947.
|
அன்பூறி
மிசைப்பொங்கு மமுதவிசைக்
குழலொலியால்
வன்பூதப் படையாளி யெழுத்தைந்தும் வழுத்தித்தாம்
முன்பூதி வருமளவின் முறைமையே யெவ்வுயிரும்
என்பூடு கரைந்துருக்கு மின்னிசைவேய்ங்
கருவிகளில், 22 |
947. (இ-ள்.)
வெளிப்படை. அன்பினில் உள்ளே ஊறி
மேலே பொங்கும் அமுதமாகிய இசையினைத் தருகின்ற குழல்
ஒலியினாலே, வலிய பூதகணப்படையை ஆளும் சிவபெருமானுடைய
திருவைந்தெழுத்தையும் துதித்துத், தாம் முன்பு ஊதிவரும் அளவின்
முறைமைப்படியே, எவ்வுயிர்களையும் எலும்பும் உள்ளே நைந்து
உருக்கவல்லதாகிய இனிய இசை தரும் வேய்ங்குழற்கருவிகளில், 22
947.
(வி-ரை.) அன்பு ஊறி - அன்பினில்
உள்ளூறி. இசை
அமுது என்க. உருவகம். முன்னரும் இசையமுது (939) என்றார்.
ஆண்டுரைத்தவை பார்க்க.
குழல்
ஒலியால்..........தாம் - முன்பு ஊதிவரும் அளவில்
- முன்பு - இந்நாளினுக்கு முன்னாட்களில்; ஊதிவரும்
அளவின்
முறைமையே - நியதியானபடி அம்முறையாலே அந்த அளவும்
முறையும் 939ல் கூறினார்.
எவ்வுயிரும்......இன்இசை
- முன் இதனைத் "தடுத்த
சராசரங்களெல்லாந் தங்க வரும் தங்கருணை அடுத்த இசையமுது"
(939) என்றார். ஏனை இசைகள் யாவும் செவிப்புலனுக்கு விடயமாய்
அம்மட்டில் மனத்தினாற் கொள்ளப்பட்டு ஓசை யின்பத்தை
விளைத்து ஒழிவன. இந்த இசை அவ்வாறொழியாது உயிரினுக்கும்
சிறந்த நன்மையாகிய இன்பந் தரத்தக்கதாய் மனத்தினையும் கடந்து
உயிரினுட் புகுவது; எலும்பையும் கரையச்செய்து உருக்குவதாகும்
என்பது. இதனை மேல் 961, 962ல் முடித்துக் கூறுவதும் காண்க. இது
உயிர்க்கு உறுதி தரும் திருவைந்தெழுத்தினை உள்ளுறையாகக்
கொண்டமை இச்சிறப்புக்குக் காரணமாம்.
வேய்ங்கருவிகளின்
- பலவகைப்பட்ட மூங்கில்களினாற்
செய்யப்படும் பலவகைப்பட்ட இசைக்கருவிகள் பலவற்றுள்ளும்
தேர்ந்தெடுத்த குழல் என்க. கருவிகளில் - இன்னிசை வங்கியம்
எடுத்து என வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. 22
|