891. வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண்,
                             டெதிரெழுந்து,
சிந்தைகளி கூர்ந்து, மகிழ் சிறந்தபெருந்
                              தொண்டனார்
"எந்தைபிரான் புரிதவத்தோ ரிவ்விடத்தே
                               யெழுந்தருள
வுய்ந்தொழிந்தே னடியே" னென் றுருகியவன்                           பொடுபணிந்தார். 
26

      (இ-ள்.) வெளிப்படை. வந்து அணைந்த மாவிரதராகிய
முனிவரைக் கண்டு, அவர் முன்பு எழுந்து நின்று, மனமிகக் களித்து,
மகிழ்ச்சிகூர்ந்த பெரியதொண்டராகிய நாயனார், "எந்தைபிரானாகிய
புரிகின்ற தவத்தினையுடைய பெருமான் இவ்விடத்தே வருதலினால்
அடியேன் உய்ந்துவிட்டேன்" என்று மனம் உருகிய அன்புடன்
அவரைப் பணிந்தனர்.

     (வி-ரை.) மாவிரத முனிவர் - மாவிரதம் என்னும் அகப்புறச்
சமயத்தின் கொள்கைப்படி கொண்ட முனிவர் வேடமுடையவர்.

     களிகூர்ந்து - மகிழ்சிறந்து - ஒரு பொருட் பன்மொழி
என்பர். களிகூர்தல் அக நிகழ்ச்சியும், மகிழ்சிறத்தல் அது
காரணமாகப் புறத்து நிகழும் மெய்ப்பாட்டுக்கு மூலமா யிருப்பதும்
குறித்தன காண்க.

     எந்தைபிரான் புரிதவத்தோர் - எந்தை பிரானிடத்து
அன்புபுரிதவம் என்றும், பிரானைப்புரி (இடைவிடாது போற்றுகின்ற)
தவம் என்றும் உரைப்பாருமுண்டு. எந்தைபிரானாகிய இறைவனீரே
தவத்தோராய் வந்தீர் என்ற உண்மைக் குறிப்பும் காண்க. இதனைத்
தொடர்ந்தே, வரும்பாட்டில் "நற்றவராம் பெருமானார்" என்றதும்
கருதுக.

     எழுந்தருள உய்ந்தொழிந்தேன் - எழுந்தருள்வதனால்
உறுதியாக உய்திபெறுவேன் என்பதாம். பின் சரித நிகழ்ச்சிக்
குறிப்புமாம். துணிபுபற்றி எதிர்காலம் இறந்த காலமாய் வந்தது.
வருதலால் உய்தி பெற்றேன் என்று இறந்தகாலப் பொருளே
கொண்டுரைப்பாருமுண்டு.

     இதனாற் பெரியாரைக் கண்டு களித்துப் பணியும் முறை
காட்டப்பட்டது.