909. |
இந்த
நன்னிலை யின்னல்வந் தெய்தினுஞ்
சிந்தை நீங்காச் செயலி னுவந்திட
முந்தை வேத முதல்வ ரவர்வழி
வந்த செல்வ மறியாமை மாற்றினார். 7 |
|
(இ-ள்.)
வெளிப்படை. இந்த நல்ல திருத்தொண்டினைத்
துன்பம் வந்த காலத்திலும், மனத்தில் விடாதுபற்றிச்செய்கையின்
முடிப்பதனைத்தாம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு அவரைத் தம்மிடத்தே
வைக்க, முன்னாகிய வேதங்களுக்கு முதல்வராகிய சிவபெருமான்,
அவர்க்கு வழி வழி வந்த மிக்க செல்வங்களை அவை போயின
வழி அறிய முடியாதபடி மாற்றினார்.
(வி-ரை.)
நன்னிலை - சிவத் திருத் தொண்டின்
தன்மையாதலின் நன்னிலை என்றார்.
இன்னல் வந்து எய்தினும்
- இன்னல் - துன்பம் - இடையூறு. வந்து எய்தினும்
என்ற
இலேசானே, திருத்தொண்டாதலின் இவர்க்கு இன்னல்
வருதற்கேதுவில்லை என்றும், வேறு காரணங்களால் வரினும்
என்றும் குறிப்பிட்டபடியாம். "இன்பமே யெந்நாளும் துன்பமில்லை",
"ஒன்றினாற் குறையுடையோமல்லோ மன்றே", "யாதுங் குறைவிலார்"
என்பன வாதிய திருவாக்குக்களால் அடியார்கள் எந்நாளும் துன்ப
மில்லார் என்பதறியப்படும். ஆதலின் எய்தினும் சிந்தை
நீங்காச்
செயல் என்றார். "மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார், ஓது காத
லுறைப்பி னெறிநின்றார்" என்றது காண_e8. "இடரினுந்
தளரினுமெனதுறுநோய், தொடரினு முனகழல் தொழு தெழுவேன்"
என்பன வாதியாக ஆளுடையபிள்ளையார் திருவாவடுதுறைப்
பதிகத்தினுட் பாசுரந்தோறும் அருளியவை காண்க.
செயலின்
உவந்து - செயலில் தாம் மகிழ்ந்து அருள்
புரிந்து,
இட
- நித்தியமான தமது உலகத்தில் வைக்க என்க.
இங்கு, இவ்வாறன்றி,
இன்னல் வரினும் மனத்து நீங்காது
வைத்துச் செய்வதில் தாயனார் மகிழ்வடையச் செய்யுமாறு அவரது
செல்வத்தை மாற்றினார் என்றும், இதனைக் கண்டு இன்னல் வரினும்
மன நீங்காது உலகத்தார் மகிழ்ந்திட என்றும் உரைப்பாருமுண்டு.
தாயனாரது சிந்தைநீங்காச் செயலில் இறைவர் உவந்தனர் என்பது
பின்னர் "நன்று நீ புரிந்த செய்கை ... என்று நம் உலகில்
வாழ்வாய்" (923) என அருளியதனால் அறியப்படும்.
முந்தை
வேதம் - எல்லா ஞானங்களுக்கும் -
வித்தைகளுக்கும் - மூலமாகிய வேதம். வேதம் -
வித் - (ஞானம்)
என்ற பகுதியடியாய்ப் பிறந்த பெயர்.
அவர்
வழிவந்த செல்வம் - அவரது முந்தையோர்
காலமுதல் தொன்றுதொட்டு வழி வழி வந்த பழஞ் செல்வம்.
அறியாமை
- இன்ன வழியாற்போயிற்று என்று யாரும்
தெரியமுடியாதபடி. அவர் தெரிய முடியாதபடி என்றலுமாம். முன்
செல்வமிருந்த நிலையை அனுமானத்தாலும் அறிய முடியாதபடி
முழுவதும் என்ற குறிப்பும் காண்க.
மாற்றுதல் - மறைத்தல். 7
|