941.




வெண்கோட லிலைச்சுருளிற் பைந்தோட்டு
                            விரைத்தோன்றித்
தண்கோல மலர்புனைந்த வடிகாதி னொளிதயங்கத்,
திண்கோல நெற்றியின்மேற் றிருநீற்றி
                             னொளிகண்டோர்
கண்கோட னிறைந்தாராக் கவின்விளங்க
                             மிசையணிந்து,
 16

     941. (இ-ள்.) வெண்கோடல்.........தயங்க - வெண்காந்தளின்
இலைச்சுருளிலே பச்சையிதழும் மணமும் உடைய செங்காந்தளின்
குளிர்ந்த அழகிய மலரை அணிந்த வடிந்த காதின் ஒளி விளங்கி;
திண்கோல.......அணிந்து - திண்ணிய அழகிய நெற்றியின்மேல் பூசிய
திருநீற்றின் ஒளியானது கண்டாரது கண்களைக்கொள்ளுதல் நிறைந்து
அமைவுபடாத அழகு விளங்கும்படி உடலின்மேல் அணிந்து, 46

     941. (வி-ரை.) வெண்கோடல் - வெண்காந்தள். தோன்றி -
செங்காந்தள். இது மணமுடையதாதலின் விரைத் தோன்றி என்றார்.
இதனது மிக்க செந்நிறத்தால் இதனைத் தீப்போல்வதென்
றுபசரித்துக் கூறுவதும் வழக்கு. "துயிலாநோயாந்தோன்றத்
தோன்றித்தீத் தோன்ற" (11 - ம் திருமுறை - திருவாரூர்
மும்மணிக்கோவை - 5) என்ற சேரமான் பெருமாணாயனாரது
அழகிய திருவாக்குக் காண்க.

     தண் கோலமலர் - கவினினாற் கண்கவரும் அழகும்
குளிர்ச்சியும் உடைய செங்காந்தட் பூ என்க.

     வடிகாது - கீழ்த்தொங்கிய காது. வடிதல் - தொங்குதல்.
வெண்காந்தனிலையைச் சுருட்டி, அதற் கிடையில் செங்காந்தட்
பூவினை வைத்து, அதனை வடிந்த காதில் அணிந்தார் என்க.
ஆண் மக்களும் வடிகாதுடையாராகுதல் முன்னாள் வழக்கு.

     காதின் ஒளி - காதுகளின் இயல்பாகிய நிறத்துடன்
வெண்காந்த ளிலையின் நிறமும் செங்காந்தளின் நிறமும்கூட
இம்மூன்று நிறங்களின் சேர்க்கை விளங்கியதனால் காதின்
ஒளிதயங்க
என்றார். தயங்குதல் - விளங்குதல். வேய்ங்குழலின்
ஊதிய ஐந்தெழுத் தின்னிசையினை எவ்வுயிர்களையும் கேட்பித்து,
இறைவரது திருச்செவியினருகணையப் பெருக்குதலாலும், அவ்வாறு
பெருக்குவதற்குத் தாம் முன்பு கேட்டாலன்றி இயலாமையானும்
அதற்குரிய காதுகளை இப்படிச் சிறப்பித்தார் என்ற குறிப்பும்
காண்க. கேட்டதற்குரிய செவிகளைச் சிறப்பித்தமை பற்றித்
"தம்பாடல் பரமர்பாற் சொலுமுரை பெறுவதற்குத் திருச்செவியைச்
சிறப்பித்து" என்றதும் (திருஞா - புரா - 75) காண்க.

     திண்கோல நெற்றி - வன்மையும் அழகும் உடைய நெற்றி.
கண்கோடல் - கண்ணினைக் கொள்ளுதற்றன்மை. கண் -
சாதியொருமை.

     கண் கோடல் நிறைந்து ஆராக் கவின் - கண்ணைக்
கவர்ந்து கொள்ளுதற்றன்மை நிறைந்து மேலும் இடங்கொள்ளாதபடி
ததும்பும் அழகு.

     விளங்க - விளங்கும்படி. நெற்றியின்மேல் ஒளி விளங்கும்படி
திருநீற்றினைமிசை அணிந்தார் என்க.

     கண்டோர்.......விளங்க - என்றது நாயனார் புனைந்த
திருக்கோல முழுமையும் அழகு விளங்கியனவேயாயினும்
அவற்றுக்கெல்லாம் மேலாய்க், கண்டோர் கண்கள் சலிக்காமல்
கண்கொள்ளாக் காட்சியாக மேல் விளங்கியது திருநெற்றியின்
திருநீற்றுப் பொலிவு என்றபடி. இது உயிர்க்குச் சார்பாகியுள்ள
மேம்பட்ட சிவச்சார்பின் விளக்கமாதலின் ஏனை உடற்
பொலிவுகளின் மிக்கு விளங்கிக், கண்டோரை வசீகரித்தது
என்றதாம். "திகழ்ந்த நீற்றின் உரு" (394) என்ற விடத்துரைத்தவை
பார்க்க. 16