945.



எம்மருங்கு நிரைபரப்ப வெடுத்தகோ லுடைப்
                               பொதுவர்
தம்மருங்கு தொழுதணையத் தண்புறவில்
                             வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்தசினை யலர்மருங்கு மதுவுண்டு
செம்மருந்தண் சுரும்புசுழல் செழுங்கொன்றை                          மருங்கணைந்தார்.
20

     (இ-ள்.) வெளிப்படை. எப்பக்கத்திலும் ஆனிரைகளைப்
பரவச்செய்து மேய்ப்பதற்காக எடுத்த கோலினையுடைய இடையர்கள்
தம்மருங்கில் தம்மைத் தொழுதுவரக், குளிர்ந்த முல்லைப்
புறவினிடத்தில் வரும் தலைவராகிய ஆனாயர் அவ்விடத்தே கீழே
தாழ்ந்த கிளைகளில் மலர்ந்த பூக்களில் தேனை உண்டு மிக்க
களிப்பினைப் பொருந்துகின்ற குளிர்ந்த வண்டுகள் சுழன்று சூழும்
செழித்த கொன்றை மரத்தின் பக்கத்திற் சேர்ந்தனர்.

     (வி-ரை.) எம்மருங்கும்........கோல் - ஆனிரைகளைப்,
புல்லும் தூநீரும் உள்ள எல்லாப் பக்கங்களிலும் ஒழுங்கிற் பரவி
மேயுமாறு விடுத்துக் காப்பதற்காக எடுத்த சிறுகோல். மேய்விடம்
பரவியிருத்தலின் அங்கெல்லாம் ஆனிரைகளைப் பரப்பினார்
என்பார் எம்மருங்கும் என்றார். கோல் - ஆனிரை காப்போர்
கையில் கொள்ளும் சிறுகோல். "வெண்கோலும்" (943) என்றது
காண்க.

     பொதுவர் - இடையர். தொழுது அணைய - ஏவல்புரி
கோவலர்களாதலின் தலைவராகிய ஆனாயரைத் தொழுது
அணைந்தனர் என்க.

     செம்மரும் - மிகக் களிக்கும். செம்மா - பகுதி. "சீரூர்
பாடலாட லறாத செம்மாப் பார்ந்து" (குறிஞ்சி - திருவாரூர் - 10)
என்ற அப்பர் சுவாமிகள் தேவாரம் முதலியவை காண்க. இங்குச்
செம்மருதல் மதுவுண்
டமையா லாயிற்றென்றார். வண்டுகளுக்
கியல்பாகிய ஆனந்தமுங் கூடிற்றென்க.

     தண்சுரும்பு - பிற முயற்சிகளிற் காய்ந்து சூடுண்ட
புலன்களுக்குக் குளிர்ந்த - குளிர்ச்சி தருகின்ற - இசையினை
ஊதுதலால் தண் என்றார். "குளிர்ந்தூதாய் கோத்தும்பீ" என்ற
திருவாசகமுங் காண்க.

     தாழ்ந்த கொன்றைமரக் கொம்பில் அலர்மது வுண்டு
செம்மாப்பு ஆர்ந்து பாடிச் சுழலும் சுரும்பானது, இசையின்
விளையும் "ஆனந்தத் தேனிருந்த பொந்து", "ஆனந்தத் தேன்
சொரியும் குனிப்புடையான்" (திருவாசகம்) என்றபடி சிவானந்தத்தை
நாயனார்க்கு அங்கு நினைவூட்டிற்று; ஊட்டவே அவர் அக்
கொன்றையினைச் சடையாராகிய உடையாராகக் கண்டு அவர்பால்
இசையின் மடைதிறந்தார் என்ற குறிப்பும் காண்க. 20