952.
|
மந்தரத்தும்
மத்திமத்துந் தாரத்தும் வரன்முறையாற்
றந்திரிகண் மெலிவித்துஞ் சமங்கொண்டும்
வலிவித்தும்
அந்தரத்து விரற்றொழில்க ளளவுபெற
வசைத்தியக்கிச்
சுந்தரச்செங் கனிவாயும் துளைவாயும்
தொடக்குண்ண, 27 |
952.
(இ-ள்.) மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் - மெலிவு
சமன் வலிவு என்ற மூவகைச் சுருதியிலும்; தந்திரிகள்.......வலிவித்தும்
- சுரத்தானத்துக்குரிய துளைகளை முறையே மென்மையாகவும்
சமமாகவும் வன்மையாகவும் பொத்தி; அந்தரத்து.......இயக்கி -
இடையிட்ட துளைகளை உரியஅளவு பெறும்படி அசைத்தும்
இயக்கியும்; சுந்தரம்......தொடக்குண்ண - அழகிய சிவந்த கனிபோன்ற
அதரமும் குழலின் துளைவாயும் ஒன்றுபட்டுக் கூடி யிணங்க, 27
952. (வி-ரை.)
மந்தரம் - மெலிவு; மத்திமம் - சமன்;
தாரகம் - வலிவு. இவை ஓசை பேதங்கள். இவற்றுக்கு முறையே
மெலிவித்தும், சமங்கொண்டும், வலிவித்தும் எனத் தொழிற்பாடு
கூறுவது காண்க. இவற்றை முறையே படுத்தலோசை, நலிதலோசை,
எடுத்தலோசை என்றுங் கூறுவர், "குறையாநிலை மும்மைப்படி" (221)
என்ற விடத்துரைத்தவை பார்க்க.
தந்திரி
என்றது இங்குக் குழலிசைக் கருவிக் கேற்பத்
துளைகளைக் குறித்தது ஆகுபெயர்.
அந்தரம்
- இடையிட்ட துளைகள். விரலுளர் துளைகள்
என்ப.
அந்தரத்து......இயக்கி
- மெலிவும் சமனும் வலிவுமாக
வரன்முறையால் ஓசையளவு படுத்துதற்கு விரல்களை அந்தந்த
அளவுக்குப்பொத்துதல், விடுத்தல், அசைத்தல், இயக்குதல் முதலிய
தொழில்களைச் செய்து என்க.
கனிவாய்
- அருள் கனிந்த வாய் என்றலுமாம்.
துளைவாய்
- குழலின் துளைவாய். குழலின் எட்டுத்
துளைகளில் விரல்கள் வைத்து இயக்கிச் சுரங்களைக் காட்டும் ஏழு
துளைகள் போக, வாய் வைத்து ஊதும் எட்டாவது துளை. இவற்றை
முறையே விரலுளர் துளை எனவும், ஊது
துளை எனவும் கூறுவர்.
வாயும்
துளைவாயும் தொடக்குண்ணல் - விரற்றொழில்
மெலிவும் சமனும் வலிவும் செய்தற்கேற்றவாறு காற்றுச் செல்வதற்குக்
குழலின் துளைவாயில் தமது வாயும் பொருந்தவைத்து ஊதுதல்.
தொடக்குண்ணப் - பரப்பினார் - (953)
என வரும் பாட்டுடன்
கூட்டி முடிக்க.
முன்மணி
அதரம் வைத்தூத என்றது இசை ஒலி செய்யும்
தொடக்கத்தினையும், இங்குக் கனிவாயும் துளைவாயும்
தொடக்குண்ண(ப் பரப்பினார்) என்றது அவ்வாறெழுப்பிய
இசையினைப் பாகுபடுத்தி மாதுரிய நாதத்தில் பாணியும் இயலும்
தூக்கு நடை முதற்கதியில் ஒழுங்கு செய்து பரப்புதலையும்
குறிப்பனவாதலின் கூறியது கூறலன்மை யுணர்க.
சுந்தரச்
செங்கனிவாய் - முன், மணியதரம் (918)
என்றதற்கேற்ப இங்கு இவ்வாறு கூறினார். இவை நாயனாரது
இந்நிலையே ஐயர் மருங்கணையும் அருட்டிரு மேனிப் பொலிவைப்
பாராட்டும் முறை. "மாசறு கோலம்" (670), "புண்ணியக் கங்கை நீரிற்
புனிதமாந் திருவாய்நீர்", "வண்ணமென் குதலைச் செவ்வாய்" (671)
என்பன முதலாகக் கண்ணப்பநாயனாரது அருட்டிரு மேனியின் பொலிவைப்பாராட்டியதும்,
"தாமரைச்செங் கைகளினாற்
சப்பாணிகொட்டினார்" (திருஞான - புரா - 46), "குறுவியர்ப்புத்
துளியரும்பக் கொழும்பொடியாடியகோலம்" (மேற்படி 52),
"பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்போங்கும் செங்கை" (மேற்படி
172), "பாத தாமரை" (மேற்படி 187) என்பன ஆளுடைய
பிள்ளையாரது அருட்டிருமேனிப் பொலிவினைப் பாராட்டிய
தன்மையும், "தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனி" (திருநா -
புரா - 140) என்பது முதலாக ஆளுடைய அரசுகளின் கருணைப்
பொலிவைப் போற்றிய தன்மையும், பிறவும் இங்கு நினைவு
கூர்தற்பாலன. 27
|