925. முன்னிலை கமரே யாக முதல்வனா ரமுது செய்யச்
செந்நெலி னரிசி சிந்தச் செவியுற வடுவி னோசை
யந்நிலை கேட்ட தொண்ட ரடியிணை தொழுது
                                 வாழ்த்தி
மன்னுமா னாயர் செய்கை யறிந்தவா வழுத்த
                                லுற்றேன்.
 23

     (இ-ள்.) செந்நெலின் அரிசி சிந்த - செந்நெல்லரிசி
முதலியவை சிந்தியிட; கமரே முன்னிலையாக - அவை சிந்திய
அந்தக் கமரே முன்னிலையாக; முதல்வனார் அமுதுசெய்ய -
இறைவர் திருஅமுது செய்தருள; அந்நிலை - அந்நிலையில்;
வடுவின் ஓசை செவியுறக்கேட்ட தொண்டர் - மாவடுவினது
"விடேல்" என்ற ஓசையைத் தம் காதுகள் பொருந்தக்கேட்டதாகிய
பேறுபெற்ற தொண்டராகிய தாயனாரது; அடியிணை ... வாழ்த்தி -
திருவடியிணையைத் தொழுது துதித்து, அத்துணையானே;
மன்னும் ... உற்றாம் - நிலைபெற்ற ஆயனாரது செய்கையினைத்
தெரிந்தபடி துதிக்கத் தொடங்குகின்றேன்.

     (வி-ரை.) முன்னிலை - இறைவர் அமுது செய்தருளுதற்கு
முன்னலையாயுற்றது. கமரே முன்னிலையாக என்க. இதன்
முன்னர்த் தாயனாரது அமுதுகொள்வதற்கு முன்னிலையாயுற்றது
சிவலிங்கத் திருமேனி; இங்கு அந்த முன்னிலை கமரேயாயிற்று.
முன்னிலை - வெளிப்படும் இடம். அபிவியத்தி ஸ்தானமென்பர்
வடவர். இறைவர் அமுது செய்தருள உற்ற முன்னிலைகள்
இரண்டேயென்பர்; அவை சிவலிங்கத் திருமேனியும் சங்கமத்
திருமேனியும் என்பன. "தாவர சங்க மங்க ளென்றிரண் டுருவினின்று,
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்"
(சிவஞானசித்தி 2, 28) என்றதனாலறிக. இங்கு இறைவர் பூசை
கொண்டது தாவரமாகிய சிவலிங்கத் திருமேனியாம். இந்தக் கமரே
சிவலிங்கமாயிற்று என்க. முன்னிலை என்பது இங்குச் சிவலிங்கம்
என்ற பொருளில் வந்தது என்பது ஸ்ரீமத் செப்பறைச் சிதம்பர
சுவாமிகள் கண்ட உரைக்குறிப்பு. முன்னிலை - காரணம் என்பர்
ஆலாலசுந்தரம்பிள்ளை.

     செந்நெலின் அரிசி - முதன்மைபற்றி அரிசியைச்
சொன்னவதனால் உதவியுணவாகிய செங்கீரையும் மாவடுவும் இனம்
பற்றி உடன்கொள்ளப்படும்.

     அந்நிலை - அவ்விடத்து - அப்பொழுதே. அரிசி சிந்த,
முதல்வனார் கமரே முன்னிலையாக அமுதுசெய்ய, அந்நிலை
வடுவின் ஓசை செவியுறக்கேட்ட தொண்டர் எனக் கூட்டிக்கொள்க.

     முன்னிலை......தொண்டர் - இவ்வாறு ஆசிரியர்
எடுத்துக்காட்டிய பெருமைபற்றியே "செய்யி லுகுத்த திருப்படி
மாற்றதனை, ‘யைய! விதுவமுது செய்' கென்று - பையவிருந், தூட்டி
யறுத்தவர்க்கே யூட்டி யறுத்தவரை, நாட்டியுரை செய்வதென்னோ
நாம்" (20) எனவும், "கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில்,
வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லும், அகமார்க்கத்
தாலவர்கள் மாற்றினர்கா ணையா, சகமார்க்கத் தாலன்றே தான்"
(50) - (திருக்களிற்றுப்படியார்) எனவும் விதந்து எடுத்து
ஞானசாத்திரம் ஓதியதும் காண்க.

     மன்னும் ஆனாயர் - இவ்வுலகத்திலிருந்து குழல்
வாசித்தபடியே அருளால் அந்நின்ற நிலையே ஐயர்மருங்கு
அணைந்து, அத்திருக்குழல்வாசனை முதல்வனார் எப்போதும்
கேட்க அவர் மருங்கு அணைந்து என்றும் உள்ளாராதலின் (964)
மன்னும்
- நிலைபெறும் என்றார். இவ்வுலகத்தில் போந்த
அந்நிலையே வீட்டுவகத்திலும் மன்னும் என்ற குறிப்புக் காண்க.

     ஆசிரியர் தமது மரபின்படி இதுவரை கூறிவந்த சரித்திரத்தின்
சாரத்தை வடித்து எடுத்து முடித்துக் காட்டி, இனிமேல் வரும்
சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.

     செய்கை - திருவைந் தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட
பண்ணிசையினை வேய்ங்குழலில் வாசித்து உலகெலாம்
இசைமயமாக்கி, அதுவே ஐயன்றன்றிருச் செவியினருகணையப்
பெருக்கிய அருஞ்செய்கை (960 - 961). திருக்குழல்வாசனை என்பர்
ஆசிரியர். 23