895.
|
அருள்செய்த
மொழிகேளா வடற்சுரிகை
தனையுருவிப்,
"பொருள்செய்தா மெனப்பெற்றே" னெனக்கொண்டு,
பூங்கொடிதன் இருள்செய்த கருங்கூந்த லடியிலரிந்,
தெதிர்நின்ற
மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி
னிடைநீட்ட,
30 |
|
895.
(இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு அருளிச் செய்த
மொழிகளைக்கேட்டு மானக்கஞ்சாறனார் வலிமையுடைய உடை
வாளை உருவிப், "பொருட்படுத்தி (இது பஞ்சவடிக்கு) ஆம் என்று
சொல்லப் பெற்றேன்" என்று மனத்துட்கொண்டு, பூங்கொடி போன்ற
மகளாரது இருள்செய்த கரிய கூந்தலை அடியில் அரிந்து, எதிரே
நின்ற, மயக்கம் செய்யும் பிறப்பை யறுப்பாருடைய மலர்க்கையில்
நீட்ட, 30
895. (வி-ரை.)
அடல் சுரிகை - அடல் - போர் எனக்
கொண்டு போர்க்கருவியாகிய சுரிகை என்பாருமுண்டு.
பொருள்
செய்து ஆம் எனப் பெற்றேன் - பொருளல்லாத
இதனையும் பொருட்படுத்தி "இது பஞ்சவடிக்கு ஆகும்" என்று
சொல்லும் பேறு பெற்றேன் என்க. இங்குப் "பொருள் செய்தாம்;
என்பெற்றேன்" என்று பாடங்கொண்டு, பொருள் - முற்பிறப்பிற்
செய்த நல்லகருமம் என்று உரைகொண்டு, முன் செய்த நற்றவத்தால்
இவ்வாறு கொடுப்பது ஒருவர்க்குக்கிடைக்கும்; நான் என்ன
புண்ணியஞ் செய்தேன்? என்று உரைகொள்வர் மகாலிங்கையர்.
பெரும்பொருளை ஆக்கிக்கொண்டவன் போல (இப்பெரியார்
இதனைக் கேட்கப்) பெற்றேன் என்பது ஆறுமுகத் தம்பிரானாருரை,
இதனை மறுத்து, மொழிகேட்டு அதற்கு உண்மைப் பொருள் செய்து,
அதன்படி செய்யத்துணிந்து, இதனை ஆம் என்று செய்யும்பேறு
பெற்றேன் என மகிழ்ந்து என்று கூறுவர் ஆலாலசுந்தரம்பிள்ளை.
இருள்
செய்த - இருள் - கருநிறங்குறித்து நின்றது.
ஆகுபெயர். இருள் செய்த - கருநிறம்பரப்பிய.
"கருங்கதிர் விரிக்கு
மேனி" என்றது காண்க. இருள் - மயக்கம்
எனக்கொண்டு, கூந்தல்
அழகியது - உடற்கூறு அழகியது என்றெல்லாம் இவ்வுடலைப் பற்றிக்
கொண்டு அலையும் உலகியல்பு குறித்ததாக உரைப்பதுமாம். உலகர்
அவ்வாறு மயங்காவண்ணம் காட்டும்நிலையில், இதுவரை இருள்
செய்த - மயக்கம் செய்த - இனி உண்மை காணக் காரணமாயின
- கூந்தல் என்று இப்பொருட்குக் குறிப்பு உரைத்துக்கொள்க.
மானக்கஞ்சாறனார்போல் "மெய்ப்பொருளை யறிந்துண" ராத (872)
ஏனை உலகர்க்கு மகளிரது கூந்தல் முதலியவை இருள்
- மயக்கம்
- செய்வன என்ற பொது இலக்கணமாகக் கூறியதாகக் கொள்க.
இதனைத் தொடர்ந்து மருள் செய்த பிறப்பறுப்பார் என்றதும்
உன்னுக. இருள் - ஆகுபெயராய் மேகத்தை உணர்த்தியதெனவும்,
செய்த - உவம உருபெனவும் கொண்டு மேகம்
போன்ற கரிய
கூந்தல் என்றலுமாம். மேல் மஞ்சுதழைத்தென
என்றது காண்க.
அடியில்
அரிந்து - அந்தப் பற்றுச் சிறிதும் எஞ்சி
நில்லாவகை அடியோடு களைந்து என்பது குறிப்பு. "பாசப் பழிமுதல் பறிப்பார்போல" என்றதுகாண்க.
எதிர்நின்ற
- முன்னே நின்றவராகிய பிறப்பறுக்கு முதல்வர்.
"தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்" (ஆளுடையபிள்ளையார்
- திருக்கோளிலி) என்றபடி எதிரேவரக் காணமுடியாதவர் இவருக்கு
எதிர்வந்து நின்றார் என்பது குறிப்பு. எதிர்நின்ற மருள்
என்று
கொண்டு, உயிர்களை அறிவு மயங்கச்செய்து தம் இனமாகிய
தலைவனை யடையாமல் எதிர்த்துக்கட்டி அதுகாரணமாகப்
பிறப்பில்வீழ்த்தும் மயக்கம் என்றுரைக்க நிற்பதும் சிந்திக்க.
"பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும்,
மருளானா
மாணாப்பிறப்பு" என்ற திருக்குறட் கருத்து இங்குத் தோற்று
வதனையும் உன்னுக. கூந்தல் முதலியனவாய் மெய் என்று
பேர்பெற்ற பொருளல்லாத பொய்யினைப் பொருளெனக்
கொண்டு
அவற்றுக்காவனவே செய்து இறந்து பிறந்துழலும் மருளினால்
ஆகிய மானிட வாழ்க்கையை நோக்கி இவ்வாறு கூறினார் என்பதும்
காண்க.
இனி, உலகபோகப்
பொருள்கள் பொருளல்ல என்று
தள்ளுதலும், அவையே பொருளாம் என்று கொண்டுழலுதலும்
ஆகிய இரண்டும் தவறுடையன; சிவனுக்கும் அடியாருக்கும்
பயன்படும் அவ்வளவிற்கே பொருளாம் என்றுணர மருள் செய்த
பிறப்பறும் என்று சேர்த்துரைத்துக்கொள்ளுதலும் ஆம். "ஆவன
ஆகுமென்று" (470) என்றதும் காண்க.
மருள்செய்த
பிறப்பு அறுப்பார் - "மையல் செய்திம்
மண்ணின்மேற் பிறக்கு மாறு காட்டினாய்" (திருஞா - தேவா -
நட்டராகம் - திருத்துருத்தி - 5) என்றபடி மருளினாலாகிய
பிறவியினை அறுத்துத் திருவடித்தலம் கொடுப்பதற்காக
எதிர்நின்று செய்த இச்செயல் முடிகின்ற இடமாதலின் இங்கு
இத்தன்மையாற் கூறினார்.
பிறப்பு
அறுப்பார் மலர்க்கரம் - தமது கையினாற்
காட்டும் ஞானமுத்திரையால் பிறப்பு அறும்வகை கூட்டுவார் என்ற
குறிப்பும் காண்க. (மானக்கஞ்சாறர்) - நீட்ட - (அவர்) - மறைந்து -
வந்தார் என வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. பெற்றேன் என -
கொண்டு - அரிந்து - நீட்ட என்ற வினைகட்கு, மானக்கஞ்சாறர்
என எழுவாய் வருவிக்க.
|