923. என்றவர் போற்றி செய்ய விடபவா கனனாய்த்
                               தோன்றி,
"நன்றுநீ புரிந்த செய்கை; நன்னுத லுடனேகூட
என்றுநம் முலகின் வாழ்வா" யென்றவ ருடனே
                                நண்ண
மன்றுளே யாடு மையர் மழவிடை யுகைத்துச்
                              சென்றார்.
21

     923. (இ-ள்.) வெளிப்படை. என்று அவர் துதிக்க,
இடபவாகனராக வெளிப்படக் காட்சிகொடுத்து, "நீ புரிந்த செய்கை
நன்று; நன்னுதலையுடைய உனது மனைவியுடன் என்றும் நீங்காது
நமது உலகத்தில் வாழ்வாயக!" என்று அருளிச்செய்து,
அம்பலத்தாடும் ஐயர், அவர் தம்முடனே நண்ணத், தமது இளைய
விடையினை ஊர்ந்து எழுந்தருளிப் போயினர். 21
    

      923. (வி-ரை.) என்று அவர் போற்றி செய்ய - அவர் -
வெருக்கொடு - நீங்க - நீங்கி - நீட நோக்கி - கூப்பி - நின்று -
போற்றி - போற்றி - போற்றி என்று போற்றி செய்ய என்க.

     அவர் - "மாசறு சிந்தை அன்பர்" என மேற்பாட்டிற் கூறிய
அவர்.

     நின்று போற்றி செய்ய - ஐயர் - தோன்றி - "வாழ்வாய்"
என்று - அவர் உடனே நண்ண - சென்றார் - என இம்மூன்று
பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க.

     "நன்று......வாழ்வாய்" - இது இறைவர் தாயனாரை நோக்கி
அருளிய திருவாக்கு. நன்று நீபுரிந்த செய்கை - தாயனாரது
செயற்கருஞ்செய்கையைப் பாராட்டிய அருமைப்பாடு குறித்தது.
"நாம் சொல்லிய அற நுல்களில் தற்கொலை தீது என்று விதித்த
நாமே, எம்மிடத்து அன்பின்றிறத்தால் செய்த இதனை நன்று என
கொள்ளற்காயது இச்செயல்" என்றுரைக்கவும் நின்றது காண்க.

     நன்னுதல் - நல்லநுதலினை யுடைய உன் மனைவி. உடனே
கூட
- "நைகரமில்லா அன்பின் நங்கை கையடகு கொய்து,
பெய்கலத் தமைத்து வைக்க" (914) எனவும், "வடநெடு வான மீனே
யனையவர் தண்ணீர் வார்க்க" (915) எனவும் கூறிய வாற்றால்
அடியார்பணியும், "பின்புபோம் மனைவியார்ஆன் பெற்றஅஞ்
சேந்திச் சென்றார்" (916) என்றும், "மாதரார் - மட்கல மூடு கையால்
காதலாலணைத்தும்" (917) என்றும் கூறியவாற்றால் அரன்பணியும்
உடனிருந்து புரிந்தனராதலின் தமது நாயகருடனே கூடச் சிவலோக
வாழ்வு பெற்றனர். திரு நீலகண்ட நாயனாரது மனைவியார்க்கும்
(402), இயற்பகைநாயனாரது மனைவியார்க்கும் (437), இளையான்
குடிமாறநாயனாரது மனைவியார்க்கும் (465) இன்னும் இவர்கள்
போன்றுள்ள தேவியர்க்கும் இவ்வாறே இறைவர் அருளியது இங்கு நினைவு கூர்க.

     நம் உலகில் என்றும் வாழ்வாய் என்க. மீளாத நிலையில்
சிவலோக வாழ்வு பெற்றிருப்பாய். என்று - என்று அருளிச்செய்து.
அவர் உடனே நண்ண
- தாயனாரும் மனைவியாரும் தம்முடனே
வர. சென்றார் - எழுந்தருளிப் போயினார்.

     ஒன்றி நம்முலகில் - என்பதும் பாடம். 21