத்தவை பார்க்க.
குளிர்கமலத்து
அடி - நீரிலும் சேற்றிலுமே நின்று
வளர்வதனால் தாமரைக்குக் குளிர்ச்சி உரிய பண்பாதலின்
குளிர்கமலம் என்றார். குளிர்
- குளிர்விக்கும் எனப்
பிறவினையாகப் பொருள்கொண்டு, குளிரடி என்று
கூட்டித்
தன்னை அடைந்தார்க்குப் பிறவி வெயிலின் வெப்பம் போக்கி
நிழல்தந்து குளிர்விக்கும் திருவடி என்றலுமாம்.
அடிநீடும்
மனத்து - திருவடியினை எஞ்ஞான்றும்நீங்காது
நிலைபெறக்கொண்ட மனத்தினையுடைய. "இடரினும் தளரினும்
எனதுறுநோய் தொடரினும்", "வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும்", "நனவிலும் கனவிலும்", "தும்மலோ டருந்துயர்
தோன்றிடினும்", "கையது வீழினுங் கழிவுறினும்", "வெந்துயர்
தோன்றியோர் வெருவுரினும்", வெப்பொடு விரவியோர் வினை
வரினும்", "பேரிடர் பெருகியோர் பிணிவரினும்", "உண்ணினும்
பசிப்பினும் உறங்கினும்", "பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்"
என்று பற்பல வகையாலும் திருவாவடுதுறைத் தேவாரத்தில் "திருவடி
மறவாப் பான்மையோ " ராகிய ஆளுடையபிள்ளையார் அருளியபடி,
இங்கு உலகர் மறக்கக்கூடியனவாகிய எக்காலங்களிலும் நாயனாரது
மனத்தில், மறக்கப்பெறாது திருவடி நிலைபெற்று நீடிற்று என்பதாம்.
உள்ளநிலைப் பொருள் (886), ஆளாகும் பதம் பெற்ற தணிவில்
பெரும் பேறுடையார் (873) என்றவை காண்க.
மனையின்
அகம்புகுந்தார் - மனையில் வந்து அன்பரது
மனத்தினுட்புக்கருளினார் என்ற குறிப்பும் காண்க. 25
|