929.
|
பொங்கிய
மாநதி நீடலை யுந்து புனற்சங்கந்
துங்க விலைக்கத லிப்புதன் மீது தொடக்கிப்போய்த்
தங்கிய பாசடை சூழ்கொடி யூடு தவழ்ந்தேறிப்
பைங்கமு கின்றலை முத்த முதிர்க்குவ பாளையென. 4 |
(இ-ள்.)
பொங்கிய......... சங்கம் - பெருகிய பெருநதியுன்
நீண்ட அலைப்புனல் உந்திய சங்குகள்; துங்க........தொடக்கிப் போய்
- பெரிய இலைகளையுடைய வாழைப் புதல்களின் மேலே
தொடர்ந்து சென்று; தங்கிய.......தவழ்ந்து - அந்த வாழையின் பசிய
இலைகளைச் சுற்றிய கொடிகளின் வழியே தவழ்ந்து;
பைங்கமுகின்தலை - பசிய கமுகின் உச்சியில்; ஏறி - ஏறிச் சேர்ந்து
அங்கு; பாளை என முத்தம் உதிர்க்குவ - அவற்றின் பாளைகள் பூ
உதிர்ப்பனபோல் முத்துக்களைச்சொரிவன.
(வி-ரை.)
அலைப்புனல் உந்துசங்கம் - கதலிப்புதல்மீது
தொடங்கிப்போய் - கொடியூடு தவழ்ந்து - கமுகின்றலை ஏறிப் -
பாளை என முத்தம் உதிர்க்குவ எனத் தொடர்புபடுத்தி வினை
முடியும் பொருளும் உரைத்துக்கொள்க.
பொங்கிய
மாநதி நீடுஅலை - நதி பெரிது; அது
பெருகிற்று; பெருக்கினால் நீண்ட அலைகள் உண்டாயின; அலைகள்
சங்குகளை உந்தின என்க.
பொங்குதல்
- வெள்ளத்தாற் பெருக்கெடுத்தல். பெருநதியில்
வெள்ளம் வந்தபோது நீர் மேல்உயர்ந்து இருகரையிலும் அருகில்
உள்ள பயிர்களை நீரில் மூழ்கும்படி செய்யும். அப்போது நீரில்
மிதந்துவரும் பொருள்கள் அப்பயிர்கள் - மரங்கள் - முதலியவற்றின்
மேலே தங்குவது இயல்பாம்.
நீடு
அலைப்புனல் உந்து சங்கம் "கடலேறித் திரைமோதிக்
காவிரியி னுடன் வந்து கங்குல் வைகித், திடலேறிச் சுரிசங்கஞ்
செழுமுத்தங் கீன்றலைக்குந்திருவையாறே" (மேகரா - குறி - 2)
என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங் காண்க.
துங்கம்
- பெரிது. "இத்துங்க வேழம்" (590). துங்கஇலை -
பெரிய நீண்ட இலை. வாழைமடல் ஏனை இலைகளிலும் நீண்டு
அகன்று பெருத்திருப்பது குறித்தது.
கதலிப்புதல்
- செறிந்து புதலாக முளைத்த வாழைப்பயிர்.
ஆற்றின் கரைகளில் உரமிகுதியாலும், நீர்வளத்தாலும்,
பறிப்பாரின்மையாலும் வாழைகள் செழித்து வளருமியல்பு குறித்தது.
தொடக்கி
- தொடர்ந்து. தங்கிய பாசடை
- அங்குத்
தங்கிய பசிய இலை. பாசடை - வெற்றிலைக்
கொடி என்றலுமாம்.
சூழ்கொடி
ஊடு தவழ்ந்து - வாழைகளின் மேலும்
அங்கிருந்து தொடர்ந்து பக்கத்திலுள்ள கமுகுகளின் மேலும் சூழ்ந்து
படர்ந்த கொடிகளிடையே ஊர்ந்து. இவ்வாறு கொடிகள்
மரங்களின்மீதுப் படர்வது இயல்பு. வாழைப்பயிரினுடன் கமுகும்
வைத்தலுமுண்டு.
பைங்கமுகின்
தலை ஏறி என்க. தலை - உச்சி. தலை -
ஏழனுருபாகக்கொண்டு கமுகினிடத்து என்றுரைப்பினுமாம்.
பைங்கமுகு - பசிய கமுகு. பாளை என முத்தம்
உதிர்க்குவ -
பாளைகளின் பூக்கள் முத்துப் போன்றன என்பது உவமம்.
அதனைமாற்றி முத்துக்கள் பாளைகளின் பூக்கள்போல
உதிர்க்கப்பட்டன என்பது உவமை நயம் மிகுதிபடக் கூறியதாம்.
நிலவளம் நீர்வளமிகுதி குறித்த உவமச் சிறப்பு.
மேலே நெல்லும்
(926), மாவும் (927), கரும்பும் (928) கூறிய
ஆசிரியர், இப்பாட்டால் வாழையும் கமுகும் கூறும் வைப்புமுறையும்
அமைதியும் அழகும் காண்க. கதலிப்புதலும், பாசடைக்கொடியும்,
பைங்கமுகும் என எல்லாம் கூடிய மிக்க பசுமையும் புதுமையுமாகிய
இனிய காட்சியின் அழகும் குறிக்கப்பட்டது.
இந்நான்கு பாட்டாலும்
மேன்மழ நாடெனும் நீர் நாடு (926)
என்பதன் மிக்க மருத நிலச் சிறப்புக் கூறினார். சோலை -
பண்ணை - நெல் - மா - கரும்பு - வாழை - கமுகு இவை
மருதநிலக் கருப்பொருள்கள்; உழவு - தொழில்; உழத்தியர் மள்ளர்
- அந்நில மக்கள்; நெல் - கரும்பு - வாழை - மா - அதன்
உணாவகை; என்றிவ்வாறு பலவும் காண அணிபெறக்கோத்த
அமைதி காண்க.
இனி, மேல்வரும்
இரண்டு பாட்டுக்களால் இம்மருதத்தினை
அடுத்துத் திணை மயக்கத்தாற் சேர்ந்துள்ளதும், இந்நாளிலும்
காணத்தக்கதாய் விளங்குவதும், இப்புராண முடைய ஆனாய
நாயனாரது சரிதத் தொடர்பும் உரிமையும் உடையதுமாகிய
முல்லையின் சிறப்பும் உடன் கூறுகின்ற வகையினால் நாட்டுச்
சிறப்பினைக் காட்டி அதன் மேல் நகரச்சிறப்பு உரைத்தல்
கண்டுகொள்க.
உகுப்பன - என்பதும்
பாடம். 4
|