958.



சுரமகளிர் கற்பகப்பூஞ் சோலைகளின் மருங்கிருந்து
கரமலரி னமுதூட்டுங் கனிவாய்மென் கிள்ளையுடன்
விரவுநறுங் குழலலைய விமானங்கள் விரைந்தேறிப்
பரவியவே ழிசையமுதஞ் செவிமடுத்துப்
                              பருகினார். 
33

     (இ-ள்.) வெளிப்படை. தேவமகளிர்கள் கற்பகப்
பூஞ்சோலைகளின் பக்கத்திலிருந்து மலர்போன்ற தமது கைகளால்
அமுதூட்டும் கனி பொருந்திய வாயினையுடைய மெல்லிய
கிளிகளுடனே தமது கூந்தல் அலையும்படி தத்தம் விமானங்களில்
விரைவாக ஏறிவந்து பரவிய ஏழிசை யமுதத்தினைப் பருகினார்கள்.

     (வி-ரை.) சுரமகளிர் - விண்ணுலகத்திலுள்ள தேவ மாதர்கள்.

     கற்பகப்பூ.........கிள்ளையுடன் - நறிய கற்பகப்
பூஞ்சோலைகளில் அமர்ந்து தமது கைமலர்களால் ஊட்டி
வளர்க்கின்ற கனிகளை உண்ணும் வாயினையுடைய கிளிகளுடனே.
"சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால், முறையாலே
யுணத்தருவன்" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் காண்க.
தேனும் பாலும் கனிகளும் முதலியவற்றைத் தாமே தம் கையில்
வைத்து ஊட்டிக், கிளி பூவை முதலியவற்றை வளர்த்தல் மகளிர்
இயல்புகளுள் ஒன்று என்பது பழைய வழக்காலும் நூல்களாலும்
அறியப்படும் உண்மை. "பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்தா
ளென்னைப் புல்லிக்கொண்டு, பாவைதந் தாள்பைங்
கிளியளித்தாளின்றென் பைந்தொடியே" (குறிப்புரைத்தல் - 200),
"என்னனை போயினள் யாண்டைய ளென்னைப் பருந்தடுமென்,
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென் னுள்ளத்தை யீர்கின்றதே"
(கிளிமொழிக்கிரங்கல் - 231) என்ற திருக்கோவையாரானும்,
பிறவாற்றானும் அறிக. ஆயின் இவ்வகை அன்பு வழக்குக்களெல்லா
மொழிந்து துன்ப வன்பு வழக்குக்கள் பலவும் மகளிர் போது
போக்கும் தொழில்களாகக் காணப்படுவது இக்காலக்
கொடுமைகளுள் ஒன்று.

     கற்பகப் பூஞ்சோலை மருங்கிருத்தல் - அம்மகளிர்
தமக்கும், தாம் வளர்த்தூட்டும் கிளிகளுக்கும் இன்பந் தருதற்குத்
தக்க இடமாகக் கொண்டமை காட்டிற்று. கரமலரின் - மலர்போன்ற
கைகளால். முன்பின்னாகத் தொக்க உவமத்தொகை. மெய்யும்
உருவும்பற்றிவந்த உவமை. இன் - கருவிப் பொருள்களில் வரும்
மூன்றனுருபின் வந்தது. உருபு மயக்கம். கரமாகிய மலரின்; உருவகம்
என்றலுமாம்.

     அமுதூட்டும் கனிவாய் - கிளிகளுக்குக் கனிகளை
ஊட்டுவதும், அவை அந்தக் கனிகளைத் தம்வாயாற்
பற்றிக்கொள்ளுதலும் இயல்பு. கொவ்வைக்கனிபோன்ற வாய்
என்றுரைப்பினுமாம்.

     மென்கிள்ளை - சிறிய பறவையாதலானும், பேச்சும் இயலும்
மென்மையுடையனவாதலானும் மென்கிள்ளை என்றார். விண் மாதர்
கிள்ளைகளுடன் வந்தனர் என்க. நறிய கற்பகப் பூஞ்சோலையின்
நறுநீழலில் அமர்ந்து மென்கிளிகளை அமுதூட்டி அவற்றின் இனிய
மொழி கேட்டு மகிழ்ந்த இன்பத்தினும் மேலாய் இக்குழலிசையினை
விரும்பி வந்தனர் என்பதாம்.

     குழல் அலைதல் - வருகையின் விரைவினால் ஆகியது.
"விரைந்தேறி" என்றது காண்க.

     விரைவு - இசையின் வசப்பட்டு அதனைப் பருகும் ஆர்வங்
குறித்தது. "வாரிசையு முலைமடவார் மாளிகையின் சூளிகைமேல்
மகப்பா ராட்டக், காரிசையும் விசும் பியங்குங் கணங்கேட்டு
மகிழ்வெய்துங் கழுமலமே" (4), "பண்ணமரு மென்மொழியார்
பாலகரைப் பாராட்டு மோசை கேட்டு, விண்ணவர்கள் வியப்பெய்தி
விமானத்தோ டும்மிழியும் மிழலை யாமே" (பண் மேகராகக் குறிஞ்சி
10) என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரங்கள் இங்கு நினைவு
கூர்தற்பாலன. மண்ணினல்லோர் பரவிய ஏழிசை இறைவனது புகழை
உள்ளுறையாகக் கொண்டிருந்தமையானும் இவை தேவருலகத்துக்
கேட்கப்படுதலில்லை யாகலானும் விண்ணவரும் இவற்றின் வயப்பட்டு
இங்கு வருதல் இயல்பென்க.

     பரவிய - சிவபெருமானது திருவைந்தெழுத்தை உட்கொண்டு
பரவிய. மண்ணுலகமேயன்றிப் பாதலமும் விண்ணுலகமும் பரவிய
என்றலுமாம். "எம்மருங்கும் பரப்பினார்" (953), "வையந்தன்
னையுநிறைத்து வானுந்தன் வயமாக்கி" (962) என்பவை காண்க.

     விரவநறுங் - என்பதும் பாடம். 33