894. தஞ்சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த
                               மடக்கொடிதன்
மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தற் புறநோக்கி,
யஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த், "தணங்கிவடன்
                                மயிர்நமக்குப்
பஞ்சவடிக் கா" மென்றார் பரவவடித்
                         தலங்கொடுப்பார்.
26

     (இ-ள்.) பரவ.....கொடுப்பார் - தம்மைத் துதிப்பவர்களுக்குத்
தமது திருவடித்தலம் கொடுப்பவராகிய சிவபெருமான்; தம்
சரணத்திடை...நோக்கி - தமது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி
எழுந்து நின்ற மடமையுடைய கொடிபோல்வாரது மேகம்
தழைத்ததுபோலத் தழைத்து வளர்ந்த மலரணிந்த கூந்தலின் புறத்தை
நோக்கி; அஞ்சலி...பார்த்து - கும்பிட்டு நின்ற உண்மைத்
தொண்டனாரைப் பார்த்து; "அணங்கு....ஆம்" என்றார் - "அணங்கு 
போலவா ளாகிய இவளது மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்"
என்று சொன்னார்.

     (வி-ரை.) மஞ்சு....கூந்தல் - மஞ்சு - மேகம். தழைத்தல்
- தாவரவுயிர்கட்குரிய தளிர்த்து வளர்தலாகிய செயலை
மேகத்திற்கேற்றி, மேகம் தாவர வகையுட்பட்டதுபோல உவமித்தார்.
மேகத்தின் நீர்ச்செறிவினாலாகிய கருமையும், விரிவும், அசையும்
கூடிய தோற்றம் தழைத்த மரம்போன்றிருத்தலின் இவ்வாறு கூறினார்.
தழைத்தாலென எனற்பாலது தழைத்தென என நின்றது. தழைத்தாற்
போல வளர்ந்த
என்க. பயனும் மெய்யும் உருவும்பற்றி வந்த
இல்பொருள் உவமை. வளர்ந்த - செறிந்து வளர்ந்த. மேகம்
கூடிச்செறிந்தால் உலகுதழைக்கச் செய்யும்; இங்கு இக்கூந்தல்
வளர்ந்ததனால் அருண்மழை பெய்தற்குக் காரணமாயிற்று; நாயனார்
உய்ந்தனர்; அது கண்டு "செழும்புவனங்கள்" உய்ந்தன எனப்பயனும்
மெய்யும் பற்றிய உவமையாதல் கண்டுகொள்க. "பிழைக்குநெறி
தமக்குதவ" (876), "இந்தச் செழும் புவனங்களில் ஏறச்செய்தோம்"
(897) என்றதனாற் பயன் போந்தமையும், "இருள்செய்த கருங்கூந்தல்"
(895) என்றமையால் உருவுவமையாதலும் காண்க.

     கூந்தற் புறம் நோக்கி - கூந்தலினது நீளம், செறிவு,
கருமை முதலிய புறத்தோற்றம் பற்றியே " இது பஞ்சவடிக்கு ஆம்"
என்கின்றாராதலின் அது குறிக்கக் கூந்தல் நோக்கி என்னாது
கூந்தற் புற நோக்கி என்றார். நோக்குதல் - ஊன்றிப் பார்த்தல்.
இங்கு ஊன்றிய நோக்கத்தினை வெளிப்படுத்தாது, வெளிப்பார்வைத்
தொழில் மட்டும் காட்டப்பட்டமை குறிக்கவும் புறநோக்கி என்றார்.
மானக்கஞ் சாறரது அன்பை உலகுக்கு அறிவித்து உய்வித்தல் (897)
அவரது அகநோக்கம் என்பது பின்னர்க் காண்க. "கழன்மனத்துக்,
கொண்ட கருத்தி னகநோக்கும்.

     குறிப்பே யன்றிப் புறநோக்கும் கண்ட வுணர்வு துறந்தார்
போல்" என்ற தண்டியடிகள் புராணக் கருத்தினை இங்குச் சிந்திக்க.
தம் முன் பணிந்து ஐந்தங்கமுந்தோயத் தாழ்ந்தெழுந்தவரது
கூந்தலின் புறமே தோற்றப்படுமாதலின் புறநோக்கி என்றார்
எனவும், புறம்கூந்தல் எனக் கொண்டு முதுகினிற் கிடந்த கூந்தல்
எனவும் உரைப்பாருமுண்டு.

     அஞ்சலி மெய்த்தொண்டர் - மகளாரைக் கொணர்ந்து
பணிவித்த நாயனார் மாவிரதியரைத் தாமும் அஞ்சலி செய்தபடியே
நின்றனர் என்பதாம். மெய் - இயற்கை யடைமொழி.

     அணங்கு இவள் - அணங்கு போன்ற இவள் என
உவமவுருபு விரிக்க. அணங்கு - தெய்வப் பெண்.

     மயிர் - எவ்வகை உயர்வான கூந்தலேயாயினும்
தலையினின்று களையப்பட்ட பின் "தலையினிழிந்த மயிர்" என்று
இகழ்ந்தொதுக்கப் படுவதோர் அசுத்தப் பொருளாமாதலின் இங்கு
மயிர் என்று இலேசுபடக் கூறினார். மஞ்சுதழைத்தது போலும்
என்பது முதலிய பெருமைகளுடையது என்று எண்ணாது நாம்
இதனை மயிர் என்ற மட்டிலே கருதுவோம் என்பதும், அரிந்த
பின்னர் அதனை மீள அவ்வாறே வளரக் கொடுத்துவிடுவோம்
என்பதும், இவ்வாறு இழிந்ததாகக் கருதும் மயிரேயாயினும் நாம்
தரிக்கும் உயர்ந்த மயிர்க்கயிற்றுப் பூணூலுக்கு ஆகும் என்பதும்,
உயர்ந்த பயன்தருவதாம் என்பதும் ஆகிய இவை குறிக்கவே மயிர்
- பஞ்சவடிக்கு - ஆம்
என்றார்.

     பஞ்சவடி - மயிர்க்கயிற்றாலியன்ற பூணூல் வடம். (பஞ்சம் -
விரிவு; வடி - வடம்) மயிரினால் அகலமாகப் பின்னல் செய்த
மயிர்க்கயிற்றுப் பூணூல் வடம். "மயிர்க் கயிறு தரித்தான் றன்னை" ,
"பஞ்சவடி மார்பினானை" முதலிய தேவாரங்கள் காண்க.

     அடித்தலங் கொடுப்பார் பஞ்சவடிக்கு ஆம் என்றார் -
என்று கூட்டுக. கொடுப்பார் - வினையாலணையும் பெயர். பரவ
அடித்தலம் கொடுக்கு மியல்புடையார் ஆதலின் மயிர்
பஞ்சவடிக்காம் என்றார் என்க. பரவுதல் - மன மொழி மெய்களால்
வழிபடுதல். பஞ்சவடிக்காக மயிரை அரிந்து நீட்டிய நாயனார் பரவ
அவர்க்குத்தம் அடித்தலமாகிய முத்தி கொடுப்பாராகி - என்றார்
என்ற கூட்டிக் கொடுப்பார் என்றதனை வினை முற்றெச்சமாகக்
கொண்டுரைப்பினுமமையும். அடித்தலம் கொடுத்தனை 898-ல்
கூறுகின்றார்.

     அலர்ந்தமலர்க் கூந்தல் - என்பதும் பாடம். 29