931.
|
கண்மலர்
காவிகள் பாய விருப்பன கார்முல்லைத்
தண்ணகை வெண்முகை மேவு சுரும்பு; தடஞ்சாலிப்
பண்ணை யெழுங்கயல் பாய விருப்பன காயாவின்
வண்ண நறுஞ்சினை மேவிய வன்சிறை வண்டானம். 6 |
(இ-ள்.)
கார்முல்லை....சுரும்பு - காரில் மலரும் முல்லையின்
குளிர்ந்த பற்போன்ற வெள்ளிய பூக்களிலுள்ள வண்டுகள்;
நண்மலர்........இருப்பன - கண்போல மலரும் கருங்குவளை
மலர்களிற் பாய உள்ளன; காயாவின்.......வண்டானம் - காயா
மரத்தின் அழகிய செழித்த கிளைகளிலுள்ள நாரைகள்;
தடஞ்சாலி.......இருப்பன - பெரிய நெற்பயிரையுடைய
பண்ணைகளினின்று மேலெழுந்து துள்ளுகின்ற கயல்களின்மீது பாய
இருப்பன.
(வி-ரை.)
கண்மலர் காவி - கண்போல மலரும் காவி
என்றும், கள் மிகுதியாக மலர்கின்ற காவி என்றும் இரட்டுற
உரைக்க நின்றது. முல்லைப் பூவிலுள்ள தேனினும்,
காவிகளிற்,
றேன், மிக்கு இருப்பதனால் முல்லையைவிட்டுக் காவிகளில் சுரும்பு
பாய்ந்தன என்ற குறிப்பும் காண்க. பல்லைவிடக் கண் சிறந்த
உறுப்பாதலின் நகை போன்ற முல்லை முகையினை
விட்டுக்
கண்போன்ற காவிகளில்
பாயவிருப்பன எனவும், கண்ணுக்கு
உவமையாக விளங்கும் வண்டினங்கள் தமக்கு மாறாகக் காவிகளும்
கண்போல மலர்தலாற் பகைகொண்டு அவற்றின்மேற் பாய்ந்தன
என்றும் தற்குறிப்பேற்றம் பெறக் கூறிய நயமும் காண்க.
பாய்தல்
- ஓரிடம் நோக்கி விரைவாக ஓடுதல் - தாவுதல் -
பறத்தல்.
பாய
இருப்பன - சுரும்பு காவிகளிற்பாய இருப்பன;
வண்டானம் கயல்கள் பாய (பாய்தலை நோக்கி - அல்லது
பாய்தலால் அவற்றைத்தின்று) இருப்பன என்று, பாய இருப்பன
என்றதொரு சொற்றொடரை ஈரிடத்தும் வெவ்வேறு பொருள்படச்
சிலேடை என்னும் அணி பெறவைத்த தமிழ்ச்சுவை காண்க.
இவ்வாறே மூர்த்தி நாயனார் புராணத்துள் 2 - 3 - 5 - 6
பாட்டுக்களில் வரும் தமிழ்ச் சுவை காண்க.
கண்
மலர் காவி - "காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
கண்காட்டுங் கழுமலமே" (மேகரா - குறி 1) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரமும், "கரும்பருகே கருங்குவளை கண்வளரும்
கழனிக் கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே" (தக்கரா - 1)
என்ற ஆளுடைய நம்பிகள் தேவாரமும், "எற்படக் கண் போன்
மலர்ந்த காமர் சுனைமல, ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்கும்"
என்ற திருமுருகாற்றுப்படையும், இவைபோல்வன பிறவும் காண்க.
மாலையில் மலரும் முல்லையில் மொய்த்துத் தேனுண்ட சுரும்பு,
காலையுணவு வேண்டி எற்பட மலரும் காவிகளில் பாய்தலை
நோக்கி இருப்பன என்றஉட்குறிப்பும் காண்க. (எற்பாடு - காலை;
படுதல் - உண்டாதல்.)
தண்ணகை
வெண் முகை. நகை - பல். பல்லுக்குத்
தண்மை புன்னகை காட்டுதல். நகை போன்ற என்க. முல்லை
முகைக்கு வெண்மையும் தண்மையும் அலரும் பருவத்தே
உளதாவதாம். முகை - அலரும் பருவத்து அரும்பு
குறித்தது. நகை
ஒளி என்பாருமுண்டு.
காயா
- கருநீல நிறமுடைய சிறுகொத்துப் பூக்களைப் பூக்கும்
ஒருவகை மரம். இது முல்லையைச் சார்ந்த மரமாம். அதன்
கருப்பொருள்களுள் ஒன்று. இதனால் முல்லைத்திணையும்,
வண்டானம் - தாராவும் - நீர்க்கோழியும் போன்று நாரையும்
மருதக் கருப்பொருளாதலின், அதனால் மருதத்திணையும் குறித்த
திணைமயக்கம். காயா - மலர்வாவிக் கரையில்
முளைத்தெழுந்தது.
வண்ணம்
- பருமையும், நறுமை - செழிப்பும்
குறித்தன.
வண்டானம்
கயல்பாய இருப்பன என்றது "ஓடு மீன் ஓட
உறுமீன் வருமளவும், வாடி யிருக்குமாம் கொக்கு" என்றபடி கயல்
துள்ளி எழும் சமயம் நோக்கி அவற்றின்மீது பாய்ந்து கொத்தித்
தின்பதற்குக் காத்திருக்கும் நாரைகளின் இயற்கை குறித்தது.
இக்கருத்து "கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்தில்,
தாராமல் காக்கூரிற் றான்றோன்றி மாடமே" (சீகா - 2) என்ற
ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தினுள் விளங்குதல் காண்க.
எழும்
கயல் - கயல்கள் துள்ளிக் குதித்து நீர்மேல் எழும்
இயல்புடையன. "குதித்து நீர்மேல் விழுந்த கயல்" (மேகரா - குறி -
திருவீழி - 3) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும் பிறவும்
காண்க.
காவியும் கயலும்
மருதப்பொருள்கள். அவை தத்தமிடத்தே
இருப்பன; முல்லைச் சுரும்பு காயாவின் வண்டானமும்தத்தம்
இடத்தை விட்டு அயல் வயலிற் பாய்வன என்பார் பாய இருப்பன
என்றார். இதனால் மருதம் பெரும்பான்மையும் முல்லை
சிறுபான்மையும் உடையது இந்நாட்டின் தன்மையாம் என்று
காட்டியதன்றி, "பழனத் தயல் முல்லை உடுத்த மருங்கோர் பால்"
என முன்பாட்டிற் கூறிய முல்லையும் மருதமும் கூடிய
திணைமயக்கத்தினை விளக்கியநயமும் காண்க.
மேன்மழநாடு முற்றும்
நீர் நாடாகிய சோழநாட்டின் ஒரு சிறு
பகுதியாம் என்ற அமைப்பினை விளக்கிய படியும் காண்க.
அஞ்சிறை
- என்பதும் பாடம். 6
|