956.



ஆடுமயி லினங்களுமங் கசைவயர்ந்து மருங்கணுக,
வூடுசெவி யிசைநிறைந்த வுள்ளமொடு புள்ளினமு
மாடுபடிந் துணர்வொழிய, மருங்குதொழில்
                            புரிந்தொழுகுங்
கூடியவன் கோவலருங் குறைவினையின்
                          
றுறைநின்றார்.  31

    956. (இ-ள்.) வெளிப்படை. ஆடுகின்ற மயிற் கூட்டங்களும்
அசைவின்றி அங்குப் பக்கத்தில் வந்து அணையவும், காதுகளின்
வழியே சென்ற இசை நிறைந்த உள்ளத்தினோடு பறவைக்
கூட்டங்களும் பக்கத்திற் படிந்துவந்து தம் முணர்வு நீங்கவும்,
மருங்கே ஏவல்புரிந்து ஒழுகும் கூட்டமாகிய வலியகோவலர்களும்
தாம் செய்த ஏவற்றொழில்களை முற்றச்செய்யாது இசைகேட்ட
அம்மட்டிற் குறையாக விடுத்து நின்றனர். 31

     956. (வி-ரை.) ஆடும் மயிலினங்கள் - கார்கண்டபோது
ஆடுதல் மயிலினங்களின் இயல்பு. ஏனைக் காலத்தும் காலையிலும்
மாலையிலும் களிப்பு மிகுதியால் ஆடுவதும் இவற்றினதியல்பாம்.
"ஆடும் மயில்கள் கூவுங் குயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை,ழு
"வண்டுபாட மயிலால........நீலமொட்டலரும் கேதாரம்" (1) (செவ்வழி.)
"வரைசேர் முகில் முழவ மயில்கள் பல நடமாட" (மேகராகக் குறி.)
என்று இவற்றினியல்பை ஆளுடைய பிள்ளையார் அருளியது
காண்க.

     அசைவயர்ந்து வந்து அணைய - மயில்கள் ஆடுதல்
தோகையை விரித்தும் ஒருவகை அசைவுடனும் கூடியுள்ளது. அந்த
அசைவினையும் விட்டு என்க. மயில்கள் தாமாக ஆடுதற்கேதுவாகிய
மகிழ்ச்சியின் மிக்கதோர் மகிழ்ச்சியை இந்த இசை வெள்ளத்தாற்
பெற்றனவாதலின் தமது ஆடலை விட்டு இசையின் வசமா
யீர்க்கப்பட்டு இங்கு வந்தணைந்தன என்பது.

     செவியூடுபுக்க இசை என்க. ஊடு........புள்ளினமும் -
இசை உள்ளத்தில் நிறைதற்கான வழியைக் கூறியபடி.
தோற்செவியுடையன, துளைச்செவியுடையன
என்று பிராணிகள்
இரண்டுவகைப்படும். முட்டையிற்பிறப்பனவாகிய புள்ளினம் துளைச்
செவியுடையன என்பர். அவ்வாறு உள்ள துளைகளாகிய செவியூடு
என்ற படியாம். ஆடும் மயில்கள் ஆடும்போது உண்மகிழ்வு
நிறைவன; ஏனைக் கிளி, குயில் முதலிய புள்ளினங்கள் எப்போதும்
இணைபிரியாது பாடிமகிழ்ந்து பறந்து திரிவன. இப்படி மகிழ்வு
நிறைந்த உள்ளமுடைய புள்ளினம் வெளியே நின்றும் செவியூடுபுக்கு
நிறைந்த இசையுள்ளத்தினோடு என விரித்துரைத்துக்கொள்க.
புள்ளினத்தின்மகிழ்வு நிறைவாந்தன்மைபற்றியே திருத்தோணிபுரம்
(பண் - பழந்தக்கராகம்) தேவராத்தினுள் "பெடையினொடு
மொண்டரங்க விசைபாடு மளியரசே" என்பது முதலாகப் பதிக
முழுதும் இப்புள்ளினங்களை விளித்து ஆளுடையபிள்ளையார்
அருளியதும் இவ்வாறே திருவாரூர் (பண் - கொல்லி) "குருகுபாய"
என்ற திருப்பதிகத்தினுள் "பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம்
பூவைகாள்" என்பது முதலாகப் பதிகமுழுதும் புள்ளினங்களை
விரித்து ஆளுடைய நம்பிகள் அருளியதும் இங்கு உன்னுக. 3

     மாடு படிந்து உணர்வு ஒழிய - மாடு படிதல் - தாம்
பறந்தும் இருந்தும் உள்ள உயர்ந்த இடங்களினின்றும் ஆனாயர்
குழலிசைக்கும் பக்கத்தே இறங்கியிருத்தல். உணர்வு ஒழிதல் -
தம்முணர்வு மறத்தல் - மனிதர் கையிற் படாது தம் வயமாய்ப்
பறந்து வாழும் இவை, தற்காப்பையும் மறந்து மனிதர் கையகப்பட்டுக்
கொள்ளும் அளவில் படிந்து இருந்தன என்க.

     தொழில் புரிந்து....கோவலர் - முன்னர்க், "கோவல ரேவல்
புரிந்திட" (937) "வினை செய்யும் காவல்புரி வல்லாயர்" (943),
"எடுத்தகோ லுடைப் பொதுவர் தம்மருங்கு தொழுதணைய" (945)
என்று கூறப்பட்ட இடையர்கள். இவர்கள் தமது தலைவராகிய
ஆனாயரின் சொல்வழி, ஆனிரை, விடைக்குலம், கன்றினம்
என்பவற்றைத் தகுதிபெற வெவ்வேறாக வேறு வேறிடங்களிற்
கொண்டுய்த்து மேய்த்துக் காவல் புரிபவர்.

     குறைவினையின் துறை நின்றார் என்றது தலைவர் ஏவியபடி
தொழில் புரிந்த இவர்கள் அத்தொழில்களின் இடையில்
குழலிசையில் ஈடுபட்டவர்களாய் அத்தொழில்களைக் குறைபட
நிறுத்தி மருங்குவந்து நின்றனர் என்பதாம். குறைவினையின் துறை
- செய்தொழில் முற்றுப்பெறாத நிலையில் இவர்கள் மேய்த்த
ஆனினங்கள் மேய்தலை விட்டு வந்தணைந்தமையானும் இவர்களது
தொழில் குறைவினையாய் நின்றதும் காண்க.

     கூடியவண் - என்பதும் பாடம். 31