948.
|
ஏழுவிர
லிடையிட்ட வின்னிசைவங் கியமெடுத்துத்
தாழுமலர் வரிவண்டு தாதுபிடிப் பனபோலச்
சூழுமுரன் றெழநின்று தூயபெருந் தனித்துளையில்
வாழியநந் தோன்றலார் மணியதரம் வைத்தூத, 23 |
948. (இ-ள்.)
வெளிப்படை. ஏழுவிரல்கள் இடையீடுபடத்
துளையிட்ட இன்னிசை வங்கியத்தை எடுத்து, தாழ்கின்ற மலர்களில்
வண்டுகள் தாது பிடிப்பது போலச் சூழ் துளைகளிலும், முரலுதலும்,
எழுதலும் நிற்றலும் செய்து, தூய பெரிய தனித் துளையில்,
வாழியாராகிய நமது தோன்றலார் அழகிய அதரத்தை வைத்து ஊத,
23
948. (வி-ரை.)
ஏழுவிரல் இடை இட்ட - இடையிடையே
ஒவ்வொரு விரற்கிடை அளவாக இடம் விட்ட
எட்டுத்துளைகளையுடைய.
இன்இசை
வங்கியம் - இனிய இசையைப் பெருக்கும் குழல்.
வங்கியம் - குழலின் மரபுப்பெயர். வங்கியம் - வங்கிசம் -
வம்மிசம் என்பன வம்சியம் என்னும் ஒரு சொல்லின் திரிபு
வழக்குக்கள். கிழங்காகிய ஒரே வம்மிசத்திலிருந்து புடைத்துக்
கிளைத்துத் தோன்றுவதனால் மூங்கிலுக்கு வம்சம் எனப்பெயர்
வழங்குவதாயிற்று. வம்சத்தினின்றும் ஆயது வம்சியம். அது தமிழில்
வங்கியம் என்று திரிந்து நின்று, "எண்ணெய்"என்பது போல,
ஏனையவற்றிற்றோன்றும் கருவிகட்கும் பெயராயது என்ப. இது
நிகண்டினும் எடுக்கப்பட்ட பெயர். குழலுக்கு மூங்கில் உத்தமம்
என்பர். "குழல் - வங்கியம். அதற்கு மூங்கில்,
சந்தனம்,
வெண்கலம், செங்காலி, கருங்காலி என ஐந்துமாம்.....இவற்றுள்
மூங்கிலிற் செய்வது உத்தமம்" என்பது அடியார்க்கு நல்லார்
உரையிற் காணப்படும். இதுவே உத்தமமாதலின் மூங்கிலின்
பெயராகிய வங்கியம் என்பதே குழலுக்கு மரபுப் பெயராய்
வழங்கலாயிற்று.
புல்லாங்குழல்
என்ற பெயரும் இப்பொருளினையே குறிக்கும்.
புல் என்ற வகுப்பிற்பட்ட தாவரப் பொருளால் ஆகிய குழல்
என்பது பொருள். (புள்ளாங்குழல் என வழங்குவது தவறாகிய
மரூஉவழக்கு). தாவரங்களில் காழ்த்த பாகம் வெளியே யிருப்பதால்
மூங்கில்வகை புல் என்ற இனத்தைச் சேர்ந்தது என்பர். "புறக்கா
ழனவே புல்லென மொழிப" என்பது தொல்காப்பியம் (மரபியல்).
வங்கியம்
- "இதன் பிண்டியிலக்கணம் - நீளம் இருபது
விரல்; சுற்றளவு நாலரை விரல். இது துளையிடுமிடத்து நெல்லரிசியில்
ஓர் பாதி மரனிறுத்திக்கடைந்து வெண்கலத்தாலே அணைசுபண்ணி
இடமுகத்தை யடைத்து வலமுகம் வெளியாக விடப்படும்........இனித்
துளை யளவிலக்கணம் - அளவு இருபது விரல். இதிலே தூப
முகத்தின் இரண்டு நீக்கி முதல் - வாய்விட்டு, இம் முதல்வாய்க்கு
ஏழங்குலம் விட்டு வளைவாயினுமிரண்டு நீக்கி நடுவினின்ற ஒன்பது
விரலினும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரை
என்று நீக்கி, நின்ற ஏழினும் ஏழு விரல் வைத்து ஊதப்படும்.
துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும்."
(அடியார்க்கு நல்லாருரை - சிலப் - அரங் - ஆய்ச்.)
ஏழுவிரல்.....வங்கியம்
- மேலே கூறியபடி ஒன்பது
விரலினும் ஒவ்வோர் விரலிடையிட்டு எட்டுத் துளைக
ளிடப்படுவனவாயினும் ஏழு துளைகளிற் செய்யும் தொழிற்பாட்டின்
ஏழிசையும் பிறக்குமாதலானும், இது குழலின் சிறப்பியல்பாதலானும்
ஏழு விரலிடையிட்ட - வங்கியம் என்றார்.
ஏழு விரலாவன -
இடக்கைப் பெருவிரலும் சிறுவிரலும் நீக்கி மற்றை மூன்றும் விரலும்,
வலக்கையிற் பெருவிரலொழிந்த நான்கு விரலுமாம். துளைகள்
ஏழிலும் ஏழுவிரலும் வைத்து வாசிக்க இவற்றுள்ளே ஏழிசையும்
பிறக்கும். ஏழு துளையினும் ஏழிசையும் எழுத்தாற் பிறக்கும்.
அவ்வொழுத்தாவன : ச - ரி - க - ம - ப - த - நி என்பனவாம்
எனவும், இவ்வேழெழுத்தினையும் மாத்திரைப்படுத்தித் தொழில்செய்ய
இவற்றுள்ளே எழிசையும் பிறக்கும் எனவும், இவ்வேழிசையாவன:
சட்சம், இடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம்
என்பனவாம் எனவும், இவற்றுள்ளே தமிழ்ப் பண்கள் பிறக்கும்
எனவும் கூறுப.1 வீணையில் நரம்பு தெறித்தலினாலுளதாதல் போலக்,
குழலினுள் விரற்றொழில் வகையினால் ஏழிசையும் பிறத்தலால்
விரலினை முதலில் எடுத்தோதி ஏழு விரலிடை யிட்ட
..........வங்கியம் என அத்தன்மை பற்றிக் குழலினைக் கூறினார்.
இதுபற்றியே "மேயதுளை பற்றுவன விடுப்பனவாம் விரனிரையில்"
(951) எனவும், "விரற்றொழில்க ளளவுபெற வசைத்தியக்கி" (952)
எனவும் பின்னர் விரித்துக் கூறுவார்.
தாழுமலர்..........நின்று
- தாழும் - மேலிருந்து பாய்ந்து
தாழும். விரும்பும் என்றலுமாம். வண்டு தாது பிடிப்பனபோலச்
சூழுமுரன்றெழ நின்று என்றது மலர்களில் வண்டுகள் மொய்த்து
அவற்றின் தேன்உண்ணவும், தாதுக்களை எடுத்துச்செல்லவும் சூழும்
முரலுதல், எழுதல், நிற்றல் என்ற செயல்கள் செய்தலைக் குறித்தது.
தாது - மகரந்தம். தாது பிடித்தல்
என்பது தாது நுண்பொடிகளை
ஏற்றபடி எடுத்துக் குழைத்துச் சேர்த்துக்கொண்டுபோதல். தாதுப்
பொடிகளினால் வண்டுகள் தமது தேன் கூடுகளை அமைக்கும்
என்ப. அதன் பொருட்டுத் தாதுத் தூள்களை ஒவ்வொன்றாக
மலர்களின் கேசரங்கள் என்ற பூந்தாள்களின்று எடுத்து ஒன்று
திரட்டிக்கொண்டு செல்வதற்கு உரிய கால அளவுவரை வண்டுகள்
பலமலர்களையும் சூழ்ந்து முரன்றும், எழுந்தும், நின்றும் தொழில்
செய்யும். இத்தொழில்களாற் பலதிறப்பட்ட சுரங்கள் போன்ற
ஓசைஎழும்பும். ஆதலின் இங்கு இதனை உவமை கூறினார்.
வினைபற்றிவந்த உவமம். முரலுதல் - ஊதுதல்.
இது தாதுக்களைப்
பூந்தாள்களினின்றும் பிரித்தெடுத்தற்கும் உதவும். பிடிப்பனபோல
-
ஊத என்று கூட்டுக. இதனால் விரலுளர்துளை ஏழின் றொழில்
கூறினார்.
தூய
பெருந் தனித் துளை - இதனை முத்திரை என்பர்.
நாயனாரது மணியதரம் வைத்து ஊதப்பெற்றமையால் தூய (துளை)
என்றும், ஏனைத் துளைகளினும் பெரிதாதலின் பெருந்
(துளை)
என்றும், அவற்றினின்றும் தனியே அமைக்கப்படுதலின் தனித்
(துளை) என்றும் கூறினார். வாழிய - வாழும்பொருட்டு.
273
பார்க்க. இவரது இசை உயிர்களை வாழ்வித்தல் 939, 961, 962ல்
கூறப்பட்டன. தோன்றல் - தலைவர். நாயனார்
என்ற
சொற்பொருளை நினைவூட்டுவார் நம் தோன்றலார்
என்றார்.
ஆயர்தலைவர் என்றலுமாம். 937, 943 பார்க்க. மணியதாம் -
அழகிய உதடு. தனித்துளையில் - வைத்தூத என்ற
இதனால்
ஊதுதுளையின் றொழில் கூறினார்.
தாவிப்
பிடிப்பன - என்பதும் பாடம். 23
1இக்
குறிப்புக்களும், மேல்வருவனவும் பெரும்பாலும்
அடியார்க்கு நல்லார் உரை (சிலப். அரங். ஆய்ச்.) யினைத் தழுவி
எழுதப்பட்டன. விரிவுகள் ஆண்டும் , இன்னும் விரிந்த இசை
நூல்களுள்ளும் கண்டுகொள்க. இவ்வாராய்ச்சியில் வல்லுநராகிய
இமயமால்வரை ஸ்ரீ மத் விபுலானந்தஅடிகள் அவ்வுரைக்
குறிப்புக்களிற் சில பகுதிகள் விசாரிப்பிற் றிருத்தி யமைத்துக்
காணப்பட வேண்டுமென் றறிவித்ததனோடு, தமது ஆராய்ச்சியிற்
பட்ட குறிப்புக்களை எழுதியனுப்புவதாகவும் அன்புடன் வாக்களித்
தருளியுள்ளார்கள், அவை கிடைப்பின், பின்னர்ச் சேர்க்கையாகப்
பதிப்பிக்கப்படும்.
|