954.
(இ-ள்.) வெளிப்படை. வள்ளலாராகிய ஆனாயர்
வாசிக்கின்ற அழகிய துளைவாயினையுடைய வேய்ங்குழலிலே
திருவைந்தெழுத்தினை உள்ளுறையாகக் கொண்டொழுக்கெடுத்துப்
(எம்மருங்கும்) பெருகி எழுகின்ற மதுரம் பொருந்திய
இசையொலியின் வெள்ளமானது நிறைந்து எல்லா வுயிர்களிடமும்,
மேலான வானத்தின் வாழும் தேவர்களது கற்பகமரத்தின் விளைந்த
தேனினைத் தெள்ளிய அமுதத்தினுடன் கலந்து செவி வழியாக
வார்ப்பதுபோல நிறைக்க,
954.
(வி-ரை.) வள்ளலார் - சராசரங்கட்கெல்லாம்
இசையமுது தேக்கித் தங்கருணையின் மூழ்குமாறு அமுதளித்த
வள்ளன்மை குறித்தது.
குழலின்
எழும் ஒலி என்று கூட்டுக.
உள்ளுறை
அஞ்செழுத்தாக - பண்ணிசைக்கு உள்ளுறைப்
பொருள்வேண்டும். உள்ளுறை இல்லாத வெறும் பண்ணும்,
இராகமும், தாளமும் பயனிலவாம். இதனை உணராத இந்நாண்
மாக்கள் உள்ளுறை யில்லாத வெறும் இராக தாள விலயங்களிலே
மயங்கிப் பலவகைப்பட்ட இசையரங்குகளுட் சிக்கிச்
செவிப்புலனின்பத்துக் கடிமைப்பட்டு ஒழிதலுடன் தமது
அரியகாலத்தையும் பொருளையும் இழந்துபடுகின்றார்கள். இவ்வாறு
ஐம்புலனின்பங்களில் ஒன்றாகி யொழியும் செவியின்பத்து ளாழ்ந்து
கழியும் பிறவி, "ஓசையின் விளிந்த புள்ளுப்போலவும்" என்றபடி,
வறிதே கழிந்து சாகும் பிறவியாகுமன்றி, உயிர் ஈடேறுதற்குச்
சாதனமாகாது. "சொலவல வேதஞ் சொலவல கீதஞ் சொல்லுங்காற்,
சிலவலபோலும்" (குறிஞ்சி - திருச்சிராப்பள்ளி - 8) என்று
ஆளுடைய பிள்ளையார் அருளியபடி சொல்லத்தக்க கீதத்தினையே
சொல்லுதல் வேண்டும். இங்குச் சராசரங்களை இசை மயமாக்கி
யுருக்கியதும், ஆனாய நாயனாரைச் சிவபெருமானின் திருமுன்பு
எப்போதும் வாசித்துக்கொண்டேயிருக்கப் பண்ணினதும் இசையின்
உள்ளுறையாகிய திருவைந்தெழுத்தேயாகும். நோய் போக்கி உயிர்
காக்கும் மருந்துக்குமேல் இனிய கட்டி பூசி உண்பிப்பதுபோலப்,
பிறவிநோய் நீக்கி உயிருக்கு மீளா இன்பந் தரவல்ல ஆதி
மந்திரமாகிய சீபஞ்சாக்கரத்தினை உயிர்கள் இன்பமாய்ப் பருகுதற்கு,
இசை, மேற்பொதியும் கட்டிபோல உதவியதேயன்றிப் பிறிதில்லை
என்க.
உள்ளுறை
- நெல்லினுள் அரிசிபோல, உள்ளே உறுகின்ற
உண்மைப் பொருள்.
அஞ்செழுத்து
- சீபஞ்சாக்கர மகாமந்திரம். மந்திரங்களுக்
கெல்லாம் மூலமாகிய மந்திரம். "ஆதி மந்திர மஞ்செழுத்தோதுவார்
நோக்கு, மாதி ரத்தினும் மற்றை மந்திரவிதி வருமே?" (திருஞான -
புரா - 698) என்றது காண்க. "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,
யோது வார்தமை நன்னெறிக் குய்ப்பது" (ஆளுடைய பிள்ளை -
கவுசிகம் நமச்சிவாயத் திருப்பதிகம் 1), "துஞ்சலுந் துஞ்சலிலாத
போழ்தினும், நெஞ்சக நைந்து நினைமி னாடொறும், வஞ்சக மற்றபடி
வாழ்த்த வந்தகூற், றஞ்ச வுதைத்தன வஞ்செழுத்துமே" (மேற்படி
காந்தாரம் - பஞ்சாக்கரப் பதிகம் - 1); "கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினு, நற்றுணையாவது நமச்சிவாயவே" (அப்பர் -
காந்தாரபஞ்சமம் - நமச்சிவாயப்பதிகம் - 1), "பண்ணிய வுலகினிற்
பயின்றபாவத்தை, நண்ணிநின் றறுப்பது நமச்சிவாயவே" (மேற்படி 3),
"நன்னெறி யாவது நமச்சி வாயவே" (மேற்படி 9); "உனைநான்
மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே" (ஆளு - நம்பிகள் -
பழம்பஞ் - 1) என்பனவாதி திருவாக்குக்களால், இதனை ஓதும்
முறையும் பயனும் நமதுபரமாசாரியர்களால் வற்புறுத்தி யருளப்
பட்டமை காண்க. இன்னும் இதுபற்றி "விதி எண்ணுமஞ் செழுத்தே"
(9-ம் சூத்) என்ற சிவஞானபோதத்தினுள்ளும், உண்மை விளக்கம்,
சிவப்பிரகாசம், திருவருட்பயன், கொடிக்கவி முதலிய ஏனைய
மெய்கண்ட சாத்திரங்களுள்ளும், திருமூலர்திருமந்திரத்தினும்,
சிவாகமங்களினும் கண்டுகொள்க. இவை குருமரபின் அறிந்த
அனுபவமுடைய ஞானதேசிகர்பால் கேட்டு அறிந்து
உணர்ந்துகொள்ளத்தக்கன.
"இறவாதே வரம்பெற்றே
னென்று மிக்க விராவணனை யிருபது
தோணெரிய வூன்றி, யுறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டே
யுற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை" என்ற திருநள்ளாற்றுத்
திருத்தாண்ட கத்தாலும், "இலங்கையர் கோனைத் துலங்க
மால்வரைத் கீழடர்த் திட்டுக், குறிகொள் பாடலின் இன்னிசை
கேட்டுக் கோல வாளொடு நாளது கொடுத்த, செறிவு" (தக்கேசி -
புன்கூர் - 9) என்ற நம்பிகள் தேவாரத்தாலும், பிறவாற்றாலு
மறியப்படுகின்றபடி கழுவாயில்லாத சிவாபராதமாகிய பெருந்தீமை
தானும் சிவநாம இசையினாற்றீர்க்கப்படுவதென்றால் இந்தத்
திருவைந்தெழுத்தினின்னிசை என்னதான் செய்யாது? இதுபற்றி
யன்றே "நாளுமின்னிசை யாற்றமிழ் பரப்பு
ஞான சம்பந்தர்"
என்று இத்தன்மைபற்றி ஆளுடையபிள்ளையாரை ஆளுடைநம்பிகள்
துதித்தருளினர். (தமிழ் - சிவனுக்கு ஆட்படுத்தும் தமிழ்.)
தேன்
தெள் அமுதினுடன் கலந்து - என்பதற்குப்
பொருந்த, ஒழுகி என்றும், மதுர
ஒலி என்றும், வெள்ளம் என்றும்
நாவின் சுவைப்புலனாகிய உருசி யின்பம் படக் கூறினார். ஒழுகி
எழும் - முயற்சியானன்றி இயற்கையாய் ஒழுகி என்க.
ஒலி
வெள்ளம் - முன்னர்ப் பரப்பினார் (953) என்றதனால்
அவ்வாறு ஒலி அலைகளாகப் பரப்பப்பட்ட இசை, நீரின் அலைகள்
பரம்பரையிற் பரவிப் பெருகுதல்போல மேலும் மேலும் பெருகியது
என்பதாம்.
அமரர்தரு
- கற்பக மரம். தருவிளைதேன் -
கற்பக
மலர்களின் விளைந்து எடுக்கப்பட்டதேன். தருவின் பூவில் விளை
எனற்பாலது தருவிளை என்று ஆகுபெயராற் கூறப்பட்டது.
தேன்
தாவரங்களின் விளைவுகளுள் ஒன்றென்பது கூறப்பட்டதுடன்
ஒவ்வோர்வகை மரஞ்செடிகளின் விளையும் தேன்
அவ்வத்தாவரங்களின் குணமுடையதாகும் நிலையும் குறிக்கப்பட்டது.
வேம்புத்தேன் மருந்து வகையுட்சிறந்த குணமுடையதா
யெடுக்கப்பட்டதும், பிறவும் காண்க. மேல் - மேலுலகிலுள்ள
- மேலாகிய என்றலுமாம்.
செவி
வார்ப்பது - செவியின்வழி வார்ப்பது. "மறித்தெஞ்
செவியமுதாய் வார்த்தபிரான்" என்ற நால்வர் நான்மணிமாலை
இப்பொருள் பற்றியது.