903. வரும்பு னற்பொன்னி நாட்டொரு வாழ்பதி
சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென்க ணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்பொழி யுங்கண மங்கலம்.
   1

     903. (இ-ள்.) வெளிப்படை. புனல் வருகின்ற காவிரி பாயும்
நாட்டில் வாழ்வுடைய ஒரு பதியாகும். சுரும்புகள் வண்டுகளோடு
சூழ்ந்து முரல, விரும்பப்படும் மெல்லிய கண்களுடைய வாய் விட்டு
நீளும் சுரும்பு தேனினைச் சொரிதற் கிடமாகிய கணமங்கலம் என்ற
ஊர்.

     (வி-ரை.) புனல்வரும் பொன்னி - என மாற்றுக. என்றும்
பொய்க்காமலும் பருவம் மாறாமலும் நீர் வருகின்ற காவிரி என்க.
"பூந்தண் பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும் புனல்நாட்டு"
(சண்டீசர் - புரா - 1) என்றது காண்க. இவ்வாறன்றி வருபுனல்
என்றதற்கு அகத்தியரது சிறிய கமண்டலத்தினின்றும் பெருகிவரும்
என்றுரைப்பாருமுண்டு.

     வாழ் ஒருபதி என்க. வாழ்பதி - முக்காலத்துக்கும்
பொதுவாகிய வினைத் தொகை. பதியில் உள்ளாரது வாழ்வு பதியின்
மேலேற்றப்பட்டது. வாழ்விக்கும் பதி எனப் பிறவினையாகப்
பொருள் கொள்ளலுமாம். ஒருபதி - ஒரு - ஒப்பற்ற. இஃது இச்சரித
நிகழ்ச்சிப் பெருமையின் விளைவாகிய சிறப்பு.

     சுரும்பு - ஆண் வண்டு; வண்டு - பெண் வண்டு: இது மரபு
வழக்கு. ஒடு உருபினைப் பெண்வண்டொடு புணர்த்திக் கூறியது
சிறப்பு நோக்கி. "சோலையில் வண்டினங்கள் சுரும்போடிசை முரல"
(திருவாரூர் - வியாழக்குறிஞ்சி - 2) "தேனும் வண்டு மின்னிசை
பாடுந் திருப்பாசூர்" (காந்தாரம் -11), "சுரும்புந்தும்பியும் சூழ்
சடையார்" - (தண்டலை நீணெறி - 1) என்ற ஆளுடையபிள்ளையார்
தேவாரங்களும் பிறவுங் காண்க. வண்டு - தேன் வண்டு
என்பாருமுண்டு.

     முரன்றிட - பண் பாடி ஒலிக்க. ("கமலவண்டு), தூய
நீறுபுனை தொண்டர்க ளென்னச் சென்று சென்றுமுரல் கின்றன
கண்டு" (242) பார்க்க. முரலா நிற்பக் கரும்பு தேன் சொரியும்
கணமங்கலம் எனக் கூட்டிக்கொள்க. இவ்வாறன்றி முரன்றிட -
விரும்பும் மென்கண் உடையக் கரும்பு
வாய்விட்டுத் தேன்
சொரியும் என்று தொடர்புபடுத்திக்கூட்டி, முரன்றிட -
முரன்றிடலால், மெல்லியவாயின கண்கள் உடையவே கரும்பு தேன்
சொரியும் என்று காரணகாரியப் பொருளில் வந்த வினையெச்சமாக
உரைத்தலுமாம். இப்பொருளில், நல்ல பாட்டுக் கேட்டோர் உள்ள
முருகிக் கண்ணீர் பெருக்குமியல்பு குறித்த தற்குறிப்பேற்ற அணியாம்.
இசையினுக்கு சராசரவுயிர்களும் அசேதனங்களும் இளகுவன என்பது
இசையினியல்பாம். ஆனாயநாயனார் புராணம் 30, 31, 34, 36
பாட்டுக்கள் பார்க்க. "மருவியகால் விசைத்தசையா; மரங்கண்மலர்ச்
சினைசலியா; கருவரைவீ ழருவிகளுங் கான்யாறுங் கலித்தோடாழு
(க்ஷ 35) என்றதும் பிறவும் காண்க. இசை பாடினால் அது கேட்டுப்
பசுக்கள் அதிகம் பால் சுரக்கும் என்பதும் உயிர்நூற் சாத்திரிகள்
கண்டவுண்மை. முருகர் - புரா - (4), திருநா - 158-ம் பார்க்க.

     முரன்றிடத் தேன்பொழியும் என்றது பசியாற்றாது
கதறுவோருக்கு உணவு ஈயும் கருணையாளரியல்பையும்
நினைவூட்டுவது காண்க.

     முரன்றிட மென்கண் உடைய - மென்கண் ஆகிஉடைய.
வண்டுகள் பண்முரல, வலிய கணுக்கள் இளகி மெலியவாயின.
இவ்வாறு கணுக்கள் உண்மெலிதலினால் அவற்றின்மேற்
பரவியதோலும் உட்பொதிந்த தேனைக் கட்டித் தாங்கமாட்டாது
விட்டு வாய்பிளந்தது; வாய்விடவே, மிக உள்ளூறிய தேன்
வெளிச்சொரிந்தது எனக் கண்டு கொள்க. கரும்புகளிற் கணுக்களின்
பாகங்கள் கடினமானவை. இவ்வாறன்றி மென்கண் உடைய
என்றதற்கு மெல்லிய கண்களுடைய என்று கூறும் உரை
பொருந்தாமை யறிக. "கருஞ்சகட மிளகவளர் கரும்பு" என்ற
ஆளுடைய பிள்ளையாரது திருக்கழுமலத் (மேகராகக் குறிஞ்சி)
தேவாரத்தினும் கரும்புகளினது கணுக்களின் வன்மை காட்டப்படுதல்
காண்க. கரும்பின் கணு அல்லாத பகுதி மெல்லியனவாதலும்
காண்க.

     கண், வாய் என்ற உறுப்புக்களின் பெயர்களுள் தொனித்தலும்,
கணமங்கலம் என்ற பெயருக்கேற்பப் பலவகை மங்கலப்
பொருள்களையும் சுட்டுதலும் காண்க.

     தேன் - இங்கு - இனிமையுடைய கருப்பஞ்சாறுகுறித்தது.
சொரியும் - சொரிதற் கிடமாகிய.

     இத்தலம் (கணமங்கலம்) திருத்தண்டலை நீணெறிக்கு மிக
அணிமையில் (அதனின்றும் 1/4 நாழிகை) உள்ளதென்
றறியப்படுதலின் அதனை நினைவினிற் கொண்டு, நம்போலியருக்கு
நினைவூட்டும் பொருட்டு அத்தலத்தின் ஆளுடைய பிள்ளையாரது
"விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே, சுரும்புந் தும்பியுஞ்
சூழ்சடை யார்க்கிடங், கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்,
நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே" என்ற திருப்பதிக
முதற்பாசுரத்தின் சொல்லும் பொருளும், யாப்பும் ஆகியவற்றை
அடியொற்றியே ஆசிரியர் அமைத்திருத்தல் சிந்திக்கற்பாலது.
இப்பாட்டிற் கரும்பும், வரும் பாட்டிற் செந்நெல்லுங் கூறியதும்
காண்க.

     கணமங்கலம் - தலவிசேடம் பார்க்க. 1