(இ-ள்.)
வெளிப்படை. நீலநிறம் பொருந்திய பெரிய மயில்கள்
அகவவும், வரிசையாகிய கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப்
பண்ணைப் பாடவும், இந்திர கோபமாகிய வாயினில் வண்ணமுடைய
வெள்ளி அழகிய முல்லையரும்புகள் புன்முறுவல் காட்டவும்,
அசைகின்ற மின்னலாகிய இடையும் சூழும் மாலைப்பொழுதாகிய
முலையும் அசையவும் ஞாலமாகிய பெரிய அரங்கத்திலே
ஆடுவதற்குக் காலம் என்கின்ற பருவத்தையுடைய பெண் வந்தனள்.
(வி-ரை.)
இப்பாட்டு முற்றுருவகம். முல்லைத்திணைக்குரிய
முதற் கருப்பொருள்கள் பலவும் கோத்துக் கார் என்கின்ற பெண்
அரங்கில் ஆடுதற்கு வந்ததாக உருவகம் செய்யப்பட்டது.1
மஞ்ஞை
- மயில் குறிஞ்சிக்குரிய புள்ளாயினும் முல்லை
நிலத்தின் வந்து கூடியதனால் "எந்நில மருங்கிற பூவும் புள்ளு,
மந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த
வாகும்" (தொல் - அகத் - 19) என்றபடி இங்கு முல்லைக்
குரியதாயிற்று. கார் காலத்திலும் மாலைப்பொழுதிலும் மஞ்ஞைகள்
களித்துக் கூவுதல் இயல்பு. முல்லை - அந்நிலத்துக்குரிய
பூ
கோபம் - கார்காலத்தில் பெருக உண்டாகும் சிவப்பு நிறமுடைய
இந்திர கோபம் என்கின்ற தம்பலப்பூச்சி. இது பெரும்பாலும்
முல்லைப் புறவங்களில் காணப்படும். மாலைப்பொழுதும்
கார்காலமும் முறையே முல்லைக்குரிய சிறுபொழுதும்
பெரும்பொழுதுமாம். "காரும் மாலையும் முல்லை" (தொல். அகத். 6).
தல் - மயில்கூவும் குரல்; அகவுதல் எனப்படும்.
நிரைக்கொடி
புறவம் பாட - நிரை - வரிசை. கொடி -
பாட - கொடிகளில் மொய்த்த வண்டுகள் பாட.
புறவம் -
முல்லைப்பண். கொடி - முல்லைக்கொடிகள்
போலும். கொடிவண்டு
பாட என்றதைக் கொடிபாட என்றது கட்டில் கூப்பிட்ட
தென்றாற்போல இலக்கணை என்பர்.
கோப
வாயின் முல்லைமுறுவல் காட்ட என்க.
மின்
இடையும் மாலைப் பயோதரமும் என்க.
எண்ணும்மைகள் தொக்கன. மின் இடை அசைய - மின்
மெலிந்து
ஒல்கி அசைவராதலின் இடைக்கு மெய்பற்றி
வந்த உவமம். மாலை
அசைய என்றது மாலைப்பொழுது மெல்லச் செல்லுதல் குறித்தது.
ஆடற்பெண்கள் ஆடல் தொடங்க வரும்பொழுது இடை.......
அசையவும் அதனால் முலையசையவும் ஒதுங்கி மெல்ல நடந்து
வரும் இயல்பு காண்க.
மாலைப்பொழுது
ஆகிய பயோதரம்- என்க. மாலைசூடிய
பயோதரம் என்ற குறிப்புப்பட நின்றது காண்க.
பருவ
நல்லாள் - பருவம் - பெரும்பொழுது எனவும்,
இளமைப்பருவம் எனவும் இருபொருளும் பட உரைக்க நின்றது.
நல்லாள் - பெண்.
நல்லம் - கருமையை உணர்த்தப் பழந்தமிழில்
வழங்கியதோர் சொல் (சூடாமணி). அது இப்போது தமிழில்
வழக்காறொழிந்தது. தமிழினின்றும் போந்த தெலுங்கு மொழியில்
இப்பொருளில் வழக்கில் உள்ளது. கார் எனும் பெண் என்றதனால்
அதற்குரிய கருமை நிறம் குறிக்க நல்லாள் என்றார்.
கார்
என்னும் ஆடற் பெண்ணுக்கு, மஞ்ஞை ஆடலுக்குத்தக்க
உவகை முழக்குதற் கருவியாக, கோபம் வாயாக,
முல்லையரும்புமுறுவலாக, மின்னும்
மாலையும் இடையும்
முலையுமாக, ஞாலம் ஆடரங்காக - உருவகம் செய்யப்பட்டன.
ஆடற் கணிகையர் சிவந்த வாயினிற் புன்முறுவல் காட்டிச்
சிறுகுரலாற்பாடி இடையும் முலையும் சிறிதே அசைய உவகை
முதலிய மெய்ப்பாடு தோன்ற உரிய அவிநயத்துடன் வருதல் ஈண்டுக்
கருதுக. 19
1இப்புராணத்தினுள்
ஆசிரியர் அருளிய "முந்தைமறை" (938)
என்ற திருப்பாட்டுத் தொடங்கி, "விண்ணவர்கள்" (966) என்றது வரை
ஒருதொடர்ச்சியாய்க் கொச்சகக்கலிப்பாவினா லியன்ற
செம்பாகச்சிறப்புடைய யாப்பின்றொடர்பு
நிலைக்கும், "நிரைகாக்கப்
புறம்போந்தார்" (943), "செழுங்கொன்றை மருங்கணைந்தார்" (945),
"உடையவர்பால் மடைதிறந்தார்" (946) என்று தொடர்ந்து செல்லும்
செம்பொருளின்றொடர்பு நிலைக்கும் இடையே,
இப்பாட்டு வேற்று
யாப்பாகவும், பொருளில் தொடர்பில்லாத தனித்த
வேற்றுப்பொருளாகவும் வைக்கப்பட்டது போலக் காணப்படு
கின்றது.