928.
|
வன்னிலை
மள்ள ருகைப்ப வெழுந்த மரக்கோவை
பன்முறை வந்ததெழு மோசை பயின்ற முழக்கத்தால்
அன்ன மருங்குறை தண்டுறை வாவி யதன்பாலைக்
கன்ன லடும்புகை யான்முகில் செய்வ கருப்பாலை. 3 |
(இ-ள்.)
கருப்பாலை - கரும்பு ஆலைகள்; வன்னிலை.........
முழக்கத்தால் - வலிமையினால் மள்ளர்கள் செலுத்த எழுந்த
இணைமரங்கள் பல முறையும் சுற்றி வருதலால் எழும் ஓசை பயின்ற
முழக்கத்தாலும்; அன்னம்......புகையால் - பக்கங்களில் அன்னங்கள்
தங்குகின்ற குளிர்ந்த துறையையுடைய வாவிகளின் பக்கத்தில்
கருப்பஞ்சாறு காய்ச்சுகின்ற புகையினாலும்; முகில் செய்வ -
முகிலின் காட்சி போன்ற தன்மையைக் காட்டுவன.
(வி-ரை.)
வன்னிலை - வலிய நிலை. மள்ளர்
வன்னிலையால்
உகைப்ப என்க. வலிய நிலையாவது வலிய கரும்பினை அடுதற்குரிய
வன்மை. நிலை - நிலையினால். வன்னிலையான
மள்ளர் என்று
கூட்டி உரைத்தலுமொன்று.
மரக்கோவை
- கரும்பு அடுதலுக்காக - சாறு பிழிதலுக்காக
- மரங்களை இணைத்துச் சுற்றிடும் ஆலையமைப்பு.
பன்முறை
வந்து எழும் ஓசை - பல முறையும் ஆலையைச்
சுற்றிவரச் செய்தலால் உளதாம் ஓசை. முழக்கம் -
பேரோசை.
வந்து - வருதலால். ஆலையாக இணைத்த மரங்கள் சுற்றுதலாலும்,
அவை வலிய கரும்பினை உடைத்துச் சாறு பிழிதலின் உண்டாகும்
வலிய முயற்சியாலும் எழும் ஓசை பெரிதாம் என்க. "கருஞ்சகட
மிளகவளர் கரும்பு" என்ற ஆளுடையபிள்ளையாரது திருக்கழுமலத்
தேவாரத்தால் ஆலைக்கும் வலியனவாயுள்ள கரும்புகளின் நிலை
குறிக்கப்பட்டது காண்க.
ஓசை
பயின்ற முழக்கம் - பல ஓசைகளும் கூடியதனால்
முழக்கமாயிற்று. பயின் - பல ஒன்று கூடுதல்
குறித்தது. நீங்காத
என்றலுமாம்.
முழக்கத்தால்
- புகையால் - வாவியதன் பால் - கருப்பாலை
- முகில் செய்வ எனக் கூட்டி முடிக்க.
முழக்கத்தாலும்
புகையாலும் முகில்செய்வ என்பதாம்.
எண்ணும்மைகள் தொக்கன. செய்வ - உவமவுருபு.
உருவும்
வினையும் பற்றி வந்த உவமை.
அன்னம்
மருங்கு உறை - என்பது வாவியின் சிறப்பு.
அன்னங்களின் கூட்டம் வாவியினின்று மேற்கிளம்பும் வெண்மேகம்
ஆகவும், புகை - சூல் கொண்ட மேகம் ஆகவும்
உருவகப்படுத்திக்
கொள்க.
கன்னல்
அடும்புகை - கருப்பஞ் சாற்றைக் காய்ச்சுதலால்
எழும்பும்புகை. கன்னல் இங்கு அதன் சாற்றுக்கு ஆயிற்று
ஆகுபெயர்.
கருப்பாலை
- கரும்பு அடுகின்ற ஆலை. கருப்பாலை
என்பது மரபு வழக்கு.
சூடு
பரப்பிய பண்ணைகள் உள்ளன (926); அவற்றின் பக்கம்
வயல்களில் உழத்தியர் உழவு தொழில் பலவும் செய்தனர்;
பண்ணைகளின் பக்கத்தில் மாஞ் சோலைகளும் வாவிகளும் உள்ளன
(927); அச்சோலைகளின் பக்கம் கரும்புப் பயிர் உண்டு; கரும்பு
ஆலைகளின் முழக்கமும் புகையும் அவ்வாவிகளின் பக்கத்தில்
மேகங்கள் கூடியன போன்ற தோற்றம் விளைத்தன (928) என
இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து பொருள்கொள்க.
நீர்நிலையின் பக்கம் மேகம் கூடுமியல்பும் குறிக்க. 3
|