899. |
தொண்டனார்
தமக்கருளிச், சூழ்ந்திமையோர்
துதிசெய்ய
இண்டைவார் சடைமுடியா ரெழுந்தருளிப்
போயினார்
வண்டுவார் குழற்கொடியைக் கைப்பிடிக்க,
மணக்கோலங்
கண்டவர்கள் கண்களிப்பக், கலிக்காம
னார்புகுந்தார். 34 |
|
(இ-ள்.)
வெளிப்படை. தொண்டனாருக்கு இவ்வாறு அருளிச்
செய்தபின், தேவர்கள் சூழ்ந்து துதிக்க இண்டை மாலையையணிந்த
நீண்ட சடையினையுடைய சிவபெருமான் மறைந்தருளினார்.
வண்டுகள் மொய்த்தற்கிடமாகிய கூந்தலினையுடைய மணமகளாரை
மணஞ் செய்துகொள்ளும் பொருட்டு, மணக்கோலத்தைக்
கண்டவர்களுடைய கண்கள் களிப்படையும்படி கலிக்காமனார்
வந்தணைந்தனர்.
(வி-ரை.)
தொண்டனார் தமக்கு - மெய்யன்பர் தமக்கு
(897) என்று பார்க்க.
இமையோர்
சூழ்ந்து துதி செய்ய என்க. மானக்கஞ்சாறனார்
பெற்ற பெரும் பேறுபற்றித் தேவர்கள் துதித்தனர். இப்பேறு தமக்குப்
பெறுதற் கரியதாயினமை கருதியும் துதித்தனர் என்க.
இண்டை
- முடிக்கணியும் மாலைவகை, "தொண்ட
ரஞ்சுகளிறும் மடக்கிச் சுரும்பார். மல, ரிண்டை கட்டி வழிபாடு
செய்யுமிடம்" (திருஞா - தேவா - செவ்வழி - கேதாரம் -1) என்ற
தேவாரமும், "இண்டைச்சுருக்கும் தாமம்" (முருகர் - புரா - 9)
என்றதும் காண்க.
எழுந்தருளிப்போயினார்
- மறைந்தருளினார் என்ற
பொருள் தரும் மரபுவழக்கு.
வண்டுவார்குழல்
- அச்சமயம் மணமகளாரின் கூந்தல்
அடியில் அரிந்து எடுக்கப்பட்டமையின், இது குழலுக்கு இயற்கை
யடைமொழி மாத்திரையாய் நின்றது. பின்னர் இவர் கைப்பிடிக்குமுன்
திருவருளால் இப்பூங்கொடியார் புனைந்த மலர்க்குழலினை
முன்னிருந்தவாறே பெறப்போகும் நிலையின் குறிப்புமாம்.
மணமகளாரை வண்டுவார் குழலாராக எண்ணினார் என்றலுமாம்.
கைப்பிடிக்க
- மணஞ்செய்ய, 885 பார்க்க. "நற்றவக் கன்னி
யார்கை ஞான சம்பந்தர் செங்கை, பற்றுதற் குரிய பண்பிற்
பழுதினற் பொழுது நண்ண" (திருஞா - புரா - 1236) என்றவிடத்து
இதன் முதன்மை தேற்றப்படுதல் காண்க.
மணக்கோலம்
கண்டவர்கள் கண்களிப்ப - 171 - 172-ம்
பிறவும் பார்க்க.
கலிக்காமனார்
- முன்னர் ஏயாபெருமகன்(881),
ஏயர்கோனார் (883), ஏயர்குலப் பெருமான் (885) என்றும், பின்னரும்
ஏயர்குல மன்னவனார் (909) என்றும் கூறும் ஆசிரியர் இங்கு
அவரது பெயராற் கூறுதல் குறிக்கொள்க. "ஏயருட" என்ற
குடிப்பெயரும் காண்க. புகுந்தார் - திருமனையில்
என்று
வருவித்துக்கொள்க.
போயினார்
- புகுத்தார் - இறைவர் எழுந்தருளிப்
போயினதையும், மணமகனார் புகுந்ததையும் இவ்வொரு பாட்டில்
நயம்படச் சேர்த்துக் கூறியது இவ்விரண்டும் ஒரே காலத்தில்
உடனிகழ்ந்ததனைக் குறிப்பதற்காம்.
கைப்பிடிக்கும்
- என்பதும் பாடம். 34
|