959.
|
நலிவாரு
மெலிவாரு முணர்வொன்றாய் நயத்தலினான்,
மலிவாய்வெள் ளெயிற்றரவ மயின்மீது மருண்டுவிழுஞ்;
சலியாத நிலையரியுந் தடங்கரியு முடன்சாரும்;
புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும். 34 |
(இ-ள்.)
நலிவாரும்.......நயத்தினால் - வருந்தச்
செய்கின்றவர்களும் அதனால் வருந்துகின்றவர்களும் கொண்ட
உணர்ச்சி ஒன்றாக நயப்பாடு உற்றமையினால்; மலிவாய்.......விழும் -
வாயில் மலியும் வெள்ளிய பற்களையுடைய பாம்பு இசையான்
மருட்சியடைந்து (தன் பகையாகிய) மயிலின்மேல் விழும்;
சலியாத.....சாரும் - சலித்தலில்லாத நிலையினையுடைய சிங்கமும்
பெரிய யானையினுடன் சார்ந்து வரும்; புலி வாயின் புல்வாய
புல்வாயும் புலியினது வாயின் பக்கத்தில் புல்லைவாயிற்கொண்ட
மானும் அணையும்.
(வி-ரை.)
நலிவார் - நலியச் செய்பவர் - துன்பம்
விளைவிப்பவர். நலிவிப்பார் எனப் பிறவினையாகக் கொள்க.
மெலிவார் - மெலியப்படுவோர். துன்பம்
செயப்படுவோர்.
செயப்பாட்டு வினைமுறையே விவ் விகுதியும் படு விகுதியும்
தொக்கன; உணர்ச்சி வேற்றுமை நீங்கியது குறித்தற்கு. (விகிருதி -
வேறுபாடு)
உணர்வு
ஒன்றாய் நயத்தலாவது - ‘நாம் வலியோம் - இது
வலியிலது - இது நமக்கு இரையாவது - இதனைக் கொல்வோம்'
என்றும், ‘நான் வலியில்லேன் - இதற்கு நான் இரையாவேன் - இது
என்னைக் கொல்லும்' என்றும் இருபாலிலும் பகை உறவு என்ற
தமது இயல்பாகிய உணர்ச்சி மறந்து, உள்ளத்தில் இசை நிறைதலால்
இருபாலிலும் இசை ஒன்றேயாகிய ஓருணர்வுடையனவாகுதல்.
ஒன்றற்கொன்று பகையாகிய பாம்பும் மயிலும், அரியும் கரியும்,
புலியும் மானும் உடன்சார்தற்குரிய காரணத்தை விளக்கிக்
காட்டியவாறு. இவ்வியல்பு எங்கும் கண்கூடாகக் காணத்தக்கது.
மாணிக்கவாசகசுவாமிகள் தில்லைவனத்தில் சிவயோகம் பயின்று
தவஞ் செய்திருந்தபோது பிராணிகள் வந்து அவரிடம் கூடின என்று
"மானிரையுங் குயவரியும் வந்தொருங்கு நின்றுரிஞ்ச மயங்கு கானத்,
தானிரைகன் றெனவிரங்கி மோந்து நக்க வானந்த வருட்கண்
ணீரைக், கானிரைபுள் ளினம் பருக" (திருவிளை - புரா - மண் -
பட - 96) எனக் கூறியதும் இக்கருத்தே பற்றியது.
வாய்மலி
வெள் எயிறு என்க. பாம்பின் வாயினுட் பல
பற்கள் உண்டு. அவற்றுள் நான்கு, விடத்தினை உகுக்கும்
குழாய்போன்ற உள் துளையுடைய வெள்ளிய கூரிய பற்கள்1
"தூம்புடைவால் எயிற்று அரவு" (திருமுருகாற்றுப்படை).
அரவமும்
மயிலும் - பகைமைபூண்ட பிராணிகள். மயில்
பாம்பினைக் காணிற் கொத்திக் கிழித்துக் கொன்றுவிடும். "மஞ்ஞை
குஞ்சரங் கோளிழைக்கும், பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கு"
என்பது திருக்கோவையார் (21).
சலியாத
நிலை அரி - காட்டு விலங்கினங்களுக்கெல்லாம்
தலைமை பூண்ட சிங்கம். அதனது அசைவில்லா வீரத்தைக் குறிக்கச்
சலியாத நிலை என்றார்.
புல்வாய
- புல்லைவாயிலே யுடையனவாகிய - புல் மேய்ந்து
- கொண்டிருந்த - மான்கள் மேலும் மேய்ந்து வயிறு நிறைத்துக்
கொள்வதனை விடுத்து அந்நிலையிற் சில புல்லை வாயிற்
கொண்டபடியே என்றதாம். "பானுரைவாய்த் தாய்முலையிற்
பற்றுமிளங் கன்றினமும்" (955) என்றது காண்க. "செவிக்குண
வில்லாத போழ்து சிறிது, வயிற்றுக்கு மீயப் படும்" (குறள்) என்ற
உண்மை இவ்விலங்கினங்களாலும் விளக்கப்பட்டது போலும்.
புல்வாய் - சிறிய வாயினையுடைய என்பாருமுண்டு.
34
1இதுபற்றி
எனது "சேக்கிழார்" 100 - 104 பக்கங்கள் பார்க்க.
|