917. போதரா நின்ற போது புலர்ந்துகா றளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார் மட்கல மூடு கையாற்
காதலா லணைத்து மெல்லாங் கமரிடைச் சிந்தக்கண்டு
பூதநா யகர்தந் தொண்டர் "போவதங் கினியே"
                                  னென்று,
15

    917. (இ-ள்.) போதரா நின்ற ... தப்பி - (இவ்வாறு) போகின்ற
போது உடல் வாடியிருந்ததனால் கால் தளர்ந்து தப்பி; வருந்தி
வீழ்வார் - வருந்தி வீழ்கின்றவரை; மட்கல மூடுகையால் காதலால்
மாதரார் அணைத்தும் - ஆனைந்து கொண்ட மட்கலத்தை மூடும்
கையினால், விழாமற் காக்கும் ஆசையினால் மனைவியார் அவரை
அணைத்தும்; எல்லாம் ... கண்டு - செந்நெல்லரிசி, மாவடு,
செங்கீரை என்ற எல்லாம் நிலப்பிளப்பிலே சிந்த, அதுகண்டு; பூத
நாயகர் தம்தொண்டர் - பூதநாயகராகிய சிவபெருமானுடைய
தொண்டராம் தாயனார்; "இனிஏன் அங்குப் போவது" என்று - "இனி
ஏன் அங்குப் போதல் வேண்டும்" என்று, 15

     917. (வி-ரை.) போதரா நின்றபோது - போதும் பொழுதில்.
போதருதல் - போதல், ஆநின்று - நிகழ்கால இடைநிலை.
போதராநின்ற - போந்து மேல் அடி பெயர்க்கமாட்டாமல் நின்ற
என்ற குறிப்பும் பெற நிற்றல் காண்க.

     புலர்ந்து, கால்தளர்ந்து, வருந்தி, தப்பி, வீழ்வார் என்று
கூட்டுக.

     புலர்தல் - உணவில்லாமையால் உடல் வாடுதல்.

     கால் தளர்தல் - கால்கள் மேல் அடிபெயர்த்தலும், உடலைத்
தாங்குதலும் மாட்டாது நிலைகெடுதல். தப்பி் - போகின்ற நிலையும்
நிற்கின்ற நிலையும் தவறி. புலர்ந்ததனால் கால் தளர்தலும், அதனால்
வருந்தலும், அதனால் தப்புதலும், அதனால் வீழ்தலும் நிகழ்ந்தன
என்ற இம்முறையில் வரும் வினைகளைக் காரணங்குறிக்கும்
வினையெச்சங்களாற் கூறிப்போதல் காண்க.

     மாதரார் - மனைவியார், மாதரார் - கையால் அணைத்தும்
என்று கூட்டிக் கொள்க.

     மட்கலம் - ஆனைந்து கொண்ட கலம். இதனால் ஆன்பெற்ற
ஐந்தினையும் மட்கலத்திற் கொண்டு சென்றார் என்றறியப்படும்.
தாயனார் அரிசி முதலியவற்றைக் கூடையிற் சுமந்து செல்ல,
மனைவியார் அவர்பின் ஆனைந்து ஏந்திச் சென்றார் என
மேற்பாட்டிற் கூறினார். அதனை ஏந்திய கொள்கலம் இன்னதென
அங்குக் கூறாமையின் அது மட்கலமா மென்பதை மட்டும் இங்குக்
குறித்தமுறை காண்க.

     மூடு கை - செல்லும் வழியில் அசுத்தங்கள் வீழாதபடி
காக்கும் முறைபற்றிக் கலத்தைக் கையால் மூடிச் சென்றனர்.
இடதுகையினால் கலத்தை ஏந்தியும் வலது கையினால் அதனை
மேலே மூடியும் சென்ற மனைவியார் அங்ஙனம் மூடிய வலது
கையினால், கணவனாரை வீழாவண்ணம் அணைத்தனர் என்க.

     வீழ்வாரை - மாதரார் - கையால் - காதலால் - அணைத்தும்
என்று மாற்றிப் பொருள் கொள்க. இங்ஙனம் முறையிற் கூறாது
மாதரார் - வீழ்வாரை - என முன் வைத்துக் கூறியது கால்
தப்பியதைக் கண்ட மனைவியார் அவர் வீழாமுன் தடுக்க
அணைத்ததனை உணர்த்தும் பொருட்டு. கால் தப்பிய நிலைக்கும்
வீழ்கின்ற நிலைக்கும் இடையில் மாதரார் அணைத்த செயல்
நிகழ்ந்தமையின் அதனை அம்முறையே நாடகச் சுவைபடக் கூறிய
நயம் காண்க. வீழ்வார் - வீழ்வாரை; இரண்டனுருபு விரிக்க.

     மட்கலமும் - கூடை (916)யுமே அல்லது நல்குரவு (911)
ஆயின நிலையில் உள்ளார் எளிதிற்பெறும் கொள்கலங்களாம்
என்பதும் காண்க.

     காதலால் - கணவனார் வீழாமற் றடுக்கும் ஆசையாலும்,
அதற்கு மேலாக, அவ்வாறு தடுப்பதின் மூலம், அவர்
இறைவனுக்காகச் சுமந்து சென்ற கூடையினுள்ள பொருள்கள்
வீழாமற் றடுக்கும் ஆசையாலும் என்க.

     கமர் - நிலவெடிப்பு. அக்காலம் நிலங்களிற் பயிர்
அறுக்கப்பட்டு நிலம் வெடிப்புக்களுடன் உள்ள காலமென்ப
தறியப்படும். தாயனார் பேறு பெற்றது தை மாதத்து ஆதிரை
நாளாதலும் சிந்திக்க. இந்நிலம் நாயனாரது ஊராகிய
கணமங்கலத்துக்கும் அவர் வழிபட்ட திருத்தண்டலை நீணெறிக்கும்
இடையில் உள்ள வயல். இது இந்நாள் வழக்கிலும் காணப்படும்.
இடை
- ஏழனுருபு.

     பூதநாயகர் - சிவ பூதகணங்களின் தலைவர் - சிவபெருமான்.
ஐம்பூதங்களில் ஒன்றாகிய நிலத்தினின்று வெளிப்பட்டு நாயனார்க்கு
அருள்புரிகின்றாராதலின் இங்கு இப்பெயராற் கூறினார் என
விசேடவுரை காண்பர் ஆலாலசுந்தரம்பிள்ளை.

     இனி அங்குப் போவது ஏன் என மாற்றுக. ஏன் - என்ற
வினாப் பயனின்மை குறித்தது. தொண்டர் - கண்டு - இனி ஏன் -
போவது? - என்று (911), என -
ஊட்டியை அரியலுற்றா(ராய்) (918),
என்னா - அரியலுற்றார் (ஆகிய அவர் ) - ஆவார் ஒத்தார் (919)
என இம்மூன்று பாட்டுக்களையும் கூட்டி முடிக்க. அங்கு -
திருக்கோயிலுக்கு.

     என்னென்று - என்பதும் பாடம். 15