686.
|
பாசிலைப்
படலை சுற்றிப் பன்மலர்த்
தொடையல்சூடிக்
காசுடை வடத்தோல் கட்டிக் கவடிமெய்க் கலன்கள்
பூண்டு
மாசில்சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி
யாசிலா சிரிய னேந்து மடற்சிலை மருங்கு
சூழ்ந்தார்.
37 |
686.
(இ-ள்.) வெளிப்படை. பச்சிலையானியன்ற
படலைகளைச்
சுற்றிப் பலவகைப் பூமாலைகளைச் சூடி, மணிகள் கட்டிய
வடத்தோலை மேலேகட்டி, உடலிற் பலகறைகளாலியன்ற
அணிகலன்களை அணிந்து, குற்றமற்ற சிறப்புடைய வெட்சி முதலாகச்
சொல்லப்பட்டனவாகித் தாம் மேற்கொண்டு வரும் அத்துறைக்குரிய
மாலைகளைச்சூடிக், குற்றம் நீங்கிய ஆசிரியன் ஏந்திய
வலியவில்லின் பக்கத்திற் சூழ்ந்தார்கள். 37
686. (வி-ரை.)
பாசிலைப்படலை - பசுமை இலை பாசிலை
எனப் புணர்ந்தது. படலை - மாலைவிசேடம்.
குழையுந் தட்டச்
சுரும்புறு படலை (658) என்றது காண்க. பரந்த அமைப்புடைய
மறைப்புத் தருவதனைப் படல் என்பது மலைநாட்டு வழக்கு.
பச்சிலைகளாற் றொடுக்கப்பட்ட படலை இடையிற் கட்டப்பட்டு
உடையின்மேல் ஓரளவிற்கு மறைப்பாகவும் பயன்படும் ஆதலின்
சுற்றி என்றார். தொடையல்சூடி என்றதும்
நோக்குக. தொடையல்
- தொடுக்கப்படுவது. அல் - சாரியை.
காசுடை
வடத்தோல் - பலவகை மணிகளையும் அழுத்தித்
தோலினுட் பதியக் கட்டிய வடம் போன்ற தோல். இதுவும்
இடையில், உடையின்மேற் கட்டப்படுவது. இது உடைவாள் முதலிய
பலவும் கட்டுதற்குப் பயன்படுவதால், உறுதிபெற வலியதாய்க்
கட்டப்படும்; ஆதலின் வடத்தோல் கட்டி
என்றார். வடத்தோல்
- வடம் போன்று வலிமையுடைய தோல். "நிரையிற்பொலி
நீளுடைத்தோல் சுரிகைப் புறஞ் சூழ" (710) என்றது காண்க. "குருதி
புலராச் சுரிகை யெஃக, மரையிற் கட்டிய வுடைதோற் கச்சையன்,
றோனெடும் பையிற் குறுமயிர் திணித்து, வாரில் வீக்கிய வரிக்கை
கட்டியன்" என்பது கல்லாட தேவநாயனாரருளிய திருக்கண்ணப்ப
தேவர் திருமறம் (பதினோரந் திருமுறை).
கவடி
- பலகறை. பலகறைகளை வரிசைபெற அமைத்துப்
பற்பல வகைமாலைகள் கோத்து அணிதல் இந்நாளிலும் மலைவாழ்
மக்கள் முதலியவர்பாற் காணப்படும் வழக்கு.
மாசில்சீர்
வெட்சி ழன்னா - "வெட்சிதானே
குறிஞ்சியதுபுறனே" (தொல்காப்பியம் - புறத்திணையியல்1) என்றபடி
குறிஞ்சியின் புறத்திணைக்குரியது வெட்சி மாலையாதலின்
வெட்சிழன்னா என்றார். மாசில்சீர் -
நூல்களால் விலக்கப்பட்ட
குற்றங்களின் நீங்கிய சிறப்பு.
வருதுறைக்
கண்ணி - அதற்குரித்தாய் வரும் துறைக்குச்
சார்புடைய கண்ணி, இவை, ஈண்டைக் கேற்றவையாகிய கடவுள்
வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் விரவிய பாடாண்புறத்திணைக்குரியன.
பின்னர்க் குன்றவர்வரியும், கொடிச்சியர் துணங்கையும், சூரரமகளிர்
ஆட்டும் (688) கூறுதலானும், குறிஞ்சியை வலங்கொண்டு
விழவுகொள்ளுதலானும் பிறவாற்றானும் இது குறிஞ்சித்தெய்வமாகிய
முருகனை வணங்கி, இந்த வில்லாண்மை இத் திண்ணனுக்குத்
திறம்பட முற்றிவெற்றி தருவதாக என வாழ்த்தியதாம். "வாழ்த்தெடுத்
தியம்பி னார்கள்" என முன்னரும் (682) கூறியது காண்க. இவற்றின்
விரிவுகள் தொல்காப்பிய முதலிய நூல்களுட் கண்டுகொள்க.
இவ்வாறன்றி, இதற்கு வெட்சி முதலாகச் சொல்லப்பட்ட போர்த்
துறைகளில் வல்லோர் அவ்வல்லமைக் கடையாளமாக
அவ்வத்துறைக்கண்ணி சூடுவராதலின் அந்த மாலைகள்
என்பாருமுண்டு. வருநறைக்கண்ணி என்று பாடங்கொண்
டுரைப்பாருமுண்டு. "பன்மலர்த் தொடையல்" என முன்னர்க்
கூறியதனால் அது கூறியது கூறலாகும். அணிமாலை வகைகள்
முன்னர்க் கூறி அவற்றின் மேலாகச் சூடும் உரிய துறைக்
கண்ணியைப் பின்னர்க் கூறிய அமைதியும் காண்க.
ஆசில்
ஆசிரியன் என்றமையால் ஆசிரிய இலக்கணம்
முற்றும் அமையப்பெற்று, நல்லாசிரியனாகாமைக்குரிய குற்றங்களி
னீங்கியவன் என்பது பெறப்படும்.
நல்லாசிரியனிலக்கணம்,
"குலனரு டெய்வங் கொள்கை
மேன்மை, கலைபயிறெளிவு கட்டுரை வன்மை" என்ற
சூத்திரத்தானும், ஆசிரியனாகாதவ னிவனென்பது "மொழிகுண
மின்மையு மிழிகுண வியல்பும், அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும்"
என்ற சூத்திரத்தானும் உணர்க. இவற்றுள் ஆசிரிய இலக்கணம்
ஈண்டைக்கேற்றபெற்றி அமைத்துக்கண்டுகொள்க. இக்கருத்துப்
பற்றியே பின்னர்த் "தங்கடொல் மரபில் விஞ்சைத் தனுத்தொழில்
வலவர் தம்பால்" (689) என்று விதந்து கூறினார்.
ஆசிரியன்
ஏந்தும் அடல் சிலை - வில்விழாவில்,
மாணவகன் கைக்கொடுக்கும் வில்லினை முதலில் ஆசிரியன் ஏந்தி
விழாக் கொண்டாடி அதன் முடிவில் மாணவகன் கையிற்கொடுத்து
அதனைத் தக்கவாறு பிடிப்பித்து வித்தைகற்பித்தல் மரபு. அடல் -
வலிமை. வெற்றி என்றலுமாம். அது பான்மையிற் சமைத்துக்
கொண்டமையானும், பின்னர் இதனால் விளையும் பயனானும் ஆம்.
681 பார்க்க.
கலங்கள்
பூண்டார் - மாசிலாவெட்சி - என்பனவும்
பாடங்கள். 37
|