902. ஒருமகள் கூந்த றன்னை வதுவைநா ளொருவர்க்
                                 கீந்த
பெருமையார் தன்மை போற்றும் பெருமையென்
                            னளவிற் றாமே?
மருவிய கமரிற் புக்க மாவடு விடே!லென் னோசை
யுரிமையாற் கேட்க வல்லார் திறமினி யுரைக்க
                                லுற்றேன்.
37

     (இ-ள்.) வெளிப்படை. ஒரு மகளாரின் கூந்தலினை அவரது
மணநாளில் ஒருவராகிய மாவிர தியர்பால் அரிந்து நீட்டிய
பெருமையுடைய மானக்கஞ்சாறனாரது திறத்தினைத் துதிக்கும்
பெருமை எனது அளவில் அடங்குவதாகுமோ? ஆகாது. பொருந்திய
நிலத்தின் வெடிப்பிலே சிந்திய மாவடுவினை இறைவர்
ஏற்றுக்கொண்ட "விடேல்" என்னு மோசையினை உரிமையினால்
கேட்கவல்லாராகிய அரிவாட்டாயநாயனாரது சரிதத்தினை
இனிப்பேசத் தொடங்குகின்றேன்.

     (வி-ரை.) இது கவிக்கூற்று. ஆசிரியர் தமது மரபின்படி
இதுவரை கூறி வந்த சரிதத்தை முடித்துக்காட்டி இனிப் பேசப்புகும்
சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.

     ஒருமகள் - ஒருவர் - இரண்டிடத்தும் ஒப்பற்றதன்மை
குறித்தது காண்க. ஒருமகள் சில நாட் பிள்ளைப்பேறின்றிச்
சிவபெருமானை வழுத்திப் பெற்றெடுத்து அரிதின் வளர்த்த மகளார்
என் முன் (875-876) விரித்தோதிய அருமைப்பாடுகள் எல்லாம்
தோன்ற ஒருமகள் என்றார். ஒருமகள் - ஒரே மகள்; இரண்டாவது
மகளாதல் மகனாதல் இல்லாதவர் என்ற குறிப்புமாம். ஒருமகள் -
கலிக்கமனாருக்கு மணவாட்டியாகக் கொடுக்க இசைவு
தந்துவிட்டபடியால் தமது மகள் என்ற உரிமை நீங்கி, அவருக்கு
உரிமையாயினர்; ஆதலின் தம்மகள் என்னாது ஒருமகள் என்றார்
என்ற தொனியும் காண்க. திலகவதியம்மையார் சரித நிகழ்ச்சியினை
உன்னுக. இவ்வாறு பிறர்க்குரியவராயினவரின் கூந்தலை அரிந்து
கொடுத்ததும் செயற்கரியதாம் என்க.

     கூந்தல் தன்னை - தன்னை - என்றது கட்டுரைச் சுவைபட
வந்தது. சிறப்பும்மை தொக்க தென்றலுமாம்.

     வதுவைதாள் - பெண்களின் கூந்தலரிந்து முண்டிதமாக்குதல்
வைதவியம் குறிக்கும் நிலைகாட்டுமாதலின் அதனை ஒருவரும்
செய்யார்; மேலும் மங்கலஞ் செய்வதாகிய மணநாளில் அதனைச்
செய்ய ஒருப்படுவாரிலர்; இன்னும் இது உயிர் கொடுத்தலினும்
கொடியதாய் ஆயுள் உள்ளனவும் அவ்வம்மையாரைத் துன்ப
நிலையில் வைப்பதாகுமாதலின் எவரும் இது செய்யத் துணியார்
என்ற குறிப்புக்கள் காண்க.

     ஒருவர் - சைவ மாவிரத முனிவர் என்ற திருநீற்றுநெறித்
தொடர்பு ஒன்றல்லாது வேறு ஒரு தொடர்ச்சியும் பற்றாத ஒருவர்
என்பதும் குறிப்பு. அவரே ஒப்பற்றவர் - சிவபெருமான் என்பதும்
குறிப்பாம்.

     ஈந்த பெருமையார் - ஈந்த - ஈதல் என்பது
சொல்லாற்றலால் இழிந்தோனிரப் புரை குறிக்கும். 1"ஆவிற்கு நீரென்
றுரைப்பினு நாவிற், கிரப்பி னிளிவந்த தில்" (குறள்) என்பது
நீதியாதலின் மாவிரதியார் கூந்தலைக் கேட்ட இரப்பின்

      இழிபும், இரப்புப் பொருளாகிய கூந்தல் தலையின் இழிந்த
மயிர் எனப்படும் இழிபும், கருதி ஈந்த என இழிந்தோ னிரப்புரைக்
குறிப்புப்படக் கூறினார் போலும்.

     ஈந்த அருங்கொடையினாற் போந்த பெருமை என்பார் ஈந்த
பெருமை என்றார். பெருமையார் - ஈந்த செயற்கரியதாகிய செயல்
செய்த பெரியர்.

     போற்றும் பெருமை - பெரியர் தன்மையைப் போற்றுவது
பெருமை தருவதாம் என்றுணர்த்தியவாறு, பெருமையார் பெருமை
போற்றும் தன்மை யென் னளவிற்றாமே?
என்று கூட்டி
யுரைப்பதுமாம்.

     என் அளவிற்று ஆமே? - ஆகாது என ஏகார வினா
எதிர்மறை குறித்தது.

     இவ்வாற்றால் இதுவரை கூறிய மானக்கஞ்சாறனாரது
சரிதத்தைச் சாரமாக வடித்து எடுத்து முடித்துக்காட்டிய அழகு
கண்டுகளிக்க.

     மருவிய.....வல்லார்திறம் - இஃது மேல்வரும்
அரிவாட்டயனார் சரிதசாரத்தை முகவுரையாகச் சுருக்கி
அறிவித்தபடியாம். இதனையே அனுவாதமுகத்தால் அப்புராண
முடிவில் "முன்னிலை கமரேயாக முதல்வனார் அமுது செய்யச்,
செந்நெவினரிசி சிந்தச்செவியுற வடுவி னோசை, யந்நிலை கேட்ட
தொண்டர்" (925) என்றது காண்க. இங்கு "மாவடு" விடேல்
"என்னோசை உரிமையாற் கேட்க வல்லார்" என்று
எதிர்காலத்திலும், "வடுவின் ஓசைகேட்ட தொண்டர்" என்று
பின்னர் (925) இறந்த காலத்திலும் கூறியதும் குறிக்கொள்க.

     மருவிய கவர் - மருவிய - பொருந்திய. இறைவரை
ஊட்டக்கொண்டு போயின செந்நெல்லரிசி முதலிய சிவ
சாதனங்கள் மருவிய
(916) எனவும், அன்பரது கழுத்தரியும்
அரிவாளைப் பற்றும் ஐயரது வீசிய திருக்கையும் மாவடு "விடேல்
விடேல்" என்னும் ஓசையும் ஒக்கவே எழுதற்கிடமாய் மருவிய
(920) எனவும், முதல்வர் அமுதுசெய்யும் முன்னிலையாக மருவிய
(925) எனவும் வரும் சரித நிகழ்ச்சிகள் பலவும் மருவ மருவிய
என்ற அழகு காண்க.

     "விடேல்" - என் ஓசை - 920 பார்க்க. இது மாவடுவை
விசையிற் கடித்தலின் உளதாம் ஓசை. "வடுவின் ஓசை" (925), மாவடு
"விடேல் விடேல்" என்றோசையும் (920) என்றவை காண்க.

     உரிமை - அவ்வோசையினைக் கேட்கும் தகுதி. இத்தகுதி
918 - 919 பாட்டுக்களில் விரித்துரைக்கப்பட்டது காண்க.

     கேட்க வல்லார் திறம் - கேட்கும் உரிமையும்
கேட்டற்குரிய வன்மையும் உடையவர். அன்பினால் உரிமையும்,
அன்பு முறுகிய நிலையில் வன்மையும் உளவாவன என்க. திறம் -
சரித வரலாறு. வல்லார் என்றதற்கேற்ப இதனைத் திறம் என்றார்.
வல்லாராயின செய்தி என்க.

     பெருமையார் தம்மை - என்றதும் பாடம். 37


     1"நல்லரர் குணங்க ளுரைப்பதுவும் நன்றே" என்ற நீதி நூலும்
காண்க.