935.
|
ஆனிரை
கூட வகன்புற விற்கொடு சென்றேறிக்
கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்தெங்குந்
தூநறு மென்பு லருந்தி விரும்பிய தூநீருண்
டூனமி லாய முலப்பில பல்க வளித்துள்ளார். 10 |
(இ-ள்.)
வெளிப்படை. (அவர்) பசுக்கூட்டங்களை, அகன்ற
முல்லைநிலக்காட்டிற்கு ஒருங்கு சேரக் கொண்டுபோய்க் காட்டில்
உள்ள கொடிய விலங்குகளாலும் பொருந்தும் நோய்களாலும் வரும்
துன்பங்களை நீக்கிக் காத்து, எங்கும் தூய நறிய மெல்லிய புல்லை
அருந்தி விரும்பும் தூயநீரினை உண்டு, குற்றமில்லாதபடி
பசுக்கூட்டங்கள் அளவில்லாது பெருகும்படிக் காப்பாற்றினார்.
(வி-ரை.)
கூடக் - கொண்டு, சென்று, - ஏறிக், - கடிந்து, -
ஆயம் - அருந்தி - உண்டு - பல்க, - அளித்துள்ளார் எனக் கூட்டி
முடித்துக்கொள்க.
கூடக்கொடு சென்று ஏறி என்பது ஆனிரைகளைச் சேர்த்துத்
தம்முடனே கூடக் கொண்டு செல்லுதல் குறித்தது.
கடிந்து
- அளித்து உள்ளார் என்பது தீமை நீக்கிக்
காத்தலும் நன்மை பெறும்படி காத்தலும் குறித்தது. பசுபதியாகிய
சிவபெருமான் பசுக்கூட்டங்களாகிய உயிர்களைக் காக்கும்
பாசநீக்கமும் சிவப்பேறுமாகிய இரண்டும் இங்கு உட்குறிப்பிற்
பெறப்படுவதும் காண்க. "திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய்
வாராமே" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும் பிறவும்
காண்க.
அகன்
புறவு - அகன்ற காடு. மருத நிலத்தினை அடுத்துப்
புறத்தே உள்ள முல்லைப் பகுதி புறவு எனப்படும்.
"மண்ணிக்
கரையின் வளர்புறவின் மாடும்" (சண்டீசர்
- புரா - 27),
"அருகுவளர் புறவில்" (மேற்படி 33), "அங்கட்
கடுக்கைக்கு
முல்லைப் புறவம்" (திருவொற்றியூர்த் திருவிருத்தம் - 10)
முதலியவை காண்க.
கொடு,
சென்று, ஏறி - கொடு என்றது பசுக்கள் இருக்கும்
வீடுகளிலிருந்து அழைத்துக் கூட்டிக்கொள்ளுதலும், சென்று
என்றது
அங்கு நின்றும் புறவுக்குக் கூட்டிப்போதலும், ஏறி என்றது
புறவுக்குள் ஏற்ற இடங்களிற் புகுதலும் ஆகிய செயல்கள். இவற்றை
ஏற்ற ஒவ்வோர் சொல்லாற் கூறும் அமைதி காண்க.
தீய
விலங்கு - பசுக்களுக்கு ஊறு செய்யும் புலி, சிறுத்தை,
நரி முதலியவை.
உறு
நோய்கள் - கானலில் பசுக்களைத் தாக்கும் நோய்கள்.
இவை கொடுங்காற்று தீநீர் முதலிய காரணங்களால் வருபவை.
விலங்கும் நோய்களும் கடிந்து என்க. எண்ணும்மைகள் தொக்கன.
இவ்வாறன்றி விலங்குகளால் வரும் நோய்கள் என்றுரைப்பாருமுண்டு.
தூநறு
மென்புனல் அருந்தி - தூ - தூய்மையும், நறு -
புதுமையும் சுவையுடைமையும், மென் - உண்ணுதற்
கெளிமையும்
குறித்த அடை மொழிகள். இந்த அடைமொழிகளால் பசுக்களை
உண்பிக்கத்தக்க புல்லுணவில் நல்லுணவின் இயல்பை எடுத்துக்
காட்டியது காண்க.
தூநீர்
என்பதும் அவை உண்ணத்தக்க நல்ல நீரின் இயல்பு
காட்டிற்று.
பசுக்கள் உண்ணத்தகாத
பலகெட்ட உணவும், கெடுதி
செய்யும் பலகெட்ட நீர் நிலைகளும் கானலில் உள்ளனவாதலின்,
அது தெரிந்து விலக்கி, நல்ல புல்லுணவும் நன்னீரும் உள்ள
இடங்களில் பசுக்கூட்டத்தை மேய்த்துக் காத்தனர் என்க. இதுவே
பசுக்களைக் காக்கும் முறை என்பது சண்டீசநாயனார் மருதப்புறவில்
ஆனிரை காத்த வரலாற்றானும் அறியப்படும். அவர்தம் புராணம்
26-ம் பாட்டுப் பார்க்க.
ஊனமில்
ஆயம் உலப்பில பல்க - ஊனமில் -
கெடுதியில்லாதபடி. கேடு இல்லா வகை - விலங்கும் நோயும்
கடிந்தமையால் ஊனமில்லையாயின. உலப்பில -
அளவில்லாதனவாக.
பல்குதல்
- பெருகுதல். புல்லும் நீரும் நன்கு பெறுதலால்
உலப்பிலவாகப் பெருகின.
ஊனம்
இல் ஆயம் - மக்களுடல் வளர்ச்சிக்கு
இன்றியமையாத நல்ல உணவாகிய பால் தயிர் நெய் என்பவற்றையும்,
மக்களின் உயிர் உய்தி பெறுதற்கு இன்றியமையாத இறைவன்
வழிபாட்டுக்குரிய சாதனமாகிய பஞ்சகவ்வியம் எனப்படும்
ஆனைந்தினையும் திருநீற்றின் மூலத்தையும் தந்து, உடலுக்கும்
உயிருக்கும் ஒருங்கே ஊனத்தை இல்லையாகச் செய்யும்
ஆயங்கள் என்ற பொருளும் பட நின்றது. இவ்வாறு உலப்பிலவாகிய
பல்கிய ஆனிரைகள் வெவ்வேறினங்களாகக் காக்கப்படும் திறம்
வரும்பாட்டிற் கூறுவர்.
தூநிறை
- என்பதும் பாடம். 10
|