911. |
அல்ல
னல்குர வாயிடக் கூலிக்கு
நெல்ல றுத்துமெய்ந் நீடிய வன்பினால்
நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்
கொல்லை யின்னமு தாக்கொண் டொழுகுவார், 9 |
911. (இ-ள்.) வெளிப்படை.
துன்பந்தரும் வறுமை ஆயிடவே,
கூலிக்கு நெல் அறுத்தும் உண்மையின் நீடிய அன்பினால்,
அக்கூலியில் நல்ல செந்நெல்லிற் பெற்றவற்றைச் சிவபெருமானுக்கு
விரைவில் இனிய திருவமுதாக ஆக்கி ஒழுகுவாராய், 9
911.
(வி-ரை.) அல்லல் நல்குரவு.
துன்பமே செய்யும்
தரித்திரம் - "நல்குரவென்னும் தொல்விடம் பிழைத்தும்" என்று
திருவாசகம் அருளியபடி, உயிர்போமாறு துன்பமே செய்யும் விடம்
போல்வதாதலின் அல்லல் என்றார். "அல்லலென்செயு மருவினை
யென்செயும் ... அடிமைபூண் டேனுக்கே", "அறவன், சேவடி
யடைந்தன மல்லலொன் றிலமே" என்பனவாதி தேவராத்
திருவாக்குக்களை இங்கு நினைவு கூர்க.
கூலிக்கு
நெல் அறுத்தும் - கூலிக்காக ஏற்று நெல்
அறுத்து என்றது நெற்கூலி பெறும் வழக்கம் குறித்தது. கூலி
-
கூலிக்காகப் பெறும் நெல் குறித்தது. இங்குச் செந்நெலிற்
பெற்றன
என்றும், வரும்பாட்டில் "கூலி எல்லாம் திருவமுதாக்கொண்டு, நீல
நெல்லரி கூலிகொண் டுண்ணும்" என்றும், அதன்மேல் வரும்
பாட்டில் "அறுத்த கூலிகொண்டு இஃது அடியேன்செய்த
புண்ணியம்" என்றும் வருவன காண்க. நெல் முதலிய
விளைபொருள்களையே கூலியாகக் கொடுக்கும் இந்நாள் வழக்கமும்
காண்க. கலியநாயனார் "தக்க தொழிற்பெறுங் கூலி" எண்ணெய்
கொண்டு திருவிளக்கிட்ட சரிதமும் இங்கு நினைவு கூர்க.
அறுத்தும் - உம்மை உயர்வு சிறப்பு. மெய்ந்
நீடிய அன்பினால்
- வாய்மை, தானம், தவம் முதலிய எல்லா நற்குணங்களையும்
நல்குரவு போக்கி விடும் என்பர். ஆனால் தாயனாரிடத்து நல்குரவு
வரினும் அவை குறையாது நீடியிருந்ததற்கு உண்மையன்பே
காரணமாயிற்று என்க. மெய் - உடல் என்று
கொண்டு, மனம்
அன்பினால் நீடிய தன் பயனாக உடலின் முயற்சியிலும் நீடியதனால்
உடம்பால் வருந்திப்பெற்ற கூலிச் செந்நெல்லைத்
திருவமுதாக்கொண்டார் என்றலுமாம். வறுமை முதலிய கேடுகள்
வரினும் மனம் இடுக்கண்பட்டழியாது உடல் வருந்தி முயன்று
அத்துன்பங்களை நீக்கல் வேண்டும் என்ற நீதிநூற் கருத்தினையும்
இங்குச் சிந்திக்க. "தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன்,
மெய்வருந்தக் கூலி தரும்" என்ற திருக்குறளின் சொல்லும்
பொருளும் இங்குப் பொருத்தமுடைமை காண்க.
நல்ல
- குணத்தால் நல்ல. பெற்றன -
கூலியாகப்
பெற்றவற்றை. இரண்டனுருபு தொக்கது.
நாயனார்
- தலைவர் - சிவபெருமான். "அழகிது நாயனீரே"
(774) முதலியவை பார்க்க. தலைவர் என்று குறிக்கும் இப்பெயர்
அவரேபோன்று எம்தலைவர் களாகிய அடியார்களுக்கும்
வழங்குவதாயிற்று.
ஒல்லை
- விரைவாக. நெல் அறுத்துக் கூலிபெற்று வரக்
காலந் தாழ்க்கு மாதலின் அதுவரை இறைவர் பசித்திருப்பாரே
எனக் கருதி விரைவில் ஊட்டுவிக்கும் ஆர்வம் குறித்தது. ஒல்லை
- பழமையாகிய - எப்போதும் உண்பிக்கும் நியதிப்படி என்றலுமாம்.
இன்அமுதா
- அமுதா - அமுதாக - இறைவர்க்கு இனிய
திருவமுது ஆகுமாறு அமைத்துக்கொண்டு.
ஒழுகுவார்
- முற்றெச்சம். ஒழுகுவாராகி - திருஅமுதாக்
கொண்டு - என வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக்கொள்க. 9
|