953.




எண்ணியநூற் பெருவண்ண மிடைவண்ணம்
                             வனப்பென்னும்
வண்ணவிசை வகையெல்லா மாதுரிய நாதத்தில்
நண்ணியபா ணியுமியலுந் தூக்குநடை முதற்கதியிற்
பண்ணமைய வெழுமோசை யெம்மருங்கும்
                             பரப்பினார்.
  28

     953. (இ-ள்.) எண்ணிய......எல்லாம் - இசை நூல்களில்
அளவுபடுத்திய பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு என்கிற
இசைவகைகள் எல்லாம்மதுரத்தையுடைய நாதத்தில்; நண்ணிய
பாணியும் - அமைந்த தாளமும்; இயலும் - இசையும்; தூக்கும் -
தூக்கும்; நடைமுதற்கதியில் - நடை முதலிய கதிகளுடன்;
பண்.........பரப்பினார் - பண் பொருந்த எழுகின்ற ஓசையை எல்லாப்
பக்கங்களிலும் பரவச் செய்தார். 28

     953. (வி-ரை.) நூல் எண்ணிய என மாற்றுக. நூல்களால்
அளவுபடுத்தப்பட்ட.. எண்ணுதல் - அளவு படுத்துதல். நூல் -
இசைக்கலை நூல்கள். கந்தருவவேதம் என்பர் வடவர்.

     பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு - இவை
வண்ணவகை. வனப்பு - வனப்பு வண்ணம். செய்யுளுக்கு வண்ணம்
வனப்பாதல் போல, இசைநூலில் பண்ணுக்கு இவ் வண்ணவகைகள்
கூறப்படும் எனவும் இவை இக்காலத்தரியன எனவும் கூறுவர்
ஆறுமுகத்தம்பிரானார்.

     பெருவண்ணம் - நெட்டெழுத்துக்களையே தொடுத்துப்
பாடுவது எனவும், இடைவண்ணம் - இடையெழுத்து மிகுதி வருவது
எனவும், வனப்பு வண்ணம் - எழுத்துக்கள் ஒன்றினோடொன்று
பிளவுபடாமல் இசைந்து அழகு பொருந்தியிருப்பது எனவும் கூறுப.
இவை செய்யுட்டன்மை குறிப்பன.

     வண்ணம் - சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் எனச்
சொல்வகை நான்காம் எனவும், அவற்றுள் வண்ணம்
நானான்கடியான் வருவதெனவும், அதுதான் ஒருவகையான் -
பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம்
என மூன்று
வகைப்படும் எனவும், அவற்றுட் பெருவண்ணம் ஆறாகவும்,
இடைவண்ணம் இருபத்தொன்றாகவும், வனப்பு வண்ணம்
நாற்பத்தொன்றாகவும் (நாற்பத்தொன்பதாக என்றும் பாட 
பேதமுண்டு) வருமெனவும் கூறுப. (சிலப் - 3 - அரங் -
அடியார்க்கு நல்லாருரை பார்க்க.) இதுவும் சொற்கூறுபாடு
பற்றியதாம். "யாழுங் குழலுஞ் சீரும்" (சிலப் - அரங் - 26) என்ற
இடத்துச் சீர் என்றதற்குச் "செம்முறை யுறழ்பே மெய்ந்நிலை
கொட்ட, னீட்ட னிமிர்த்தல்" என்று சொல்லப்படா நின்ற வண்ணக்
கூறுபாட்டையும், இருவகைத் தாளக் கூறுபாட்டையும், பாலை
நிலையினையும், பண்ணு நிலையினையும் நிலைப்படுத்துத் தூய்தாகக்
காட்டும் தன்மை", "வண்ணம் - நிறம்" என்ற அடியார்க்கு
நல்லாருரையும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இது இசைக்
கூறுபாட்டினைப் பற்றியதாம்.

     வண்ண இசை - இசை வகை எல்லாம் என்றாராகலின்
இங்கு வண்ணம் என்றது யாப்பின் வகையாகிய சொற்கூறுபாடன்றி
இசை ஓசைக் கூறுபாடு குறித்ததென்று கொள்ள இடமுண்டு.
அன்றியும் "எழுத்தஞ்சும் தொடுத்த முறை ஏழிசையின் சுருதிபெற
வாசித்து" (939), "எழுத்தைந்தும் வழுத்தித் தாம் முன் பூதி வரும்"
(947) என்று கூறியவாற்றால் ஆனாய நாயனார் திருவைந்
தெழுத்தாகிய மந்திரத்தினையே இசைச் சுருதிபெற வாசித்தனர்
என்று கொள்ளக்கிடக்கின்றது.

     ஆனால் "உள்ளுறை யஞ்செழுத்தாக" (954) என்றதனால்
வண்ண இசை வகைகளில் வைத்துத் திருவைந் தெழுத்தினை
உள்ளுறையாகக் கொண்ட கீத இசை பாடினார் என்று கொள்ளவும்
இடமுண்டு. "பண்ணொன்ற விசைபாடும்", "கீதத்தை மிகப்பாடும்",
"அளப்பில் கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளுமாறே" என்று
தேவராத் திருவாக்குக்கள் ஈண்டுச் சிந்திக்கத்தக்கன.

     இசை - 221 உரை பார்க்க. மாதுரிய நாதம் -
மதுரத்தையுடையது மாதுரியம், வடசொல் முடிபு. நாதம் - இசை
ஓசையின் அமைவு.

     பாணி - தாளம் - 221 பார்க்க. இயல் - இராகம். பாணி -
இராகம் எனவும், இயல் - மூர்ச்சனை எனவும் கூறுவாரு முண்டு.

     தூக்கு - "பாடலும் பாணியும் தூக்கும்", (சிலப் - ந. அரங் -
16) என்ற விடத்துத் தூக்கு என்பது "இத்தாளங்களின் வழிவரும்
செந்தூக்கு, மதலைத் தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத்
தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கு, எனப்பட்ட ஏழு தூக்குக்களும்
என்க. 'ஒருசீர் செந்தூக் கிருசீர்மதலை, முச்சீர் துணிபு நாற்சீர்
கோயில், ஐஞ்சீர் நிவப்பே அறுசீர்கழலே, யெழுசீர்
நெடுந்தூக்கென்மனார் புலவர்' என்றாராகலின்" என்று அடியார்க்கு
நல்லார் உரைத்தவை பார்க்க. தூக்கு - ஏற்றம் என்பாரு முண்டு.

     முதற்கதி - விளம்ப கதி என்ப.

     பண் அமைய எழும் ஓசை - பண் 221 - உரை
அடிக்குறிப்புப் பார்க்க. குழலினுள் ஏழிசையும் தோன்றும்
என்றதனையும், இவற்றுட் பண்பிறக்கும் என்றதனையும், "ச ரி க
ம ப த நி யென் றேழெழுத்தாற் றானம், வரிபரந்த கண்ணினாய்
வைத்துத் - தெரிவரிய, வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே
பண்பிறக்குஞ்,
சூழ் முதலாஞ் சுத்தத் துளை" என்றதனா லறிக.

     பண்ணிசை யமைதியினையும் இசையிலக்கணங்களையும்
இசைநூன் மரபுப்படி மிடற்றுப்பாடலுக்கேற்றவாறு 221-ல் ஒரு
பாட்டாற் சுருக்கி எடுத்துக் கூறிய ஆசிரியர், அதனையே
குழற்கருவியன் இசைக்கேற்றவாறு, இசைக் கூறுபாடுகளை, 938, 948
- 953 வரை, இப்பாட்டுக்களான் விரித்துக் கூறுகின்றார். "யாழுங்
குழலும் சீருமிடறும்" (சிலப் - 3 - அரங் - 26) என்று
முறைப்படுத்தியபடி யாழினோடுசேர்த்து மிடற்றுப்பாட்டுக்கு
முன்வைத்து எண்ணப்படும் சிறப்புவாய்ந்தது குழல்; யாழ் - குழல்
என்ற இரண்டனுள்ளும், சொல்லை அவ்வாறே மழலையழகுபடத்
தோற்றுவித்து இசைக்கும் சிறப்புப்பற்றிக் குழலினை முன்வைத்துக்
"குழலினி தியாழினி தென்ப" என்று திருக்குறளினுட் பேசினார்.
அன்றியும் இச்சரிதம் குழலால் விளைந்த சிறப்புடையது. ஆதலின்
விரிவு குழலினோடு புணர்த்திக் கூறினார் என்பதாம். இதுபற்றியே
ஆசிரியர் முன்னர் இசையிலக்கணத்தையும் அமைதியையும் சுருக்கிக்
கூறியருளினர். இவ்வாறு பின்னர் ஏற்ற பெற்றி விரிக்கவேண்டிய
பகுதியை முன்னர்க் கூறநேர்ந்தபோது சுருக்கிக் கூறுதல் ஆசிரியரது
சிறப்பாகிய மரபுகளுள்ஒன்று. கருவியின் இசையியல்பை இங்கு
விரிவுபடக் கூறினாராதலின், பின்னர்த் திருநீலகண்ட யாழ்ப்பாணர்
பாடிய யாழினிசைபற்றிக் கூறவரும்போது இங்கு வகுத்தவற்றை
யுட்படுத்திச் சுருக்கிக் கூறும் பொருத்தமும் காண்க. திருஞான -
புரா - 134, 135, 136-லும், திருநீலகண்டயாழ்ப்பாணர் புராணம்
2-லும் கூறிய திறம் நோக்குக. முன்னர் மிடற்றுப்பாடல் இயல்பற்றி
221ல் உரைத்தவற்றுள் குழற்கருவிக்கேற்றவற்றை ஈண்டமைத்துக்
கொள்க. 28