900. |
வந்தணைந்த
வேயர்குல மன்னவனார் மற்றந்தச்
சிந்தைநினை வரியசெயல் செறிந்தவர்பாற்
கேட்டருளிப்,
புந்தியினின் மிகவுவந்து, புனிதனா ரருள்போற்றிச் சிந் தைதளர்ந், தருள்செய்த
திருவாக்கின்
றிரங்கேட்டு, 35 |
900. (இ-ள்.)
வந்தணைந்த....மன்னவனார் - வந்து சேர்ந்த
ஏயர்கோன் கலிக்காமனார்; மற்று...உவந்து - மனத்தாலும்
நினைத்தற்கரியதாகிய அந்தச் செயலை அங்குக்
கூடியிருந்தவர்கள்பாற் கேட்டருளிப் புந்தியில் மிக
மகிழ்ச்சியடைந்து; புனிதனாரருள் போற்றி - இறைவர் செய்த
திருவருளினைத் துதித்து; சிந்தை தளர்ந்து - பின்னர் மனந்தளர்ந்து;
அருள்செய்த...கேட்டு - அருளிச் செய்த திருவாக்கின்றிறத்தினைக்
கேட்டு. 35
900. (வி-ரை.)
மற்று அந்த - தாம் எண்ணிவந்த அதனுக்கு
வேறாக எதிர்பாராது நிகழ்ந்த அந்த. சித்தை நினைவு
அரிய
செயல் - ஒருமகள் கூந்தலை மணநாளில் அரிந்து மாவிரதியார்
கையில் நீட்டியதும், அவர் மறைந்தருளியதும், நாயனார்
பேறுபெற்றதும் ஆகிய இவை. இவை முற்றும் கூறுசெய்து பிரித்துக்
காணமுடியாதபடி ஒருசேர உடனிகழ்ந்தமையின் ஒருமையிற்
கூறினார். நினைவரிய - சிந்தையாலும் நினைத்தற்கு
அரிய. உயர்வு
சிறப்பு உம்மைதொக்கது.
செறிந்தவர்பால்
கேட்டருளி - "தங்குலநீள் சுற்றமெலாம்
தயங்குபெருங் களிசிறப்ப" (884) என்றபடி அங்குக் கூட்டமாகக்
கூடியிருந்த சுற்றத்தாரும் ஏனையோரும் ஆகியவர்கள் சொல்லக்
கேட்டனர் என்க. மானக்கஞ்சாறனார் பெரும் பேறு நேர்பெற்று
(898) இறைவரை யணைந்துவிட்டனராதலின் அங்கு நின்ற பிறர்பால்
இச்செயல்கேட்டனர் என்றறியப்படும். கேட்டருளி -
கலிக்காமனாரது திருத்தொண்டின் பெருமைநோக்கி இவ்வாறு
கூறினார்.
புத்தியினின்
மிக உவந்து - கேட்ட பொருளைப் புத்தி
நிச்சயிக்குமாதலின் அவ்வாறு நிச்சயித்து மிக உவந்தனர்.
சிந்தையினு நினைவரிய செயல் நிகழ்ச்சியிற் கூடியது மிக வுவக்கத்
தக்கதாம் என்று மிக மகிழ்ந்தனர் என்க. இது அவரது
திருவுள்ளத்தில் முதலில் நிகழ்ந்த நிகழ்ச்சி. தமது
திருத்தொண்டில் முதிர்ச்சியினால் தொண்டர் பணியில்
மானக்கஞ்சாறனார்க்கிருந்த உறைப்பினை நோக்கி உவந்தனர்.
புனிதனார்
அருள் போற்றி - புத்தியின் காரியமாய் உவப்பு
நிகழ்ந்ததாகலின் அதனாலே, அந்நிகழ்ச்சிக்கு அருள்
காரணமாமென அறிந்து அருளைப்போற்றினார். புனிதன் ஆர்
அருள் என்று பிரித்துரைக்கவும் நின்றது. ஆர்
- நிறைந்த - பெரிய.
சித்தை தளர்ந்து- இது அவரது மனத்தினுள்
நிகழ்ந்த
இரண்டாவது நிகழ்ச்சி. தளர்தல் - முயற்சி குறைதல் -
இளைத்தல். இவ்வருணலம் கண்டு தரிசிக்கும்பேறு தமக்குக்
கிடைக்கவில்லையே என்று மனந்தளர்ந்தனர் என்க.
அருள்
செய்த திருவாக்கின் திறம் என்றது "நம்பக்க
லுனக்கிருந்த பரிவிந்தச் செழும்புவனங் களிலேறச் செய்தோம்" (897)
என்றருளிய திருவாக்கின் தன்மை.
கேட்டு
மனந்தளரும் இடர்நீங்கி - அருணிகழ்ச்சிகளை
நேரே காணும்பேறு தாம் பெறாமைபற்றிக் கலிக்காமனார் சிந்தை
தளர்ந்தனர். ஆனால் அன்பின்றிறத்தை உலகில் ஏறச் செய்வதற்கே
இறைவர் இவ்வருள் வெளிப்பாட்டினைச் செய்தனர் என்ற
திருவாக்கின்றிறம் கேட்ட அதனால் அவ்வாறு
உணர்த்தப்பட்டாருட்பட்ட தாமும், அந்த அன்பின்றிறமும்
அருளின்றிறமும் உணர்ந்து உய்திபெற்றனர். நேர்
காணப்பெற்றிருப்பின் உளதாகும், அருட்டிற மறிந்துய்வதாகிய,
பயனையே கேட்ட இதனால் பெற்றனராதலின் இடர் நீங்கினர்
என்க. இது அவரது திருவுள்ளத்தில் நிகழ்ந்த மூன்றாவது
நிகழ்ச்சி. கேட்டு - செறிந்தவர்பால் கேட்டு என
வருவித்துக்கொள்க. அங்குச் செறிந்தவர் என்றதனால்
நிகழ்ந்த
அன்பு வெளிப்பாடு, அருள் வெளிப்பாடு, அருளிய திருவாக்கு
என்பவற்றைத் தாம் நேரே கண்டும் கேட்டும் உணர்ந்த
கூட்டத்தார்கள் என்றதாம். ஒரு பொருளை நேரிற் கண்டவர்
கேட்டவர்கள்பால் கேட்டலே நேர்சாட்சியம் (Direct evidence)
ஆகும் என்பதும் அது நம்பத்தக்கதாம் என்பதும் இந்நாள்
நவீனரின் வழக்குநூல் விதிகளுமாம்.
சிந்தை
தளர்ந்து - என்றதற்கு இவ்வாறன்றி, இச்செயல்
மண நிகழ்ந்தபின் நிகழ்ந்திருப்பின் தமக்கும் அப்பற்று
கிடைத்திருக்குமே என்ற கருத்தினால் மனந்தளர்ந்தனர்
என்றும்;
சுவாமியினால் கூந்தல் விரும்பிக் கொள்ளப்பட்ட பெண்ணை
எவ்வாறு மணப்பது என்று மனந் தளர்ந்தார் என்றும்;
முண்டிதமான பெண்ணை எவ்வாறு மணப்பதென மனத்தளர்ந்தனர்
என்றும்; மனைவியின் மயிர் அரியுண்டமைக்கு மனந்தளர்ந்தவர்
என்றும்; பேரடியாராகிய மானக்கஞ்சாறனார் தமது மணத்துக்கு
இல்லாமல் சிவபெருமானை அணைந்தது பற்றியும் அதனால் சுற்றத்
தார்வருந்துதல் பற்றியும் மனந்
தளர்ந்தனர் என்றும், மற்றும்
பலவாறும் உரை கூறுவாருமுளர். இவற்றின் பொருத்தங்கள்
ஆராய்ந்து கொள்ளத்தக்கன.
அருள்செய்த
திருவாக்கின் திறம் - "உனக்கும் அருள்
செய்வோம்" எனவும், "நீ துக்கப்படாதே; மனங்களிப்பாக அந்தப்
பெண்ணை மணந்துகொள்" என்று எழுந்த வார்த்தை எனவும்,
"இவற்றிற்கு நீ வருந்தாது மணஞ் செய்" என்றெழுந்தவாறு எனவும்
பலவாறும் உரைகூறுவாருமுண்டு. இவ்வாறு பின்னும் ஒரு திருவாக்கு
எழுந்ததென்பதற்கு ஆதரவு காணப்படவில்லை. அவ்வாறு எழுந்து
கேட்கப்பட்டிருப்பின் திருவாக்குக் கேட்டு என்னாது
திருவாக்கின்றிறம் கேட்டு என்று கூறுவதற்கு ஏதுவில்லை. "அருள்
செய்தவாக்கு"..."என்ன"..."இவ்வண்ணமெழுந்தது கேட்டு" (மூர்த்தி -
புரா. 21-22-23) பார்க்க. திருவாக்கின்றிறமாவது "உமக்குச்
சோபனமாகுக" (892) என்றெழுந்த திருவாக்கு என்றும், அதில்
உமக்கு என்ற பன்மையால் கலிக்காமனாரையும் உள்ளடக்கியது
ஆசியாகிய அத்திருவாக்கின்றிறம் என்றும் உரைப்பர்
ஆலாலசுந்தரம்பிள்ளை. 35
|