927.
நீவி நிதம்ப வுழத்தியர் நெய்க்குழன் மைச்சூழல்
மேவி யுறங்குவ மென்சிறை வண்டு; விரைக்கஞ்சப்
பூவி லுறங்குவ நீள்கயல்; பூமலி தேமாவின்
காவி னறுங்குளிர் நீழலு றங்குவ கார்மேதி.
  2

     (இ-ள்.) நீவி......வண்டு - கொய்சகம் வைத்து உடுத்திய
ஆடையை மேலணிந்த அல்குலையுடைய உழத்தியர்களது நெய்
பூசிய குழலின் கரிய சூழலைப் பொருந்தி மெல்லிய சிறை
யினையுடைய வண்டுகள் உறங்குவன; விரை.....கயல் - வாசனை
யுடைய தாமரைப் பூவில் நீண்ட கயல் மீன்கள் உறங்குவன;
பூமலி........கார் மேதி. தேமாஞ் சோலையின் நறிய மணமும்
குளிர்ச்சியு முடைய நீழலில் கார்மேதி உறங்குவன.

     (வி-ரை.) நீவி - கொய்சகம். பெண்கள் ஆடை உடுக்கும்
வகையுள் ஒன்று; உழத்தியர் உடுக்குமியல்பு குறித்தது.

     நெய்க்குழல் - நெய் - மயிர்ச்சாந்து. மைச் சூழலில் என்க.
கரிய குழலின் செறிவு.

     மென் சிறைவண்டு - நீள் கயல் - கார் மேதி என
இம்மூன்றின் தன்மைகளை உணர்த்துமாறு அடைமொழிகள்
புணர்த்திய நயம் காண்க.

     வண்டும், கயலும், மேதியும் இவைதானும் முறையே நெய்க்
குழற் குழலிலும், விரைக் கஞ்சத்திலும், நறுந்தேமா நீழலிலும்,
உறங்குவ என்றதனால் இச்சரிதத்தினுள் இசையின் வாசனை யறியாத
"நிற்பனவும் சரிப்பனவும் இசை மயமாய், மெய் வாழும் புலன்கரண
மேவிய வொன்றாயின" என்ற நிகழ்ச்சியைப் பகுத்தறிவற்ற
அஃறிணையாகிய இப் பிராணிகளின் வைத்துக் கண்டு காட்டும்
ஆசிரியரது தெய்வக் கண்காட்சித்திறம் கண்டு களிக்க. 961
முதலியவற்றில் உரைத்தவையும் பார்க்க.

     வண்டு, குழற்சூழல் மேவி உறங்குவ; கயல், பூவில் உறங்குவ;
மேதி, நறு நீழல் உறங்குவ எனக்கூட்டி உரைத்துக் கொள்க. வைப்பு
முறை மாற்றி எழுவாய்கள் மூன்றும் பின் வைத்தோதினார், அவை
உறக்கத்தின் மயங்கியதும் வாசனையின் மயங்கியதும் ஆகிய
மாறுதல் அறிவிக்கும் குறிப்புப்பற்றி. 2