950.



மாறுமுதற் பண்ணின்பின் வளர்முல்லைப்
                              பண்ணாக்கி
யேறியதா ரமுமுழையுங் கிழமைகொள விடுந்தானம்
ஆறுலவு சடைமுடியா ரஞ்செழுத்தி னிசைபெருகக்
கூறியபட் டடைக்குரலாங் கொடிப்பாலை
                             யினினிறுத்தி,
25

     950. (இ-ள்.) மாறுமுதற் பண்ணின்பின் - மாறிவரும்
சுரங்களையுடைய குறிஞ்சிப் பண்ணின் பின்னே; வளர்முல்லைப்பண்
ஆக்கி - வளரும் முல்லைப் பண்ணினை ஆக்கி; ஏறிய தாரமும்
உழையும் - பாலையாழுக்கமைந்த தாரமும் உழையும்; கிழமை கொள
இடும் தானம் - கிழமை கொள்ளும்படி இடுகின்ற தானங்களில்;
ஆறு...............பெருக - கங்கையாறு உலவுதற் கிடமாகிய
சடைமுடியுடைய சிவபெருமானது திருவைந் தெழுத்தின் இசை
பெருகும்படி; கூறிய பட்டடைக் குரலாம் - சொல்லப்பட்ட இளியைக்
குரலாகவுடைய; கொடிப்பாலையினில் நிறுத்தி - கொடிப்பாலையில்
நிறுத்தி, 25

     950. (வி-ரை.) மாறு முதற்பண் - ஐந்திணையினுள் முதலில்
வருவது குறிஞ்சியாதலின் முதற்பண் என்பது குறிஞ்சிப்பண்ணைக்
குறித்தது; மாறும் என்றது அப்பண்ணிற்குரிய சுரங்கள் மாறிவருவது
குறித்தது. பண்ணினபின் என்று பாடங்கொண்டு முதலில்
விஷமமாகப் பாடின பின்பு என்றுரைகூறுவாரு முண்டு.
இப்பொருளில் மாறு - விஷமம். இது பாடுதலின் ஒரு பேதம்
என்பர் இராமநாதச்செட்டியார்.

     வளர்முல்லைப்பண் ஆக்கி - முல்லைக்குரிய பண்ணைச்
செய்து. இத்திணைக்கும் நிலத்துக்குமுரிமை பற்றியும் சிறப்புப்பற்றியும்
வளர் என்ற அடைமொழியும் தந்து சிறப்பித்தார்.

     ஏறியதாரமும் உழையும் கிழமை கொள - "தாரத்து உழை
தோன்றப் பாலையாழ்" என்றபடி பாலையாழ் ஆக்கி என்பதாம்.
தாரம் - உச்சவிசை. அது மூக்காலுண்டாவது; உழை - தலையை
இடமாக உடைய இசை; கொடிப்பாலை - நெஞ்சை இடமாக
உடைய இசை. இளிஎன்னும் பண்ணே குரலாக எழும்புவது.
பட்டடை
- அழுத்தம். இவை இராமநாதச் செட்டியார் உரைக்
குறிப்பு. "பட்டடை - நரம்புகளின் இளிக்குப் பெயர்; என்னை?
எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின்" - அடியார்க்கு நல்லார்.

     கிழமை - இசைக்கலை மரபுப்பெயர்களுள் ஒன்று. 221-ல்
மிடற்றுப்பாடலுக்கேற்ப எடுத்து உரைத்தவை பார்க்க. கிழமை
கொள - பொருந்த என்றுரை கொள்வாருமுண்டு.

     இசை - இராகம். இடும்தானம் - கொடிப்பாலையினின் -
நிறுத்தி என்று கூட்டுக.

     கொடிப்பாலையினில் நிறுத்தி - கொடிப்பாலை என்பது
பாலையாழ் வகை பலவற்றுள் ஒன்று. அவை குரல் குரலாயது
செம்பாலை; துத்தங் குரலாயது படுமலைப்பாலை; கைக்கிளை
குரலாயது செவ்வழிப்பாலை; உழை குரலாயது அரும்பாலை;
இவற்றின் அமைத்துப் பின்னர் இளி குரலாய கொடிப்பாலையினில்
இடுந்தானம் நிறுத்தி என்க. 25