930.



அல்லி மலர்ப்பழ னத்தய னாகிள வானீனும்
ஒல்லை முழுப்பை யுகைப்பி னுழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான்மறி யோடு குதித்தோடும்
மல்கு வளத்தது முல்லை யுடுத்த மருங்கோர்பால்.
  5

     (இ-ள்.) அல்லி.......அயல் - அகவிதழ் நிறைந்த
பூக்களையுடைய வயல்களின் அருகில்; ஓர்பால் - ஒருபக்கத்தில்;
முல்லை உடுத்த மருங்கு - முல்லைப்பகுதி சூழ்ந்த பக்கநிலம்;
நாகுஇள ஆன் ஈனும் - மிக்க இளமையையுடைய பசு ஈன்ற;
ஒல்லை.......உழக்கு - உகைத்தலினால் (முல்லைநிலத்து)
மரஞ்செடிகளின் தலையிடத்தை விரைவில் உழக்குகின்ற; குழக்கன்று
- மிக இளையகன்று; கொல்லை.......வளத்தது - கொல்லையில் உள்ள
அழகிய கூட்டமாகிய மான் கன்றுகளுடன் கூடிக் குதித்து ஓடுகின்ற
நிறைந்த வளத்தையுடையது.

     (வி-ரை.)அல்லிமலர் - அல்லி - அகவிதழ். அல்லிப் பூ
எனினுமமையும்.

     பழனத்தயல் ஓர்பால் முல்லை உடுத்த மருங்கு என்று
கூட்டுக. இது மருதமும் முல்லையும் கூடிய நிலப்பகுதி கூறியதாம்.
இதனை முல்லையும் மருதமும் மயங்கிய திணைமயக்கம் என்பது
தமிழ் இலக்கணமரபு. திணைமயக்கமாவது ஒருதிணைக்குரிய
பொருளும் ஒழுக்கமும் அடுத்த திணைப்பொருள் ஒழுக்கங்களுடன்
விரவிக் கூடி நிகழ்வது என்ப. இவ்வாறு தமிழிலக்கணம் வகுத்த
நானிலப் பகுதிகளும் அவை விரவிய திணைமயக்கமும் வகுத்து
ஆசிரியர் காட்டிய இலக்கிய அமைதியினைத் திருக்குறிப்புத்
தொண்டநாயனார் புராணத்தினுள் (6 - 47) விரிவாகக் கண்டு
கொள்க. இப்பாட்டினும் மேல்வரும் பாட்டினும் கூறிய முல்லையும்
மருதமும் மயங்கிய திணைமயக்க அமைதி அப்புராணத்தினுள்
"இயலு மன்னகர் தோகையு மெதிரெதிர் பயில வயலு முல்லையு
மியைவன
பலவுள மருங்கு" (45) என்ற விடத்துக்காண்க.

     நாகு - இளையபசு - றாகு இள ஆன் - மிக இளமை
குறித்தது. அவ்வாறே குழக்கன்று மிக்க இளமை குறித்தது.
"பான்மறை நாகு" (936) என்றது பார்க்க.

     முல்லை உடுத்த மருங்கு ஓர்பால் ஆன் ஈனும் கன்று
மான்மறியோடு குதித்தோடும் வளத்தது என்று கூட்டிமுடிக்க.

     கொல்லை மான்மறி - புனக்கொல்லையில் வளர்க்கும்
மான்கன்று. புனங்களில் வந்து மேயும் மான் கூட்டத்தில் உள்ள
கன்று என்றலுமாம். மடக்குலமான் - அழகிய கூட்டமாகிய
மான்கள். மடமை - அழகு குறித்தது. இளமை என்றும்,
மருட்சியுடைமை என்றும், உரைப்பினுமமையும். மான் - முல்லைக்
கருப்பொருளாகிய மா. "நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளக்கும்
கானமும்" (சிலப் - காடுகாண் - 78) என்பதனான் முல்லைக்
கருப்பொருளாகிய மாக் கூறினார் என்ற அடியார்க்கு நல்லார் உரை
(பதிகம்) காண்க. ஆன் - மருதக்கருப்பொருள். ஆன்கன்று முல்லை
முழுப்பை உகைத்தலாலும், மான் மறியோடு குதித்தலாலும் இந்த
இருதிணையும் மயங்கிய ஒழுக்கம் கூறியபடி. பின்னர், ஆனிரை
மேய்க்கும் தொழில் பூண்ட முல்லைநில மகனாராகிய ஆனாயர்
"நீர்நாடு" எனப்பட்ட மழநாட்டுப் பகுதியில் நிரைமேய்த்துக்
குழலூதிப் பேறுபெற்ற வரலாற்றினைத் திணைமயக்கம்
காட்டுமுகத்தால், சரிதத் தொடக்கத்தில் முற்குறிப்புப் பெற எடுத்துக்
கூறினார் என்பதாம்.

     ஆன்கன்று மான்மறியோடு கூடிக் குதித்தோடு மியல்பு
இவ்விரண்டும், உயிர் வகுப்பில், கவர் குளம்புடைய ஓரினத்தைச்
சேர்ந்தவை என உயிர்ப்பகுப்புக் கூறும் சாத்திரிகள் கண்ட
உண்மையினை விளக்குவதாகும்.

     முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று - முழுப்பு -
முகடு. உச்சிப்பரப்பு என்ற பொருளில் அருகி வழங்குவதோர் சொல்.
இது மொழுப்பு என்று வரும்; இங்கு முல்லைச் சோலையின்
மேற்பரப்புக் குறித்தது. முல்லை முழுப்பை உகைப்பின் ஒல்லை
உழக்கு குழக்கன்று என்று கூட்டிக்கொள்க. "மணம்விரி
தருதேமாம்பொழில் மொழுப்பின் மழைதவழ்" (கோயில் - 1)
"சடையும் பிறைதவழ் மொழுப்பும்" (மேற்படி 9) என்ற கருவூர்த்
தேவர் திருவிசைப்பாக் காண்க. சோலையின் முழுப்பைக் கன்று
உகைப்பின் உழக்குதலாவது துள்ளிவிளையாடும் ஆன் கன்று
சோலை மரங்களின் அடியில் உராய்ந்தும் மோதியும் முட்டியும்
அசைத்தலால் அவற்றின் மேற்பாகம் அசைந்துபடுதல். உகைத்தல்
- அசைத்தல். உழக்குதல் - தலைதடுமாறச் செய்தல்.

     முழுப்பை - கருவின் முழுப்பையினை என்றுகொண்டு, ஈன்று
வெளிவருவதன் முன்னே தாயின் கருப்பையை உண்ணின்று
உகைத்து உழக்கின கன்று, பிறந்தவுடன் சிறிதுபோதில் அங்குள்ள
மான் கன்றுகளோடு குதித்தோடுகின்ற தென்றுரைப்பாரும். முழுப்பு
- புதல் என்று கொண்டு சிறுகானின் புதல்களை ஆன்கன்று உகைத்
துழப்புவன என்றுரைப்பாரு முண்டு.

     முல்லை உடுத்த மருங்கு - முல்லை நிலப்பகுதி சூழ்ந்த
இடம். உடுத்தல் - சூழ்தல்.

     ஆனிரை காக்கும் ஆனாய நாயனாரது சரிதத்தொடர்பு
நோக்கி ஆன்கன்றினை முதலிற் கூறினார்.

     மடக்குறு - என்பதும் பாடம். 5