897. விழுந்தெழுந்து மெய்ம்மறந்த மெய்யன்பர்
                           தமக்குமதிக்
கொழுந்தலைய விழுங்கங்கை குதித்தசடைக்
                           கூத்தனார்
"எழும்பரிவு நம்பக்க லுனக்கிருந்த பரிசிந்தச்
செழும்புவனங் களிலேறச் செய்தோ" மென்
                          றருள்செய்தார்.
32

     (இ-ள்.) வெளிப்படை. (எதிரிற் கீழே) விழந்து எழுந்து
மெய்ம்மறந்து நின்ற மெய்யன்பருக்குப், பிறைச்சந்திரன் அலையும்படி
பெருகிவிழுகின்ற கங்கையாறு பொங்கிய சடையினையுடைய
கூத்தனார், "உனக்கு எம்மிடத்து எழுகின்ற அன்பின் தன்மையை
இந்தச் செழித்த உலகங்களில் ஏறும்படி செய்தோம்" என்று
அறிவித்துத் தமது திருவருளினைச் செய்தனர்.

     (வி-ரை.) விழுந்து எழுந்து - எதிர் விழுந்ததனை மேற்
கூறினாராதலின் அவ்வாறு விழுந்தவர் எழுந்து என்க.

     மெய்ம்மறந்த - "செய்வதொன்று மறியேனே" (திருவாசகம் -
திருச்சதகம்). "ஒன்று மறிந்திலர் வாதவூர் முனிவர்" (திருவினை -
புரா - வாத - உப - பட - 47) என்றபடி இன்ன நிலைமையினர்
என்றறியாது நின்றனர் என்றதாம்.

     மெய்ம்மறந்த மெய்யன்பர் - மெய் என்ற பெயரால்
வழங்கும் பொய்யாகிய உடலையும் உடல் சூழ்ந்தவற்றையும்
உடலினுள் வாழும் தம்மையும் மறந்தார். ஆனால் மெய்யாகிய
அன்பு மயமாய் விளங்கினார் என்றதாம். பொய்யன்புக் கெட்டாத
இறைவர் கஞ்சாறனார் காண வெளிப்பட்டது அவரது உண்மையன்பு
பற்றி என்றபடியாம்.

     இவரது அருள் வெளிப்பாடுகள் மானக்கஞ்சாறனார்
பொருட்டு நிகழ்ந்து அவர்க்கு முதலில் அறிவிக்கப்பட்டனவாகலான்
அன்பர் தமக்கு என்றார்.

     மதிக் கொழுந்து - மூன்றாம் பிறை. மேல் தழைக்க
உளதாதலின் கொழுந்து என்றார். கொழுந்துபோல்வதனைக்
கொழுந்தென்ற துபசாரம்.

     அலையவிழும் - கங்கைப் பெருக்கின் அலைகள் ததும்பி
வீழ அதன் கரையாகிய சடையில் உள்ள சந்திரன் அலைகின்ற
தென்பது கருத்து.

     குதித்த சடை - ஆகாயத்திலிருந்து பூமியில் இறங்குவதற்கு
முன் கங்கை சிவபெருமானது சடையில் ஆயிரமாமுகத்தினோடு
பெருகிய வேகத்தால் இறங்கியதனைக் குதித்த என்றார். குதித்தற்
கிடமாகிய சடை.

     எழும்பரிவு - மேன்மேலும் அதிகரிக்கும் அன்பு.
"மேன்மேல்வந் தெழுமன்பால்" (800) என்றது பார்க்க. உனக்கு நம்
பக்கல் எழும் பரிவு இருந்த பரிசு
என மாற்றுக.

     ஏறச்செய்தல் - உணரச்செய்தல் - உணர்த்துதல்.
"அறிவிக்கவன்றி அறியாவுளங்கள்" என்றவாறு படிமுறையால்
இறைவர் உணர்த்தினாலன்றி உயிர்கள் உண்மை உணரமாட்டா.
"நினையுமா நினையே" என்று (திருவிசைப்பா - கோயில்)
திருமாளிகைத் தேவர் அருளியவாறு இறைவர் இங்குச்
செழும்புவனங்கள் பரிவின் பரிசு உணரத் தாம் உணர்ந்தருளினர்
என்பதாம்.

     அருள் செய்தார் - அருளாவன அறிவித்தலும், தமது
காட்சி கொடுத்தலும், கருணைத்திறம் போற்றும் பெரும்பறு
நேர்பெறத் தந்து தமதுலகத்திற் சேரச் செய்தலும் ஆம்.

     அருள்செய்தார் என்றதற் கேற்பக் கூத்தனார் என்றதும்
காண்க. அருள்செய்தார் - சொன்னார் என்பாருமுண்டு. 32