893. |
ஞானச்செய்
தவரடிமேற் பணிந்துமனை யகநண்ணி
மானக்கஞ் சாறனார் மணக்கோலம் புனைந்திருந்த
தேனக்க மலர்க்கூந்தற் றிருமகளைக் கொண்டணைந்து
பானற்கந் தரமறைத்து வருமவரைப் பணிவித்தார். 28 |
(இ-ள்.)
வெளிப்படை. ஞானவடிவுடையராய்ச் செய்யும்
தவவேடம் தாங்கியவரது திருவடியில் வீழ்ந்து வணங்கி,
மனைக்குள்ளே சென்று, மணக்கோலம் பூண்டிருந்த, தேன்
பொருந்திய புதிதாக மலர்ந்த மலர்களணிந்த திருமகளாரை உடன்
கூட்டிக் கொண்டுவந்து, திருநீலகண்டத்தை மறைத்துவந்தவ ரடியில்
வீழ்ந்து வணங்கச்செய்தனர்.
(வி-ரை.)
ஞானச் செய்தவர் - அவரது திருமேனி
ஞானநிறைவேயாம்; தாங்கி வந்த வேடம் செய்தவவேடமாம் என்பது.
அடிமேற்
பணிந்து - முனிவரைக் கண்டெழுந்து முன்
பணிந்தனர் (891) என்றது பெரியோரைக் கண்டதும் வணங்கும்
முறை. இங்கு அடிமேற்பணிந்தது என்றது அவர்
ஆசி கூறியதற்கு
முறைமையின் அடிவீழ்ந்து வணங்கிய சிறப்பு வணக்கம்.
மணக்கோலம்
புனைதல் - மணமகளுக்குரியபடி
அலங்கரிக்கப் பெறுதல். "செம் பொன்செய் வாசிச் சூட்டுத்
திருமணிப் புனைபூண் செல்வப், பைம்பொனின்மாலை வோய்ந்த
பவளமென் கொடியொப் பாரை, நம்பன்றனருனே வாழ்த்தி
நல்லெழில் விளங்கச் சூட்டி, யம்பொன்செய் தீய மென்ன வழகலங்
கரித்து வைத்தார்" (திருஞான - புரா - 1223) என்றது பார்க்க.
தேன்
நக்க மலர் - தேன் - வண்டு. நறவு என்றலுமாம்.
நக்க - புதிதாக அலர்தல் குறித்தது. "நகைக்கும் பதத்தி னுடன்
பறித்த" (முருகர் - புரா - 7), " அலரும்வேலை" (559) முதலியவை
பார்க்க.
திருமகள்
- திருமகட்கு மேல்விளங்கும் (881)
என்றவிடத்துரைத்தவை பார்க்க. நாயனாருக்குப் பிழைக்குநெறி
உதவி (876) இறைவனது அருளாகிய திருவைத் தேடித்தரும் மகள்
என்ற குறிப்புமாம்.
பானல்
கந்தரம் மறைத்து வரும் அவர் - பானல் -
நீலமலர். பானற்கந்தரம் - நீல மலர்போன்ற
நிறமுடைய
திருநீலகண்டம். தமது திருநீலகண்டத்தை மறைத்து மாவிரதராகிய
வேடம் பூண்டு வந்தவர் என்க.
பணிவித்தார்
- பணியச்செய்தனர். பணியுமாறு பணித்தனர்.
மகளார் தாமே அடியார்களைப் பணியும் நியதியுடையா ராயினும்,
இங்கு மணப்பெண்ணாகியதற் கேற்பப் பெரியோர் பணித்தபடி
செய்யும் நிலை குறிக்கப் பிறவினையாற் கூறினார். வரும்பாட்டில்
இதுபற்றியே "தாழ்ந்தெழுந்த மடக்கொடி" என்றதும் காண்க.
|