946.
|
சென்றணைந்த
வானாயர் செய்தவிரைத் தாமமென
மன்றன்மலர்த் துணர்தூக்கி மருங்குதாழ்
சடையார்போல்
நின்றதொரு கொன்றையினை நேர்நோக்கி நின்றுருகி
யொன்றியசிந் தையிலன்பை யுடையவர்பான்
மடைதிறந்தார். 21 |
(இ-ள்.)
சென்று.............ஆனாயர் - சென்று சேர்ந்த ஆனாயர்;
செய்த விரைத்தாமம் என - கையாற்றொடுத்துச் செய்யப்பட்ட
மணமுடைய மாலைபோல; மன்றல்........தூக்கி - மணம் பொருந்திய
மலர்களாகிய கொத்துக்களைத் தொங்கவிட்டு;
மருங்கு....சடையார்போல் - பக்கங்களிலே தாழ்ந்துவிளங்கும்
சடைகளையுடைய சிவபெருமானைப்போல; நின்ற.......உருகி - நின்ற
மணமுடைய கொன்றை மரத்தினை நேராக நோக்கி, நின்று,
மனமுருகி; உடையவர்பால் ஒன்றிய சிந்தையில் அன்பை
மடைதிறந்தார். தம்மையுடையவராகிய சிவபெருமானிடத்தில்
ஒன்றுபட்ட மனத்தினின்றும் எழுகின்ற அன்பின் மடையைத்
திறந்தனர்.
(வி-ரை.)
செய்த விரைத்தாமம் - செய்த -
தொடுக்கப்பட்ட. செய்ததாமம் - விரைத்தாமம் என்று
பிரித்துரைத்துக்கொள்க. "கொத்தி னிற்பொலி கொன்றை
கொடுக்கிலே" என்றபடி இங்குக் கொன்றை மலர்கள் இயல்பாகவே
கொத்துக்களாகிய அடுக்காய் நீண்டு தொங்குதல், தொடுக்கப்பட்ட
மலர்மாலைகள் போன்றது என்றார். உருவுபற்றி வந்த உவமம்.
மலர்த்துணர்
தூக்கி என்றது பூங்கொத்துக்கள் மாலை
அணிந்தது போல (மேலே தொங்க) நிற்றல் குறித்தது.
மருங்குதாழ்
சடையார் போல் - தாழ்சடையார் -
சிவபெருமான். கொன்றையின் உருண்ட நீண்ட கனிகள்
சடைபோன்றன என்பது கருத்து. "மாலையின்றாங்குருவே போலுஞ்
சடைக்கற்றை" (அற்பு - அந் - 65) என்ற அம்மையார் திருவாக்குக்
காண்க. அதன் முன்னர், "சடைமேலக் கொன்றை தருகனிகள்" (50)
என்ற திருப்பாட்டில் உமை அம்மையாரது நீலக்குழலானவை
கொன்றைக்கனிகள் சடைமேல் விளங்குவன போன்றன என்ற
கருத்தும் காண்க. 220ல் உரைத்தனவும் பார்க்க.
நின்றதொரு
கொன்றை - மலர்களாகிய கொன்றை
மாலையும், கனிகளாகிய சடையும் தாங்குதலால் சிவபெருமானது
திருவுருவம் திகழ நின்றதாகிய ஒரு கொன்றை என்க. ஒரு
-
ஒப்பற்ற தன்மை. கொன்றை மாலையும் சடையும் சிவபெருமானுக்
குரிய திருவடையாளங்கள்.
நேர்நோக்கி
- கழியக்காணாது கண்ணெதிரே கண்டு.
தமதுள்ளத்துக் கண்ட தாழ்சடையார் போலவே புறத்தே கண்ட
கொன்றை காணப்பட்டது என்க. "நித்தினார்தில்லை மன்றுணின்
றாடல் நீடிய கோலநேர் காட்ட" (ஏயர்கோன் - புரா - 89) என்றது
காண்க. நோக்குதல் - ஊன்றிப்பார்த்தல்.
நேர்நோக்கி
நின்று உருகி ஒன்றிய சிந்தை - முதலில்
கொன்றை மலர்த்துணரும் கனியும் கண்டார். அவரது மனம் மொழி
மெய் என்ற மூன்றும் சிவனையே பற்றியிருப்பனவாதலின் முன்னே
காணும் கொன்றையும் உள்ளே காணும் சிவனுருவமும் நேராக
நோக்கினார்; அந்நோக்கத்தில் அழுந்தியவராகி, ஆனிரை காக்கப்
போந்த செயலை மறந்து நின்றார்; அதன்பின் மனம் உருகினார்;
உருகியதன் பயனாகச் சிந்தை உடையவரிடத்து ஒன்றியவராயினார்
என முறையே கண்டு கொள்க.
மடைதிறத்தலாவது
சிறைப்பட்ட நீரினை மடை திறந்து
அதன் வழியே வெளியில் விடும்போது அது பெருகியும் மிக
விரைந்தும் வருவதுபோல, உள்ளிருந்து வேகமாய் வெளிவருதல்
உடையவர், அன்பருளம் புகுதற்கும் இங்ஙனமே "சிறைபெறா
நீர்போற் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந்துறையுறை சிவனே"
(திருவாசகம்) என்று உவமை கூறுவதும் காண்க. அஃதாவது
அன்பின் பெருக்கு உள்ளே யடங்கியிருக்க மாட்டாது
வெளிப்படுதல்.
ஒன்றிய
சிந்தை - வேறு பிரித்துணரமாட்டாது ஒன்றாந்
தன்மையிற் பட்ட மனது. "ஒன்றி யிருந்து நினைமின்கள்" முதலிய
திருவாக்குக்கள் காண்க. இது பற்றி முன்னுரைத்தவையும் பார்க்க.
இப்பாட்டினுள்
விரைத்தாமம் - மன்றன் மலர் என இரண்டு
மணம் வைத்தார். இவற்றுள் முதலில் விரை என்றது
ஐம்புலன்களில்
நாற்றம் என்ற வாயிற்காட்சி யுணர்ச்சியினையும், பின் மன்றல்
என்றது அதனை உண்ணின்ற சிவக்காட்சியுடன் இணைத்துக் கண்ட
தன் வேதனைக்காட்சி யுணர்ச்சியினையும்குறித்தன.
கார்க்கொன்றை
பொதுவாக எல்லார் நெஞ்சையும் கவரும்
ஆற்றல் வாய்ந்தது என்றும், சீவகரணங்கள் சிவகரணங்களாக
மாறப்பெற்றவராயும், எல்லாவற்றையும் சிவமாகப் பார்க்கும் நிலை
யெய்தியவராயும் உள்ள ஆனாயருக்குக் கொன்றை சிவமாகவே
தோன்றலாயிற்று என்றும், பக்குவப்பட்ட உயிர்களுக்கு இயற்கை
சிவமாகத்தோன்றுவது இயல்பு என்றும் இங்கு விசேட உரை
காண்பாருமுண்டு. கார்காலத்து நிறைய மலர்ந்த கொன்றை
பொதுவாக யாவர் நெஞ்சையும் கவர்வதென்பது உண்மை. அஃது
ஐம்பொறிகளிற், கண்ணாகிய, இந்திரியத்தின் வாயிற்காட்சி
மட்டுமாய் ஒழிவது. அது வேறு. ஆனாயர் இங்குக் கொன்றையைச்
சடையாராகக் கண்ட காட்சி வேறு. இது வெறும் இந்திரியக்
காட்சியாய்க் கழியாது. அன்றியும் சீவகரணங்கள் சிவகரணங்களாக
மாறப் பெற்றதனாலோ அன்றி எல்லாவற்றையும் சிவமாகப் பார்க்கும்
நிலை யெய்தியதனாலோ உண்டாயதும் அன்று என்க.
இயற்கைத்தோற்றம் என்பதும் அதுவே சிவத்தோற்றம் ஆம்
என்பதும் உணரின் ஒரு தோற்றமேயாம். உண்மையால்
நோக்குங்கால் சிவனது ஆணையால் இயற்கைப்பொருளாகிய
மாயையினின்றும் தோற்றிய ஆக்கப்பொருளே உலகம். அதினின்றும்
தோன்றும் விகாரங்களை நோக்கி அது விகாரமின்றி நின்றழிதல்
பற்றி, உபசாரமாக இயற்கை எனப்படும். இயற்கை என்ற
தனிப்பொருள் இல்லை. சிவனது ஆணையே உலக இயற்கைப்
பொருள் என்பது சாத்திரம். ஆனாயர் முக்கரணங்களாலும்
சிவனடியல்லது வேறு பேணாதார் (934); அவ்வாறு பேணும்
செயலினைத் திருவடியன்புறு கானத்தின் குழல் வாசனையேயாக
மேற்கொண்டார் (937); அதன்படி ஐந்தெழுத்தினைச் சுருதி பெற
வாசித்துச் சராசரங்களுக்குத் தம் கருணை தங்கும் இசையமுது
அளித்து வருவாராயினர் (939); இவ்வொழுக்கத்தின்
முதிர்ச்சியினாலே மலர்ந்த கொன்றையின் காட்சியும் தாம்
எப்போதும் உள்ளே வைத்துக் கண்ட சிவக்காட்சியும் ஒன்றாயிற்று;
அதுமுதிர்ந்து உள்ளடங்கமாட்டாது இசை வெள்ளமாகப் பரந்தது
என்பதாம்.21
|