(இ-ள்.)
வெளிப்படை. செந்நெற் பயிர் நிறைந்த வயல்களிற்
களையாகப் பிடுங்கப்பட்ட தாமரைப் பூக்களை, அவற்றில் முன்னே
சங்கு ஈன்று தங்கியமுத்துக்களைச் சொரிந்திடும்படி நெருங்கிய
மள்ளர்கள் கையிற்கொண்டு தோன்றுவதனால், (அவர்கள்) பங்கய
மாநிதி கொண்ட தேவர்கள் போன்று உள்ளார்கள்.
(வி-ரை.) செந்நெல் - கார் நெல்லினும்
செந்நெல் சிறந்தது.
அன்றியும் இச்சரித நிகழ்ச்சியினைக் காட்டும் சிறப்பும் வாய்ந்தது.
908. 913 பார்க்க. எங்கும் செந்நெல்லேயாகி விளங்கும் தன்மை
குறிப்பிற்காட்டிய படியுமாம்.
கட்ட
- களையப்பட்ட. களைகட்டல் என்பது உழவு மரபு
வழக்கு. தாமரையைக் களையாகக் களையும் வயல்கள் இந்நாளிலும்
பல இடங்களிற் காணவுள்ளன.
செந்தாமரை,
முன்னர் தந்து உமிழ் முத்தம் சொரிந்திட
- தாமரைகளில் முத்து விளைவதில்லை. அவை முத்தம்
சொரிந்திடல் வேண்டுமாயின் பிற இடத்தினின்று பெற்றிருத்தல்
வேண்டும். களையப்படுமுன்பே சங்குகள் அவற்றில் ஏறி
முத்துக்களை ஈன்றன. அம்முத்துக்கள் அங்குத் தங்கிக் கிடந்தன.
பின்னர்க் களையப்பட்ட தாமரை அவற்றைச் சொரிந்தன என
இத்துணையும் அடக்கிச் சுருங்கக் கூறிய அழகு காண்க.
மன்னு
பங்கய மாநிதி - பதுமநிதி. தாமரை
வடிவுடையதொருநிதி. அது குறையாச் செல்வமுடையது. இது
போன்று சங்கு வடிவமுள்ள சங்கநிதி என்ற தொரு நிதியும் உண்டு.
இவையிரண்டினையும் நிதிக்கிழவனாகிய குபேரன் உடையவன்
என்பது மரபு. "சங்கநிதி பதுமநிதி யிரண்டுத் தந்து" என்பது
திருத்தாண்டகம். மன்னு - எடுக்க எடுக்கக் குறையாது நிலைத்த
தன்மை குறித்தது. மாநிதி என்றதனாலும் குறையாத பெருமை
குறிக்கப்பட்டது. நிதி - நிதியுடைய தேவர். ஆகுபெயர். 2