957.



பணிபுவனங் களிலுள்ளார் பயில்பிலங்கள்
                           வழியணைந்தார்;
மணிவரைவா ழரமகளிர் மருங்குமயங்
                            கினர்மலிந்தார்;
தணிவிலொளி விஞ்சையர்கள் சாரணர்கின்
                               னரரமரர்
அணிவிசும்பி லயர்வெய்தி விமானங்கண்
                         
மிசையணைந்தார். 32

     (இ-ள்.) வெளிப்படை. நாகருலகங்களிலுள்ளவர்கள் தாம்
முன்பு வந்து பழகிய பாதலப்பிலங்களின் வழியாய் இங்கு வந்து
அணைந்தார்கள்; அழகிய மலைகளில் வாழும் தெய்வ மகளிர்கள்
இசையால் மயங்கினர்களாகி அம்மருங்கு வந்து மலிந்தனர்;
குறையாத ஒளியுடைய விஞ்சையர்களும், சாரணர்களும்,
கின்னரர்களும், தேவர்களும் தாந்தாம் வாழும் அழகிய ஆகாய
நிலைகளிலிருந்து இசைவயப்பட்டவர்களாய்த் தம்மை மறந்து
விமானங்களில் வந்து அணைந்தார்கள்.

     (வி-ரை.) பணி - பாம்பு. பணிபுவனம் - அத்தெய்வப்
பகுதியினர் வாழும் உலகம். இது பாதலம் - கீழுலகம் - நாகருலகம்
எனவும் வழங்கப்படும்.

     பயில் பிலங்கள் - பயிலுதல் இங்கு மேலேறி வந்து
பழகுதல் குறித்தது. பயில் பிலம் - (அவ்வாறு) பழகிய வழிகள்.
நிலத்தின் கீழே உள்ளனவாகக் கருதப் உலகங்களிலிருந்து மேலே
நிலவுலகத்துக்கு வரும் வழிகளைப் பிலத்துவாரங்கள் என்பது
வழக்கு. காஞ்சிபுரத்தில் பதுமமாநாகம் உறையும் பிலத்தினிடைக்
காமாட்சியம்மையார் எழுந்தருளியிருந்து சிவபெருமானைப் பூசித்துத்
தவஞ்செய்த சரிதம் "அடிய னேனுறை பிலமத னிடையே, மன்னு
கோயில் கொண் டருளுவாய்" (55) என்ற திருக்குறிப்புத்
தொண்டநாயனார் புராணத்துட் காண்க.

     மணி வரைவாழ் அரமகளிர் - மணி - மணிகளையுடைய
என்றலுமாம். அரமகளிர் - ஓர் தெய்வச்சாதி மகளிர். மலைகளில்
வாழ்பவர். 688 பார்க்க.

     மயங்கினர் - மயங்கினராகி. முற்றெச்சம். மலைகளை
யிடமாகக்கொண்டு வாழ்பவர் அங்கு நின்றும் கீழிறங்கி முல்லை
உடுத்த இம்மருங்கில் வருதற்குக் காரணம் கூறியவாறு. மலிதல் -
கூட்டமாக நிறைதல்.

     தணிவில் ஒளி........அமரர் - விஞ்சையர் - வித்தியாதரர்.
விஞ்சை - வித்தை. சாரணர் - இயக்கர். பதினெண்வகைத்
தேவகணத்தவர்களுள் ஒரு சாரார். கின்னரர் - இசைவல்ல
தேவகணங்களுள் ஒருவகையினர். அமரர் - தேவகணத்தொரு
வகை. இந்த நான்கு வகையினரும் தேவகணங்கள். (திவ் - ஒளி.
தேவர் - ஒளியுடைய உடம்புடையவர்கள்). உடம்பின் இயல்பாகிய
ஒளியாதலின் தணிவில் ஒளி என்றார். தணிவில் ஒளிஎன்பதனை
இந்நான்கு வகுப்பினருடனும் சேர்த்துக. தேவகணங்களில்
இசைவல்லோரும் ஆனாயர் குழலிசையின் மயங்கித் தம்மை மறந்து
விமானங்களில் வந்து இறங்கினர் என்பது. இசையோர்க்கும் சிறப்புப்
பற்றி நாகரை முன்கூறினர்.

     பணி புவனம் - பாதலம்; மணிவரை - நிலவுலகம்; அணி
விசும்பு
- விண்ணுலகம்; இதனால் கீழ் - நடு - மேல் என்ற
மூவுலகத்துள்ள தேவச்சாதியாரும் இவரது இசையின் மயங்கி
யணைந்தமை கூறப்பட்டது. 284-ல் உரைத்தவை பார்க்க. "பாரார்
விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார்" (திருவம்மானை - 2) என்ற
திருவாசகமும் காண்க. 32