933.



ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையி லோவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி யறம்புரி சால்போடுஞ்
செப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும்
அப்பதி மன்னிய வாயர் குலத்தவ ரானாயர்.
  8

     (இ-ள்.) வெளிப்படை. (அம்மூதூர்) ஒப்பற்ற பெருங்குடிகள்
நெடுங்காலமாக நீடி வருகின்ற தன்மையால் ஒருகாலத்தும் நீங்காதே,
தவறுதலில்லாத வளங்கள் யாவும் பெருகச்செய்து அறங்களைச்
செய்கின்ற சால்புடனே எடுத்துக் காட்டாகச் சொல்லும்படி
உயர்வடைய சிறப்பினால் மிகுந்ததாகும். அவ்வாறு சீர்பொருந்திய
அந்தப் பதியில் நிலைத்த ஆயர்குலத்தினைச் சார்ந்தவர்
ஆனாயர்
என்ற பெரியார்.

     (வி-ரை.) ஓவாமே - ஓவுதல் - ஒழிதல். "ஓவற விமைக்குஞ்
சேண்விளங் கவிரொளி" (திருமுருகாற்றுப்படை). தப்பில் வளங்கள்
- ஒருவகையாலுங்குறை வில்லாத வளங்கள். ஓவாமே என்றது
இடையறாது பெருகுதல் குறித்தது. தப்பில் என்றதனால்
பிழைபடாநெறியில் ஈட்டப்பட்டமையும், பெருக்கி என்றதனால்
மேன்மேலும் பெருக ஈட்டுதலும் குறிக்கப்பட்டன.

     அறம்புரி சால்பு - அறவழியிற் றேடிய செல்வத்தைப்
பெருக்கியதனால் உளதாகும் சால்பு நிறைந்திருத்தல். "நின்பொருள்க
ளெல்லாம், அறத்தாற்றி னீட்டப் பட்ட வினையவை புனித மான
திறத்தாலே" (திருவாதவூ - உபதே - படலம் - ) என்ற
திருவிளையாடற் புராணக் கருத்துக் காண்க. பொருள்களை
ஈட்டுதலும், ஈட்டப்பட்டவற்றைச் செலவிடலும் அறத்தாற்றின்
நிகழ்ந்தன என்பதாம். சால்பு - 885 பார்க்க. செப்ப - உயர்வாகச்
சுட்டிக்காட்ட - எடுத்துச்சொல்ல.

     ஆயர் குலத்தவர் ஆனாயர் - ஆன்மேய்க்கும்
ஆயர்குலத்தவராதலின் ஆனாயர் எனப் பெற்றார் என்ற
குறிப்புப்பட இவ்வாறு கூறினார். ஆனாயர் - காரணப்பெயர்.
இவரது இயற்பெயர் விளங்கவில்லை,

     ஆயர்குலம் - பழந்தமிழ்க்குடிகளுட் சேர்ந்த இடையர்
குலம். இது வேறு; யாதவர் குலம் வேறு. தொல்காப்பியம்
சிலப்பதிகாரம் முதலிய மிகப் பழந்தமிழ் நூல்களிலும் ஆயர்குலமும்
தொழிலும் பிறவும் பேசப்படும். இவர்கள் முல்லை நில
மக்கள்.
யது என்ற அரசன் வழிவந்த சூரியகுலத்து க்ஷத்திரியர்கள் யாதவர் 
எனப்படுவர். கண்ணன் அம்மரபில் வந்தமையால் யாதவன்
எனப்படுவன். அவன் இடைச்சேரியில் வளர்ந்து பயின்றமையால்
அத்தொடர்புபற்றி இடையர்கள் யாதவர் என்று மயங்கி
யறியப்படுவர் என்ப.

     மேவிய - என்பதும் பாடம். 8