922. |
"அடியனே
னறிவி லாமை கண்டுமென் னடிமை
வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங் கமுதுசெய் பரனே
போற்றி!
துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி!
பொடியணி பவள மேனிப் புரிசடைப் புராண
போற்றி!"
20 |
|
922.
(இ-ள்.) வெளிப்படை. "அடியேனது
அறிவில்லாமையைக் கண்டு வைத்தும் எனது அடிமையை வேண்டிப்
பொருட்படுத்தி நிலத்தின்மேற் கமரிலே வந்து இங்கு அமுதுசெய்
பரனே போற்றி! துடிபோன்ற இடையையுடைய உமை யம்மையாரை
ஒரு பாகத்திலுடைய தூய நல்ல சோதியே போற்றி!; திருநீற்றினை
யணிந்த பவளம் போன்ற திருமேனியையும், புரிசடையையும் உடைய
புராணனே போற்றி!". 20
922. (வி-ரை.)
அறிவிலாமையாவது- உள்குவா ருள்கிற்
றெல்லா முடனிருந்தறிவார் இறைவர் என்றும், அமுது
செய்தருளவேண்டிக் கொண்ட அவ்வேண்டுதலின் கண்ணே
நிறைந்து அவ்வாறே செய்தருளுவார் என்றும் துணிவுற அறியாது
ஐயப்பட்டு அமுது செய்ததற்கு அறிகுறியாக "விடேல்" என்ற ஓசை
வேண்டுதல். என் அடிமை வேண்டி - யான் அடியவனாய்
உளனாதலை விரும்பி. அடிமைச் செயலை விரும்பி என்றலுமாம்.
இங்கு
அமுதுசெய் பரன் - இங்கு - கமரில்; அமுதுசெய்
- விடேல் என்றோசையாற் புலனாயினபடி அமுது செய்தருளிய.
பரன் - பெரியவன் - மகத்தானவன். தாழ்ந்த இடத்தில்
வெளிப்பட்டதும், அறிவிலாமை கண்டும் அடிமை வேண்டி அமுது
செய்ததும், அதற்கடையாளமாக ஓசை கேட்பித்ததும் அவரது
மகத்துவத்தை விளக்கியன என்பது குறிப்பு. பரன் (எல்லாப்
பொருள்கட்கும்) அப்பாற்பட்டவன் என்றலுமாம்.
துடி
இடை பாகமான - துடி - உடுக்கை. மேலும் கீழும்
பெருத்து, இடை சிறுத்துள்ளமையால், இருமுகமும் விரிந்து
நடுச்சிறுத்த உடுக்கை, இடைக்கு, மெய்பற்றி வந்த உவமம்.
துடியிடை
- இடையினையுடைய உமையம்மையார்.
அம்மையார் உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை. பாகம் தமக்குச் செய்த அருள் குறிப்பதாகலின் இவ்வாறு
தொடர்ந்து கூறினார்.
பொடி
- திருநீறு. பவளமேனி - இறைவனது
திருமேனி
வண்ண பேதங்களாற் றாக்கப்படாத பளிங்கு போன்றதாம்.
சுத்தஸ்படிக சங்காசம் என்பர் வடவர். "சுத்தமார் பளிங்கின்
பெருமலை" என்பது தமிழ்மறை. ஆயினும் "பொன்மைநீலாதி
வண்ணம் பொருந்திடப் பளிங்கிவற்றின், தம்மையாய் நிற்கும்"
என்பவாதலின், "எரியலா லுருவ மில்லை" என்றபடி நின்ற
எரியுருவத்தையே பவளம் போலக் காட்டியது என்பதாம்.
"பவளம்போல் மேனியிற் பால்வெண் ணீறும்" (திருவிருத்தம் -
திருக்கோயில்) என்ற தமிழ்மறை இதனை நினைவு கூர்விப்பதாம்.
புரிசடை
- புரி - பலபுரியாக - வடமாக - திரித்த. புரிதல்
- எப்போதும் சொல்லுதல் என்றுகொண்டு, கங்கை, பிறை, நகுதலை
முதலியவற்றைத் தாங்கிக் கொண்டு உலகை வாழ்வித்த கருணை
கருதி, அறிஞர் யாவராலும் எப்போதும் துதித்து எடுத்துச்
சொல்லப்படும் எனவும், "கபர்த்திநே நம" என்று சிவாட்டோத்
தரத்தில் துதித்துச் சொல்லப்படும் எனவும் உரை கொள்ளுதலுமாம்.
புராணன்
- பழைமையானவன் - முன்னைப் பழம்பொருட்கு
முன்னைப் பழம் பொருள். எனக்கு அருள் செய்தாய்; அருள் உன்
இயல்பு; அது உனக்குப் பழமையாயுள்ளது என்றதாம். 20
|