949




முத்திரையே முதலனைத்து மறைத்தானஞ் சோதித்து
வைத்ததுளை யாராய்ச்சி வக்கரனை வழிபோக்கி
யொத்தநிலை யுணர்ந்ததற்பின் னொன்றுமுதற்
                                படிமுறையாம்
அத்தகைமை யாரோசை யமரோசை களினமைத்து, 
24

     949. (இ-ள்.) முத்திரையே........சோதித்து - முத்திரைத் துளை
முதலாக முறையாகிய தானங்களை ஆராய்ந்து; வைத்ததுளை.............
போக்கி - இசை நூல்களில் விதித்த அளவில் அமைத்துவைத்த
ஏனைத் துளைகளை ஆராய்ச்சி செய்வதாகிய வக்கரனையின்
வழிப்பட விரல்களைமுறையிற் போக்கி; ஒத்தநிலை உணர்ந்ததற்பின்
இசையொத் திருத்தலை அறிந்து கொண்ட பின்னர்; ஒன்று முதல்
படிமுறையாய் சட்சம் முதல் நிடாதம் வரைக்கும் வரிசையாக;
அத்தகைமை......அமைத்தார் - அத் தன்மையாக எச்சும் தக்கும்
ஆகிய ஓசைகளில் அமைத்தருளி, 24
  

     949. (வி-ரை.) முத்திரையே.......சோதித்து - முத்திரை -
வளைவாய்க்கடுத்த எட்டாவது துளை. முறைத்தானம் - அனைத்தும்
என்க. முறைத்தானங்களாவன முத்திரை நீக்கிச் சுரங்கள் பிறக்கும்
ஏனை ஏழு துளைகள்.

     வைத்ததுளை - ஏற்ற கருவியும் துளைகளும் இசை
நூலிலக்கணப்படி அமைதலைத் தெரிந்து இட்ட துளைகள். 938ல்
விரித்தபடி அமைத்த துளைகள் என்க.

     ஆராய்ச்சியாகிய வக்கானை என்க. வக்கரனை
வழிபோக்கி
- சோதனைசெய்ய விரல்களை முறையே செலுத்தி.
வக்கரனை - எல்லா இராகங்களும் குழலின் ஆறு
துவாரங்களாலேயே உண்டாகும்படி விரல்களை முறையே செலுத்திச்
சமஞ்செய்து சோதித்தல். இசைநூல் மரபுப்பெயர். வழிபோக்குதல் -
சுரங்களின் வரிசைபெற விரல்களை முறையே மெலிந்தும்
சமஞ்செய்தும் வலிந்தும் பொத்துதல். இதனைப் "பற்றுவன
விடுப்பனவாம் விரனிரையில்" (951) என்பது காண்க.

     ஒத்தநிலை - அவைகள் ஒத்து நிகழும் நிலைமை. இசை
மாறுபடாமல் ஒத்திருத்தல்.

     ஒன்று முதல் படிமுறை - சட்சம் முதல் நிடாதம் வரை
உள்ள ஏழுசுரங்களின் படிமுறையாகிய வரிசை. முத்திரைக்கடுத்த
துளை சட்சம்; அதற்கடுத்தது இடபம்; அதற்கடுத்தது காந்தாரம்;
அதற்கடுத்தது மத்திமம்; அதற்கடுத்தது பஞ்சமம்; அதற்கடுத்தது
தைவதைம்; அதற்கடுத்தது நிடாதம் என்னும் படிமுறை
கொள்ளப்படும். இசைகள் பிறக்குமிடத்துத் தாரத்தில் உழையும்,
உழையிற் குரலும், குரலில் இளியும், இளியுளு துத்தமும், துத்தத்தில்
விளரியும், விளரியுள் கைக்கிளையும், கைக்கிளையுள் தாரமும் என
ஒன்றினின்னொன்று பிறக்கும் என்னும் படிமுறையும் கொள்ளப்படும்.

     ஆரோசை - அமரோசை - எச்சு - தக்கு என்னும் ஓசை
வேறுபாடு. ஏற்றுதல் - இறக்குதல், ஆரோகணம் அவரோகணம்
என்றும் கூறுவர்.

     வக்கானை - படிமுறையால் - அமைத்தார் - என்பனவும்
பாடங்கள். 24